பாம்புகளை பிடிக்க பொறி; துபாய் மாநகராட்சி நடவடிக்கை!

துபாயின் ரெம்ராம் & அல் ரமத் கிளஸ்டர் ஆகிய குடியிருப்பு பகுதியில் பாம்புகள் நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, அப்பகுதிகளில் பாம்பு விரட்டிகளை அமைத்துள்ளது மாநகராட்சி நிர்வாகம்.

குடியிருப்பு பகுதியில் பாம்புகள்

துபாயில் ரெம்ராம் என்ற குடியிருப்பு வளாக பகுதியில் தனி வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் பல அமைந்துள்ளன. இந்த

வளாகத்தில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

சமீப நாட்களாக இந்த வளாகத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் பாம்புகளை கண்டதாக பலர் தெரிவித்து வந்தனர். பாம்புகளை நேரில் கண்ட குடியிருப்புவாசிகள் பலர் புகைப்படம் மற்றும் வீடியோவாக எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டனர்.

பலர் வீட்டு வாசல்களிலும், பால்கனியிலும் பாம்புகளை பார்த்ததாக கூறி வந்தனர். மேலும் அடிக்கடி பாம்புகளின் நடமாட்டத்தால் குழந்தைகளுடன் வசிப்பதற்கு மிகவும் அச்சமாக உள்ளதாக மாநகராட்சியிடம் புகார் அளித்தனர்.

புகாரை பெற்றுக்கொண்ட மாநகராட்சி அதிகாரிகள் அந்த குடியிருப்பு வளாகத்திற்கு வந்து பாம்புகள் நடமாடும் பகுதிகளை ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து பாம்பு பிடிக்கும் ஊழியர்கள் அங்கு வரவழைக்கப்பட்டு வீட்டோரம் பதுங்கி இருந்த ஒரு பாம்பை மட்டும் பிடித்து சென்றனர். இந்த பாம்புகள் விஷம் குறைந்த விரியன் வகை பாம்புகள் என தெரிவித்தனர். மேலும் இவைகளால் ஆபத்தில்லை எனவும் கூறிச்சென்றனர்.

மேலும் அந்த வளாகத்தில் பாம்புகளை பிடிக்க பொறிகளை அதிகாரிகள் அமைத்துள்ளனர். கூடுதலாக பாம்புகளை விரட்டவும் தொழில்நுட்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டது. 

கட்டுமான பணிகள் காரணமா?

ரெம்ராம் பகுதியில் கடந்த பத்து ஆண்டுகளாக வசித்து வரும் பாத்திமா அன்வார் இதுகுறித்து கூறுகையில், “இந்த இடத்தில் நாங்கள் 9 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். இதுவரை இப்படியொரு சம்பவம் எப்போதும் ஏற்பட்டதில்லை. சமீப காலமாகத்தான் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

நம்முடைய குடியிருப்பு பகுதிகளுக்கு மிகவும் அருகில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பகுதியில் பாம்புகள் வசித்து வந்திருக்கலாம். தற்போது நடைபெறும் கட்டுமான பணிகள் காரணமாக பாம்புகள் இப்பகுதிகளுக்கு வந்திருக்கலாம் என அண்டை வீட்டுக்காரர்கள் கூறுகின்றனர்” எனக் கூறினார்.

மாநகராட்சியின் நடவடிக்கை

பாம்புகளை பிடிக்க அப்பகுதிகளில் பாம்பு வலைகள் அமைத்தல், மரங்களை வெட்டுதல், கட்டுமானக் கழிவுகளை நேரத்தோடு அகற்றுதல் மற்றும் தொடர் கண்காணிப்பு ஆகிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பத்திமா கூறியதாவது, சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்திகளை அடுத்து, பாம்புகளை தேடும் பணிக்கு தினமும் மூன்று மணி நேரம் வேலை செய்யும் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியும், சமூக ஆர்வலர்களும் இவ்விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதைப் பார்க்க மிகவும் ஆச்சரியமாக உள்ளது. அனைவரும் இணைந்து இந்த இடத்தை ஒரு பாதுகாப்பான இடமாக மாற்ற முயற்சி செய்து வருகிறார்கள், எனக் கூறினார்.