2026ஆம் ஆண்டு முதல் அமீரகத்தில் அமலாகும் 6 முக்கிய புதிய விதிமுறைகள்!

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை முதல் தொழுகை நேரம் மாற்றம் வரை அமீரகத்தில் 6 புதிய விதிமுறைகள் 2026ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது. 

6 புதிய விதிமுறைகள்

நாட்டின் வளர்ச்சிக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்று நடைமுறையில் இருக்கும் விதிகளை மாற்றி தற்போது உள்ள காலகட்டத்திற்கு ஏற்ப விதிகளை மாற்றுவது.

அப்படி ஐக்கிய அரபு அமீரகம் 2025ஆம் ஆண்டில் கல்வித்துறை முதல் சுகாதாரத்துறை வரை பல்வேறு துறைகளில் விதிமுறைகளை மாற்றியுள்ளது. 

அந்த வகையில் 2026ஆம் ஆண்டிலும் குறிப்பிட்ட துறைகளில் விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. அவற்றில் 6 முக்கிய விதிமுறைகளை இங்கு காண்போம். 

பிளாஸ்டிக் பொருட்கள் தடை 

நாட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் முதற்கட்டமாக பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், அதன் இரண்டாம் கட்ட தடை ஜனவரி 1, 2026 முதல் தொடங்குவதாக காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் (MOCCAE) டிசம்பர் 16 செவ்வாய்க்கிழமை அன்று அறிவித்தது.

இரண்டாம் கட்ட தடையில் பிளாஸ்டிக் கோப்பைகள், கரண்டிகள், முட்கரண்டிகள், கத்திகள், கோப்பைகள், தட்டுகள், ஸ்ட்ராக்கள் போன்ற ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படுகிறது.

தொழுகை நேரம் மாற்றம்

அமீரகத்தில் ஜும்ஆ தொழுகை மதியம் 1.15 மணிக்கு கடைப்பிடிக்கப்பட நிலையில் ஜனவரி 2ஆம் தேதி முதல் மதியம் 12.45 மணிக்கு மாற்றப்பட்டது. அதன்படி மதியம் 12:45 மணிக்கு ஜும்ஆ தொழுகை நடைபெறும் என்று இஸ்லாமிய விவகாரங்கள், அறக்கட்டளைகள் மற்றும் ஜகாத் பொது ஆணையம் அறிவித்துள்ளது. 

இது குறித்து விளக்கம் அளித்துள்ள இஸ்லாமிய விவகாரங்கள் ஆணையத்தின் தலைவர் டாக்டர் உமர் ஹப்தூர் அல் தாரேய், “மத காரணங்களுக்காக அல்ல, ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் நலனுக்காக நேரம் மாற்றப்பட்டது” என்று தெரிவித்தார். 

கல்வி நாட்காட்டியில் மாற்றம் 

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 2026-27 கல்வியாண்டு முதல் அமீரகத்தில் உள்ள இந்திய பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகள் ஒரே கல்வி நாட்காட்டியை பின்பற்றும் என்று கல்வி அமைச்சகம் (MOE) தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை 2026 ஏப்ரல் மாதத்திலிருந்து அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது. 

வாட் வரியில் திருத்தம்

அமீரகத்தில் விதிக்கப்படும் வாட் வரியில் திருத்தம் செய்து புதிய விதியை ஜனவரி 1 முதல் அமலுக்கு கொண்டு வருவதாக நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

அமீரகத்தில் வாட் வரி நடைமுறையில் முன்னதாக விற்பனையாளர்கள் வரி செலுத்துவார்கள். தற்போது வாட் வரியில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தத்தின் கீழ் பொருட்களை வாங்குபவர் அல்லது சேவைகளை பெறுபவர் வரி செலுத்த வேண்டும்.

இந்த நடைமுறை தலைகீழ் கட்டண முறை என்று அழைக்கப்படுகிறது. பொருட்களை வாங்குபவர் அல்லது சேவைகளை பெறுபவர் அதற்கான ரசீதுகளை சேமித்து வைத்து அதன்படி மொத்தமாக வரிப்பட்டியலை உருவாக்கி வரி செலுத்த வேண்டும். 

இன்ப்ளுயன்சர் உரிமம் கட்டாயம் 

அமீரகத்தில் டிஜிட்டல் ஊடகங்களை ஒழுங்குபடுத்த 2025ஆம் ஆண்டு மே 29 அன்று புதிய ஊடக சட்டம் அமலுக்கு வந்தது. அதன்படி இன்ஃபுளூயன்சர்ஸ் மற்றும் கன்டென்ட் கிரியேட்டர்ஸ் சமூக ஊடக தளங்களில் பணம் பெற்று கொண்டோ அல்லது இலவசமாகவோ விளம்பரம் செய்யும் எவரும் அதற்கான இன்ப்ளுயன்சர் உரிமம் பெற வேண்டும். 

அந்த வகையில் உள்ளடக்க படைப்பாளர்கள் மற்றும் விளம்பரதாரர்கள் அரசிடம் இருந்து இன்ப்ளுயன்சர் உரிமம் பெறுவதற்கான கால அவகாசம் 2026ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி நிறைவடைகிறது.

மாணவர்களுக்கான புதிய வயது தகுதி 

மாணவர்களின் கற்றல் மற்றும் சமூக திறன்களை கருத்தில் கொண்டு அமீரகத்தில் Pre-K, KG 1, KG 2 மற்றும் Grade 1 வகுப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான வயது தகுதி (Age Cut-off) ஆகஸ்ட் 31-இல் இருந்து டிசம்பர் 31-ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது.

 2026-27 கல்வியாண்டு முதல் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் தொடங்கும் பள்ளிகளில் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.

வகுப்பு வயது தகுதி 
Pre-K 3 வயது (டிசம்பர் 31 வரை) 
KG 14 வயது (டிசம்பர் 31 வரை)
KG 25 வயது (டிசம்பர் 31 வரை)
Grade 16 வயது (டிசம்பர் 31 வரை)
TAGGED: