உலக நாடுகள் ஆச்சரியப்படும்.. ஷார்ஜா மைதானத்தின் சுவாரசிய கதை!

உலகளவில் அதிக சர்வதேச போட்டிகளை நிகழ்த்திய மைதானமாக, ஷார்ஜா கிரிக்கெட் மைதானம் சமீபத்தில் உலக சாதனை படைத்தது, இங்கு நடைபெற்ற முக்கிய போட்டிகளையும் இந்த மைதானத்தின் சிறப்பம்சங்களையும் இந்த கட்டுரையில் காண்போம். 

மைதானத்தின் துவக்கம்:

1980 ஆம் ஆண்டில் ஷார்ஜாவை சேர்ந்த அப்துல் ரஹ்மான் புக்காதீர் என்பவர் தான் கிரிக்கெட்டின் மீது கொண்ட அதீத பிரியத்தால் ஷார்ஜா மைதானத்தைத் தொடங்கினார். அரச குடும்பத்தைச் சேர்ந்த புகாரிர், 1980 ஆண்டிலே இம்ரான் கான் மற்றும் சுனில் கவாஸ்கர் இருவரை வைத்து ஒரு தொடரை ஷார்ஜாவில் நடத்தி இருந்தார்.

முதல் சர்வதேச போட்டி:

1984 ஆம் ஆண்டில் ஆசியக் கோப்பையின் முதல் சீசனில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையேயான முதல் ஒரு நாள் போட்டி நடைபெற்றது. 1986 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா – ஆசியா கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் இந்திய அணி ஒரு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

பெப்சி ஷார்ஜா கோப்பை:

1996 ஆம் ஆண்டில் Pepsi Sharjah Cup ஒரு நாள் போட்டி தொடர் மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றது. இதில், தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் தேசிய கிரிக்கெட் அணிகள் இடம்பெற்றன. இந்த தொடரில்  இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான போட்டி த்ரில்லாக அமைந்தது. 

“Desert storm” சச்சின் டெண்டுல்கர்:

இதை அனைத்தையும் விட ஷார்ஜா என்றாலே பலரது மனம் நினைப்பது சச்சின் தான், அவரது ரசிகர்களுக்கு மனதை கவரும் பல ஆட்டங்கள் இந்த மைதானத்தில் அரங்கேறியுள்ளன.

ஏனென்றால், கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மைல்கல் ஆட்டமான 1998 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சச்சின் 143 ரன்கள் அடித்து ஆஸ்திரேலியாவை அலறவிட்டு பாலைவனப் புயலாக, இந்தியாவை வெற்றிப் பாதைக்குக் கொண்டு சென்ற அந்த போட்டி இன்று வரை ஷார்ஜாவில் நினைவுச் சின்னமாக வலம் வருகிறது .

இதுமட்டுமின்றி, சச்சின் டெண்டுல்கர் ஷார்ஜா மைதானத்திற்காக ஆடிய ஒவ்வொரு போட்டிகளுமே ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. ஷார்ஜாவில் அவர், 7 சதம், 7 அரை சதம், 1778 ரன்கள் என அடித்து ஷார்ஜாவை தனது ஃபேவரைட் மைதானமாகவே மாற்றினார். 

மேலும், 2023 ஆம் ஆண்டில் சச்சினின் 50வது பிறந்தநாளில் கௌரவிக்கும் விதமாக அவரது பெயரை ஷார்ஜாவின் கேலரியில் திறந்து வைக்கப்பட்டது. 

மைதானத்தின் சிறப்புகள்:

முக்கியமாக ஷார்ஜாவில் இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் என்றாலே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எகிறிவிடும். 17, 000 இருக்கைகள் கொண்ட ஷார்ஜாவில் 27,000 பேர் வரை அமர வைக்கு வசதிகளையும் கொண்டது. ஒவ்வொரு போட்டியிலுமே இருக்கைகள் நிரம்பும்  அளவிற்கு ரசிகர்கள் ஆர்ப்பரிப்பு இருக்கும். 

GCC  எல்இடி லைட்டிங் சிஸ்டம்களை நிறுவுவது இதுவே முதல் முறையாகும். மேலும், TMX தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இரவுப் போட்டிகளின் போது காட்சியை மேம்படுத்தி, 392 மெட்டல் ஹாலைடு ஃப்ளட்லைட்களுக்குப் பதிலாக 176 எல்இடி மின்விளக்குகள் எரிசக்தியைச் சேமிக்கிறது.

முக்கியமாக, இந்த மைதானம் T20 மற்றும் ODI போன்ற போட்டிகளில் ரன்களை குவிக்க முக்கிய மைதானமாகத் திகழ்கிறது.

2014, 2020 & 2021 ஆம் ஆண்டுகளில் பல இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளை நடத்தியது. முக்கியமாக 2021 கோவிட் லாக்டவுனில் ஐபிஎல் போட்டியை நடத்தியது ஷார்ஜா மைதானம். T10 போட்டிகளும் இங்கே நடைபெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தானிற்கு ஹேம் கிரவுண்ட் இல்லாத போது உதவியது ஷார்ஜா மைதானம். அதன்பின், அபுதாபி. பாகிஸ்தானுக்கு ஹேம் கிரவுண்ட் ஆக இருந்தது. மேலும், மைதானத்தில் வீரர்களுக்கு என பல சிறப்புகளை ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Khalaf Bukhatir வடிவமைத்துள்ளார். 
மைதானத்தில் வீரர்கள் ரிலாக்ஸ் செய்ய நீச்சல் குளம், ஜிம், பெரிய ஹோட்டல் போன்ற நவீன வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற எந்த நாட்டில் கிரிக்கெட் விளையாட முடியாத சூழல் இருந்தாலும், அந்த கிரிக்கெட் வாரியங்களுக்கு முதலில் நினைவிற்கு வருவது ஷார்ஜா என்றே கூற வேண்டும்.

வீரர்களின் சாதனைகள்:

2010 – 18 பிப்ரவரி மாதம்  அதிக ஒரு நாள் போட்டியை நடத்திய மைதானம் என்ற கின்னஸ் ரெக்கார்ட்டையும் படைத்தது. 

* டி20 தொடர்களில் அதிக ரன்கள் அடித்த வீரர்களில் ஆப்கானிஸ்தானின் புகழ்பெற்ற விக்கெட் கீப்பர் முகமது ஷாஜாத் 118* ரன்கள் அடித்தார். 

* பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் வீரர் சமியுல்லா ஷின்வாரி 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

* ஒரு நாள் போட்டியில் அதிக ரன்களில் சனத் ஜெயசூர்யா (இலங்கை) 189 குவித்தார். பந்துவீச்சில் முத்தையா முரளிதரன் 7 விக்கெட்களை வீழ்த்தினார்.

* டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் பட்டியலில் பிரன்டன் மெக்கல்லம் 202 (நியூசிலாந்து) பந்துவீச்சில் மார்க் கிரெய்க் 7 விக்கெட்களை வீழ்த்தினார்.

* பாகிஸ்தான் vs நியூசிலாந்து 364/7, குறைந்த பட்சம் இந்தியா 54-10 இலங்கை அணிக்கு எதிராக நடந்துள்ளது.

உலகின் முதல் மைதானமாக படைத்த சாதனைகள்:

முக்கியமாக 300 சர்வதேச கிரிக்கெட் போட்டியை நடத்திய உலகின் முதல் மைதானம் என்ற சாதனையை நவம்பர் 6 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் இடையேயான போட்டியின் போது நிகழ்ந்துள்ளது. 

இப்படி தனித்துவமான சாதனைக்குச் சொந்தமான ஷார்ஜாவில, இதுவரை 255 ஒரு நாள் போட்டிகளை நடத்திய முதல் மைதானமாகவும், 38 டி20 மற்றும் 10 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன.

மேலும் ஷார்ஜாவிற்கு அடுத்தபடியாக சிட்னி மைதானம் 291 போட்டிகளை நடத்தி இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள சிட்னி மைதானம் 1848 ஆம் ஆண்டில்  பிரிட்டிஷ் இராணுவத்தால் கட்டப்பட்டது. 

உலகின் மிகவும் பிரபலமான மைதானங்களில் ஒன்றாக திகழும் இந்த மைதானத்திற்குப் பல வரலாற்றுச் சிறப்புகள் உள்ளன. சிட்னிக்கும் ஷார்ஜா மைதானத்திற்கும் கடும் போட்டியே நிலவி வருகிறது.

இதற்கு அடுத்தபடியாக, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் 287, ஹராரே ஸ்போர்ட் கிளப் 267, லார்ட்ஸ் 227 என அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

எனவே, ஷார்ஜா மைதானம் இனி வரும் அடுத்தடுத்த ஆண்டுகளில் உலகம் முழுவதும் கிரிக்கெட் போட்டிகள் நடத்தும் முக்கியமான மைதானமாகவும், பல சாதனைகளையும் படைக்க காத்திருக்கிறது.