நோல் கார்டின் குறைந்தபட்ச டாப்-அப் தொகை AED 50 ஆக உயர்வு!

நோல் கார்டு (Nol Card) என்பது துபாய் முழுவதும் உள்ள பொது போக்குவரத்தில் பயன்படுத்தப்படும், ஒரு முன்பணம் செலுத்தும் ஸ்மார்ட் கார்டாகும். துபாய் மெட்ரோ, பேருந்து, டிராம், தண்ணீர் பேருந்து மற்றும் டாக்சிக்கு இந்த கார்டை பயன்படுத்தி டிக்கெட் கட்டணத்தை செலுத்திக்கொள்ள முடியும். அதுமட்டுமின்றி, பார்க்கிங், துபாய் பொது பூங்காக்கள், எதிஹாத் அருங்காட்சியகம் மற்றும் நகரம் முழுவதும் உள்ள 2,000-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும்  உணவகங்களில் கட்டணங்களை செலுத்தவும் பயன்படுத்தலாம். 

ஆகஸ்ட் 17, 2024 முதல், துபாயில் உள்ள அனைத்து மெட்ரோ நிலைய டிக்கெட் அலுவலகங்களிலும் நோல் கார்டின் குறைந்தபட்ச டாப்-அப் தொகை AED 50 ஆக அதிகரிக்கப்படும் என்று துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தனது X பக்கத்தில் அறிவித்தது. இருப்பினும், இணைய வழியாக நோல் கார்டுகளை டாப்-அப் செய்யும் பயணிகளுக்கு இது பொருந்தாது எனவும் RTA விளக்கமளித்துள்ளது.

இதற்குமுன்பு, கடந்த ஜனவரி மாதத்தில், நோல் கார்டின் குறைந்தபட்ச டாப்-அப் தொகை AED 5-லிருந்து AED 20 ஆக RTA உயர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது, இந்த நோல் கார்டை பயன்படுத்தி மெட்ரோ போக்குவரத்தில் இரு வழி பயணத்தை (Metro transit network) பயன்படுத்த குறைந்தபட்சமாக AED 15 இருப்பு இருக்க வேண்டும் என்று தெளிவுபடுத்தியுள்ளது RTA.