அபுதாபி பள்ளிகளில் புதிய போக்குவரத்து கொள்கையை அபுதாபி கல்வி மற்றும் அறிவுத் துறை (ADEK) அறிவித்துள்ளது. இதன்படி, 15 வயதிற்குட்பட்ட மாணவர்கள் இனி பெற்றோர் அல்லது பெற்றோருக்கு நம்பிக்கையான மற்றொருவர் இல்லாமல் தனியாக வீட்டிற்கு செல்லவோ, பள்ளிக்கு வரவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்
11 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான பேருந்துகளில் கட்டாயமாக மேற்பார்வையாளர்கள் இருக்க வேண்டும். மாணவர்கள் பேருந்து பயணத்தில் மற்றும் நடைபாதையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிய பயிற்சிகளும் வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரியவரில்லாமல் அனுமதி இல்லை
இனி, 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் அல்லது அவர்களால் நியமிக்கப்பட்ட ஒரு பெரியவரின் ஒத்துழைப்பு இல்லாமல் பள்ளிக்கு வரவோ, வெளியேறவோ முடியாது. அப்படி யாரும் மாணவர்களை அழைக்க வரவில்லை எனில், அந்த மாணவர் மீண்டும் பள்ளியிலேயே தங்கவைக்கப்படுவார்.
15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சகோதரர்கள்/சகோதரிகள், தங்களுடைய இளைய சகோதரர்களைப் பள்ளியில் இருந்து அழைத்துச் செல்ல முடியும். ஆனால் அதற்கும் சில கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்காக பெற்றோர்கள் ஒரு படிவத்தில் கையொப்பம் இட வேண்டும். அதில்,
- மாணவர்களை அழைத்துச் செல்லும் பெரியவர்களுக்கு தேவையான பொறுப்புணர்வு இருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
- அந்த பொறுப்பு குறித்து மாணவரின் சகோதர/சகோதரிகளிடம் அவரிடம் தெளிவாக விளக்கி இருக்க வேண்டும்.
- இந்த ஏற்பாட்டின் கீழ் நடக்கும் எந்தவொரு விபத்துக்கும் பள்ளி பொறுப்பேற்காது.
Cycle 3 மாணவர்களுக்கு தனிப்பட்ட போக்குவரத்து
Grade 9–12 (Cycle 3) மாணவர்கள் சைக்கிள், ஸ்கூட்டர் போன்ற பள்ளி அல்லாத போக்குவரத்துக்களை பயன்படுத்தி தனியாக பயணிக்கலாம். ஆனால் இதற்கு பெற்றோர் எழுத்து மூலம் ஒப்புதல் வழங்கியிருக்க வேண்டும்.
பள்ளி பேருந்துகள் – மாணவர்களுக்கு மட்டுமே
பள்ளி பேருந்துகள் மாணவர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். கல்விச்சுற்றுலாக்களுக்கு (field trips) பயணிகள் பேருந்துகளை பயன்படுத்தலாம் எனவும், அந்த பேருந்துகளில் முதலுதவி பெட்டி, சீட் பெல்ட், தீயணைப்பான்
போன்ற பாதுகாப்பு வசதிகள் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து கட்டணங்கள்:
பேருந்து கட்டணங்கள், Integrated Transport Centre (ITC) அமைப்பின் வழிகாட்டுதலின் படி நிறுவப்பட்டு, அபுதாபி கல்வி மற்றும் அறிவுத் துறை மூலம் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.
பயண நேரம் மற்றும் பாதைகள்
- ஒரு பள்ளி பேருந்தின் முழு பயணம் அதிகபட்சமாக 60 நிமிடங்கள் ஆக இருக்க வேண்டும்.
- மாணவர்கள் தேர்வு செய்யப்பட்ட பிக்-அப் மற்றும் டிராப் இடங்களில் மட்டுமே ஏற்றப்படுவார்கள்.
- 11 வயதிற்குட்பட்ட மாணவர்கள் இறங்கும் இடத்தில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் இருக்க வேண்டும். இல்லையெனில், அந்த மாணவர் மீண்டும் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்படுவார்.
பேருந்து பணியாளர்களுக்கான தகுதிகள்
- பேருந்து ஓட்டுநர்களும், மேற்பார்வையாளர்களும் ITC -ஆல் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
- 11 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான பேருந்துகளில் கட்டாயமாக மேற்பார்வையாளர்கள் இருக்க வேண்டும்.
- பெண்கள் பயணிக்கும் பேருந்துகளில் பெண் மேற்பார்வையாளர்கள் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும்
பள்ளி வளாகப் போக்குவரத்து மேலாண்மை
பள்ளிகள் தங்கள் வளாகங்களில் பிக்கப் மற்றும் டிராப்-ஆஃப் நேரங்களில் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்ய திட்டமிட வேண்டும்.
இதற்காக:
- பயிற்சி பெற்ற ஊழியர் குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும்.
- அவசரநிலை தொடர்பு திட்டங்கள் பெற்றோர்களுடன் பகிரப்பட வேண்டும்.
- பேருந்து மற்றும் ஊழியர்களுக்கான தனிச்சிறப்பான பார்க்கிங் பகுதிகள் வழங்கப்பட வேண்டும்.
இந்த புதிய போக்குவரத்து கொள்கை, மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்து, பெற்றோர்களுடன் தெளிவான தொடர்பை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது. பெற்றோர்களும் மாணவர்களும் இந்த மாற்றங்களை பின்பற்றுவதை உறுதிசெய்ய வேண்டும் என கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
