நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா ‘ஓஹோ எந்தன் பேபி’ என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகமாகி உள்ளார். இதில் பாலிவுட் நடிகை மிதிலா பால்கர் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இவர்களுடன் கருணாகரன், அஞ்சு குரியன், விஷ்ணு விஷால், மிஷ்கின் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்த படத்தினை விளம்பரப் பட இயக்குநரும், குணச்சித்திர நடிகருமான கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தை விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ், ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் டி-கம்பெனி இணைந்து தயாரித்துள்ளன. இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஓ.டி.டி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
டிரைலர் வெளியீட்டு விழா கடந்த ஜூன் 28 அன்று சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கார்த்தி, வெற்றிமாறன் என திரைத்துறையை சேர்ந்த பலரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த நிலையில், ‘ஓஹோ எந்தன் பேபி’ திரைப்படம் வருகிற ஜூலை 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
துபாயில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு:
இதனையொட்டி ஜூலை 2 அன்று துபாய் அல் குரைர் சென்டர், ஸ்டார் சினிமாஸில் இரவு 7 மணிக்கு படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் நடிகர்கள் விஷ்ணு விஷால், ருத்ரா, கருணாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஹோம் ஸ்கிரீன் என்டர்டெயின்மென்ட் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் அமீரகத்தில் உள்ள தமிழ், மலையாள ஊடகங்களின் பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு நடிகர்கள் பதிலளித்தனர்.
அப்போது நடிகர் விஷ்ணு விஷால், ஓஹோ எந்தன் பேபி திரைப்படம் அனைவருக்கும் பிடித்த காதல் படமாக இருக்கும் என கூறினார். மேலும், தற்போது இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் ’இரண்டு வானம்’ எனும் படத்தில் நடித்து வருவதாகவும், அடுத்த வருடம் ராட்சசன் 2 பட படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
