தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் பாடலை, அறிமுகம் செய்தார் அக்கட்சி தலைவர் விஜய்

2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக வைத்து அரசியல் கட்சி துவங்கிய நடிகர் விஜய், தனது கட்சியின் பெயரை அறிமுகம் செய்த பின் மாணவர்களுக்கு விருது வழங்குதல், நிவாரணப் பொருட்கள் வழங்குதல் போன்ற பல்வேறு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். தற்போது தனது அடுத்த அரசியல் நகர்வாக கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடி, கொடிப் பாடல் ஆகியவற்றை உறுதிமொழியோடு அறிமுகம் செய்து வைத்தார். 

கட்சிக் கொடி

கட்சிக் கொடியில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம் பயன்படுத்தப்பட்டு, மையத்தில் இரண்டு பிளிரும் போர் யானைகளுக்கு நடுவே வாகை மலரையும் அமைத்து வடிவமைக்கப் பட்டிருந்தது. அந்த வாகை மலரை சுற்றி பச்சை மற்றும் நீல நட்சத்திரங்களும் இடம் பெற்றிருந்தன.

இருப்பினும், இது வாகை மலரா அல்லது தூங்கு மூஞ்சி மலரா என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், கட்சிக் கொடியில் இருக்கும் யானையை உடனடியாக நீக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவரான ஆனந்தன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

கொடிப் பாடல்

“தமிழன் கொடி பறக்குது, தலைவன் யுகம் பொறக்குது” என்று துவங்கும் கொடிப்படலை பாடலாசிரியர் விவேக் எழுதி, தமன் இசையமைத்திருந்தார்.

இப்பாடலில் விஜயின் அரசியல் நுழைவுக்கான காரணம், கொடியின் அடையாள அம்சம் அதுமட்டுமின்றி ஆங்காங்கே அரசியல் கருத்துகளையும் பாடல் வரிகள் எதிரொலிக்கிறது. 

குறிப்பாக அரசியல் தலைவர்கள் அண்ணா, MGR இடையே விஜய் இடம் பிடித்திருந்த பாடலின் ஒரு பகுதியில் “மூணெழுத்து மந்திரத்த மீண்டும் காலம் ஒலிக்கிது” என்ற வரிகள் இடம்பெற்றிருந்தன.

உறுதிமொழி

கட்சியின் உறுதிமொழியை அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான ரசிகர்களின் முன்னிலையில் விஜய் வாசித்தார்.

ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம், சமூக நீதி, சம வாய்ப்பு, சம உரிமை போன்ற வார்த்தைகள் இடம் பிடித்திருந்த உறுதிமொழியை தொண்டர்களுடன் விஜய் ஏற்றார்.