துபாயில் உள்ள அல் மக்தூம் சர்வதேச விமானம் நிலையம் அருகே உள்ள துபாய் வேர்ல்டு சென்டிரல் பகுதியில் நவ.17 அன்று வான் சாகசங்களுடன் விமான கண்காட்சி தொடங்கியது.
துபாய் விமான கண்காட்சி:
தொடக்க நாளில் அமீரக அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள், துபாய் ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள், அபுதாபி இளவரசர் மாண்புமிகு ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் துபாய் இளவரசர் மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.
இந்த கண்காட்சியில் இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 115 நாடுகளை சேர்ந்த சுமார் 1,500-க்கும் மேற்பட்ட விமான தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்கேற்றன.
இந்திய விமானம் விபத்து:
நவ.21 அன்றுடன் முடிவடையவிருந்த துபாய் விமான கண்காட்சியின் நிறைவு நாளில் விமானங்கள் வழக்கம்போல் சாகசத்தில் ஈடுபட்டிருந்தன. அப்போது இந்தியாவின் தேஜஸ் விமானம் சாகசத்தில் ஈடுபட்டபோது, திடீரென நிலைதடுமாறி தரையில் விழுந்து தீப்பிடித்தது.
விமானி உயிரிழப்பு:
இதில் விமானி விங் கமாண்டர் நமன்ஷ் சியால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு இந்திய பிரதமர், தமிழக முதலமைச்சர் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.
துபாய் விமானக் கண்காட்சியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த இந்திய விமானப்படை விமானி நமன்ஸ் சியால் குடும்பத்தினருக்கும், இந்திய விமான படைக்கும் துபாய் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைவரும் துபாய் விமானக் கண்காட்சிக் குழுவின் தலைவருமான ஷேக் அகமது பின் சயீத் அல் மக்தூம் மற்றும் கண்காட்சி ஏற்பாட்டு குழு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
