‘நான் 60 ஆண்டு வாழ்க்கையில் கற்றது இதுதான்’; புத்தகமாக வெளியிட்ட‌ துபாய் ஆட்சியாளர்

‘Life Has Taught Me’ – பொது வாழ்வில் 60 ஆண்டுகள் முடிவடைந்துள்ளதை புத்தகமாக‌ வெளியிட்ட துபாய் ஆட்சியாளர்.

துபாய் ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள், தன் பொது வாழ்க்கையில் 60 ஆண்டுகள் முடிவடைந்ததையடுத்து, தான்‌ எழுதிய ‘Life Has Taught Me’ என்ற புத்தகத்தின் வெளியீடு குறித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

புத்தகங்கள் யார் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

துபாய் ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள், தனது ‘Life Has Taught Me’ என்ற புதிய புத்தகத்தின் கையொப்பமிட்ட பிரதிகளைத் துபாய் இளவரசர் மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்களுக்கும், துபாய் துணை ஆளுநர் மாண்புமிகு ஷேக் மக்தூம் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்களுக்கும்‌ வழங்கியுள்ளார்.

அறிவு தங்கத்தை விட மேலானது!

துபாய் இளவரசருக்கு வழங்கிய பிரதியில், “என் ஆதரவும் பலமுமான என் மகன் ஷேக் ஹம்தானுக்கு… ஞானம் தங்கத்தை விட விலைமதிப்பற்றது என்பதால், வாழ்க்கை எனக்குக் கற்றுக் கொடுத்ததன் சாரத்தை உம் கைகளில் ஒப்படைக்கிறேன். அது தேசத்திற்கும் நமது மக்களும் நீ செய்யும் சேவையில் உனக்கு உதவும் என்று நம்புகிறேன்” என்று அவர் எழுதியிருந்தார்.

இதுதான் மிகப்பெரிய சாதனை!

அடுத்ததாக, துபாய் நிதி அமைச்சர் மாண்புமிகு ஷேக் மக்தூம் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்களுக்கு வழங்கிய பிரதியில், என் மகன், என் துணையும் என் வலிமையும் ஆன மக்தூம் பின் முகமது எனத் தொடங்கி, மிகப்பெரிய சாதனை என்பது நமக்காக நாம் அடைவது அல்ல, நம்மைப் பின் தொடர்ந்து வருபவர்களுக்கு நாம் விட்டுச் செல்பவையே. வாழ்க்கை எனக்கு கற்றுத் தந்ததிலிருந்து சிலவற்றை உனக்கு அளிக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

எது உண்மையான பாரம்பரியம்?

சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘Life Has Taught Me’ என்ற புத்தகத்தின் முதல் தொகுப்பில் 35 அத்தியாயங்கள் இடம்பெற்றுள்ளன. அதில், உண்மையான பாரம்பரியம் என்பது செல்வமும், கட்டிடங்களும் அல்ல. காலத்தையும் எல்லைகளையும் தாண்டி, அனைவருக்கும் பயனளிக்கும் ஞானமும், அறிவும், நல்லவார்த்தைகளுமே பாரம்பரியம் என துபாய் ஆட்சியாளர் தெரிவித்துள்ளார்.