வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கில் தெர்ம் துபாய்’ என்று மக்களால் அழைக்கப்படும் உலகிலேயே உயரமான வெல்னஸ் ரிசார்ட்டை துபாய் அரசு நிறுவ உள்ளது.
கனிம குளங்கள், அலை குளங்கள், நீர் சறுக்குகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன் உருவாக்கபடும் இந்த தெர்ம் துபாய் திட்டம் 2028ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தெர்ம் துபாய்:
துபாய் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், உலகின் சிறந்த நகரமாக துபாயை மேம்படுத்தும் நோக்கில் இளவரசர் மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், ‘தெர்ம் துபாய்’ (Therme Dubai) திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
தெர்ம் துபாய் திட்டம்:
- ஆரோக்கியமான சமூகங்களை வளர்ப்பது, குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு ஆரோக்கியமான சூழலை வழங்குவது ஆகியவற்றை நோக்கமாகக்கொண்டு தெர்ம் துபாய் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
- குறிப்பாக முன்னணி சர்வதேச நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் துபாயின் உலகளாவிய போட்டித்தன்மையை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- நல்வாழ்வு, சுகாதாரம் மற்றும் பொழுதுபோக்கு வசதிகளின் ஒருங்கிணைப்புடன் கொண்டு வரப்பட்டுள்ள இத்திட்டம், உள்ளூர் மக்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. ‘அனைவருக்கும் நல்வாழ்வு’ என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை ஊக்குவிக்கவும், சமூகத்தினரிடையே உடல் செயல்பாடுகளை ஊக்குவிக்கவும் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
தெர்ம் துபாய் சிறப்பம்சங்கள்:
- துபாயின் மிகவும் பிரபலமான மற்றும் பசுமையான இடங்களில் ஒன்றான ஜபீல் பூங்காவில் AED 2 பில்லியன் மதிப்பிடப்பட்ட செலவீனத்தில் தெர்ம் துபாய் அமைக்கப்பட உள்ளது.
- இத்திட்டம் உலகத்தரத்துடன் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில், 100 மீட்டர் உயரம் வரை கட்டப்பட உள்ளது.
- இந்த தெர்ம் துபாய் திட்டம் மூன்று முக்கிய மண்டலங்களை உள்ளடக்கியது. முதலாவது விளையாட்டு மண்டலம், இது பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு வேடிக்கை, தொடர்பான பகுதி.
- இரண்டாவது ஓய்வு மண்டலம் (Relax Zone)பெரியவர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இங்கு வெந்நீர் குளங்கள், கனிம குளங்கள், நீராவி குளியல் அறைகள், இயற்கை சிகிச்சைகள் ஆகியவை அமைக்கப்பட உள்ளன.
- மூன்றாவது மீட்டமைப்பு மண்டலம் (Restore Zone) புத்துணர்ச்சியில் கவனம் செலுத்துகிறது. நீராவி அறைகள் மற்றும் புதுமையாக வடிவமைக்கப்பட்ட கனிம சிகிச்சை குளியல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
- இந்த தெர்ம் துபாயில் சிகிச்சை கனிம குளங்கள், அலை குளங்கள், நீர் சறுக்குகள் மற்றும் ரோமன் மற்றும் துருக்கிய குளியல் தொட்டிகள், ஜப்பானிய வெப்ப நீரூற்றுகள், துருக்கிய ஹம்மாம்கள் மற்றும் நோர்டிக் சானாக்கள் போன்றவை அமைக்கப்பட உள்ளன.
கனிம குளங்கள் என்பவை மெக்னீசியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற அதிக அளவு தாதுக்களைக் கொண்ட குளங்கள் அல்லது ஸ்பாக்கள் ஆகும். இந்த தாதுக்கள் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு உதவும் சிகிச்சை பண்புகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.
அலை குளங்கள் என்பவை ஓய்வு மற்றும் பொழுதுபோக்குக்காக செயற்கையாக அலைகளை உருவாக்கும் பெரிய நீச்சல் குளங்கள் ஆகும்.
ரோமன் மற்றும் துருக்கிய குளியல் தொட்டிகள் என்பவை சூடான நீராவியைப் பயன்படுத்தி, உடலை சுத்தப்படுத்தும் குளியல் ஆகும்.
துருக்கிய ஹம்மாம்கள் என்பது மத்திய கிழக்கில் தோன்றிய ஒரு நீராவி குளியல் ஆகும். இதில் வெவ்வேறு வெப்பநிலை மற்றும் ஈரப்பத நிலைகளைக் கொண்ட பல அறைகள் இருக்கும்.
நோர்டிக் சானாக்கள் (Nordic saunas): மரத்தாலான அறைகளில், இதற்கென வைக்கப்பட்ட சூடான கற்கள் மீது தண்ணீரை ஊற்றும் போது உருவாகும் ஈரப்பதமான சூழல் கடுமையான வெப்பம் வியர்வையைத் தூண்டுகிறது.
- இந்த ரிசார்ட்டில் அமைக்கப்படும் வெந்நீர் குளங்களில் பயன்படுத்தப்படும் தண்ணீரில் 90 சதவீதம் மறுசுழற்சி செய்யப்படும்.
- அதே நேரத்தில் காற்று மற்றும் குளிரூட்டும் தேவைகளில் 80 சதவீதம் சுத்தமான எரிசக்தி ஆதாரங்கள் மூலம் பூர்த்தி செய்யப்படும்.
- இந்த ரிசார்ட்டில் உலகின் மிகப்பெரிய உட்புற தாவரவியல் பூங்காவும் அமைக்கப்பட உள்ளது. இந்த பூங்காவிற்காக உலகெங்கிலும் இருந்து 200-க்கும் மேற்பட்ட தாவர இனங்கள் கொண்டு வரப்பட உள்ளது.
- மிச்செலின் நட்சத்திர உணவகம், மூன்று 18 மீட்டர் நீர்வீழ்ச்சிகள், ஆண்டு முழுவதும் மாறும் நீர் சூழல்களை வழங்கும் 4,500 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட விரிவான உட்புற மற்றும் மொட்டை மாடி குளங்கள், 15 நீர் சறுக்குகள் ஆகியவையும் அமைக்கப்பட உள்ளது.
கட்டிட வடிவமைப்பு:
தெர்ம் துபாயின் வடிவமைப்பிற்குப் பின்னால் உலகளாவிய கட்டிடக்கலை நிறுவனமான DS+R (தில்லர் ஸ்கோஃபிடியோ + ரென்ஃப்ரோ) உள்ளது. அதன் மிகவும் குறிப்பிடத்தக்க திட்டங்களில் நியூயார்க் நகரத்தில் உள்ள ஒரு கலாச்சார மையமான தி ஷெட் மற்றும் அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழக கட்டிடம் ஆகியவை அடங்கும். இந்த நிறுவனமே தெர்ம் துபாயை வடிவமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எப்போது திறக்கப்படும்?:
ஆண்டுதோறும் 1.7 மில்லியன் பார்வையாளர்களை வரவேற்கும் வகையில், உள்ளூர் மற்றும் சர்வதேச நிதி பங்களிப்புடன் உருவாக்கப்படும் தெர்ம் துபாய் திட்டம் 2028ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துபாய் இளவரசர் மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் ‘தெர்ம் துபாய்’ திட்டம் குறித்து தனது எக்ஸ் வலைதளத்தில், “இந்த சாதனை மிக்க குறிக்கோள், எங்கள் நகரை உலகில் வாழ்வதற்கு சிறந்த இடமாக மாற்றும் என்பதை நோக்கமாக கொண்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
