தீவிரமடையும் திருப்பதி லட்டு விவகாரம்; தேவஸ்தானம் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் கூறுவது என்ன?

திருப்பதி லட்டு உலகம் முழுக்க பிரசித்தி பெற்ற ஒன்றாகும், வெகுஜன மக்களால் புனித பிரசாதமாக கருதப்படும் இந்த லட்டுவில் விலங்குக் கொழுப்பு கலந்திருப்பது தற்போது ஆய்வில் உறுதியாகியுள்ளதாக தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அரசியல் கட்சித் தலைவர்கள் கூறுவது என்ன?

இந்திய பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் திரு ராகுல் காந்தி தனது x பக்கத்தில், இந்த செய்தி மிகுந்த கவலை அளிப்பதாகவும், இது இந்தியா மற்றும் உலகளவில் உள்ள ஒவ்வொரு பெருமாள் பக்தரையும் காயப்படுத்தும் என்றும், நமது மதத் தலங்களின் புனிதத்தை பாதுகாக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

ஆந்திர முதல்வர் திரு சந்திர பாபு “கோடி கணக்கான மக்களால் புனிதமாக கருதப்படும், திருமலை லட்டு இப்படி தீட்டுப்படும் என்று யாரும் கருதவில்லை, இந்த தவறை செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள், மீண்டும் புனிதத் தன்மையோடு லட்டு தயார் செய்து பக்தர்களுக்கு வழங்கப்படும்” என்று செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, சந்திர பாபுவின் தெலுங்கு தேசம் கட்சி, மத விவகாரங்களில் அரசியல் செய்து வருவதாகவும், இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதவுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், இந்தியாவில் கோவில் தொடர்பான அனைத்து விவகாரங்களையும் விசாரிக்க சனாதன தர்ம ரக்ஷனா வாரியம் ஒன்றை அமைக்கும் நேரம் வந்துவிட்டதாக கூறியிருந்தார்.

தேவஸ்தானம் சார்பில்?

தற்போதைய தேவஸ்தான அதிகாரி ஷ்யாமளா ராவ் என்பவர், இந்த சம்பவம் தொடர்பாக நெய்யை பரிசோதனைக்காக குஜராத்தில் உள்ள NDP ஆய்வகத்திற்கு அனுப்பினோம், அதில் நெய்யின் தரம் 100% பதிலாக 20% மட்டுமே உள்ளது கண்டறியப்பட்டது இந்த தரமற்ற நெய்யை விநியோகம் செய்த ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், எதிர்காலத்தில் இதுபோல் நடக்கக்கூடாது என்பதே எங்கள் விருப்பம் என்று தெரிவித்தார்.

முன்னாள் அறங்காவலர் குழுவின் தலைவர் கருணாகர் என்பவர்  “கோவிலில் புனித நீராடி, நான் தலைவராக இருந்த போது விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டிருந்தால், எனது குடும்பமே அழிந்து போகட்டும்” என்று கற்பூரம் அனைத்து சத்தியம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைமை அர்ச்சகரான ரமணத்தீட்சதலு இது குறித்தான செய்தியாளர் சந்திப்பில் “ஐந்து ஆண்டுகளாக லட்டில், மாட்டின் கொழுப்பை கலந்து மகா பாவம் செய்து விட்டனர்” என்று தனது ஆதங்கத்தை தெரிவித்திருந்தார்.

தேவஸ்தானம் சார்பில் செப்.23 அன்று லட்டில் மாட்டு கொழுப்பு கலந்த தீட்டு நீங்க, ஆலயத்தில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டு புனித நீர் தெளிக்கப்பட்டது , மேலும் அன்று மாலை 6 மணிக்கு பக்தர்கள் தங்கள் வீடுகளில் விளக்கு ஏற்றவும் வேண்டுகோள் விடப்பட்டது.

தமிழக அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்து என்ன?

தமிழக பாஜக சார்பாக மாநில பொதுச் செயலாளர் தமிழிசை சௌந்தரராஜன் “இது மிக மிக கவலை அளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது, மக்களின் உணர்வை இது பெரிதும் பாதித்துள்ளது, இவை தடுக்கப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” என்று அவர் கூறியிருந்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன்  “திருப்பதி லட்டுவில் மட்டும் அல்ல, பெரும்பாலான இனிப்பு அல்லது உணவு பொருட்களில் விலங்கு கொழுப்புகள் பயன்படுத்துவது வழக்கமே, இதனை அரசியலாக்குவது ஏன் என்று தெரியவில்லை” என்று கருத்து கூறியிருந்தார்.

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் “திருப்பதி லட்டு சாப்டவங்க உயிரோட தான இருக்காங்க? இது ஒரு மிகப்பெரும் பிரச்சனை இல்லை, முக்கிய பிரச்சனைகளை கவனத்தில் கொள்ளுங்கள்” என்று தனது கருத்துகளை செய்தியாளர்களிடம் பதிவு செய்தார்.