சிறந்த உள்ளடக்கப் படைப்பாளர்களுக்கு உலகளாவிய கல்வியாளர் விருது &  $100,000 பரிசு!

ஐக்கிய அரபு அமீரக அரசு ஊடக அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்படும் 1 பில்லியன் ஃபாலோவர்ஸ் உச்சி மாநாடும் (1 Billion Followers Summit), டிக்டாக் (TikTok) தளமும் இணைந்து உலகளாவிய கல்வியாளர் விருதை (Global Educator Award) அறிவித்துள்ளன.

உள்ளடக்கப் படைப்பாளர்களுக்கு விருது:

ஐக்கிய அரபு அமீரக அரசு ஊடக அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்படும் 1 பில்லியன் ஃபாலோவர்ஸ் உச்சி மாநாடு (1 Billion Followers Summit) மற்றும் உலகளாவிய டிஜிட்டல் தளமான TikTok ஆகியவை இணைந்து, ஆன்லைன் வழிக் கற்றலில் புரட்சியை ஏற்படுத்தும் உள்ளடக்கப் படைப்பாளர்களை கௌரவிக்க உலகளாவிய கல்வியாளர் விருதை (Global Educator Award) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விருது, அதிகபட்சமாக $100,000 பரிசை வழங்குகிறது.

கல்வி உள்ளடக்கத்தை ஊக்குவிக்கும் முயற்சி

நான்காவது பதிப்பாக நடைபெறும் 1 பில்லியன் ஃபாலோவர்ஸ் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக வழங்கப்படும் இந்த விருது, டிஜிட்டல் சமூகங்களில் நேர்மறையான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கல்வி உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

“1 பில்லியன் ஃபாலோவர்ஸ் உச்சி மாநாடு, முன்னணி உலகளாவிய டிஜிட்டல் ஊடக தளங்களுடன் வலுவான கூட்டாண்மைகளைத் தொடர்ந்து உருவாக்கி வருகிறது.

உள்ளடக்கத் துறையின் எதிர்காலத்தை வடிவமைக்கவும், சமூகங்கள் முழுவதும் நேர்மறையான மாற்றத்தை வளர்க்கவும், உலகெங்கிலும் உள்ள படைப்பாளர்களை பாராட்டுவதே எங்கள் நோக்கம்,” என்று ஐக்கிய அரபு அமீரக அரசு ஊடக அலுவலகத்தின் நிர்வாக இயக்குநரும், உச்சி மாநாட்டின் துணை தலைமைச் செயல் அதிகாரியுமான கதீஜா ஹுசைன் தெரிவித்தார்.

இந்த முயற்சி TikTok-இன் ஏற்கனவே வெற்றிகரமாக இயங்கும் #LearnOnTikTok பிரச்சாரத்தின் வெற்றியை அடிப்படையாகக் கொண்டது. 

போட்டி விவரங்கள் மற்றும் தகுதி:

உலகளாவிய கல்வியாளர் விருதுக்கான போட்டியில் நவம்பர் 24, 2025 முதல் டிசம்பர் 21, 2025 வரை உள்ளடக்கங்களை வழங்கலாம். 

மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா, ஆப்பிரிக்கா, லண்டன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த உள்ளடக்கப் படைப்பாளர்கள் இந்த விருதுக்கு போட்டியிடலாம்.

வரலாறு, STEM சோதனைகள், தொழில்முனைவு ஆலோசனைகள் மற்றும் வாழ்க்கைத் திறன் சார்ந்த குறிப்புகள் என பலதரப்பட்ட தலைப்புகளில், TikTok-இல் அணுகக்கூடிய கற்றலை ஊக்குவிக்கும் கல்வி மற்றும் பொழுதுபோக்கு உள்ளடக்கத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

உள்ளடக்கத்திற்கான கருப்பொருள்கள்:

போட்டியில் பங்கேற்கும் உள்ளடக்கப் படைப்பாளர்கள் பின்வரும் ஐந்து முக்கிய தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் கவனம் செலுத்தலாம்:

  • மனிதநேயம் (Humanities)
  • தனிப்பட்ட மேம்பாடு (Personal Development)
  • பள்ளிக்கல்வி (School Education)
  • அறிவியல் மற்றும் கண்டுபிடிப்பு (Science & Innovation)
  • வணிகம் மற்றும் நிதி (Business & Finance)

வெற்றியாளர் குறித்த அறிவிப்பு:

போட்டியின் மூன்று இறுதிப் போட்டியாளர்கள் துபாய்க்கு அழைத்து வரப்படுவார்கள். விருது வென்றவர் குறித்த விவரங்கள் ஜனவரி 9 முதல் 11, 2026 வரை துபாயில் எமிரேட்ஸ் டவர்ஸ், துபாய் சர்வதேச நிதி மையம் (DIFC) மற்றும் மியூசியம் ஆஃப் தி ப்யூச்சர் (Museum of the Future) ஆகிய மூன்று இடங்களில் நடைபெறும் உச்சி மாநாட்டில் அறிவிக்கப்படும்.