ஐக்கிய அரபு அமீரகம் தனது 54-வது தேசிய தினத்தை (Eid Al Etihad) ஒட்டி, தேசத்தின் ஸ்தாபன நாளைக் கோலாகலமாகக் கொண்டாட தயாராகி வருகிறது.
நவம்பர் 27 முதல் டிசம்பர் 3 வரை நாடு முழுவதும் வாணவேடிக்கைகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய கொண்டாட்டங்களுக்கு நகரங்கள் ஒளியூட்டவுள்ளன.
அமீரகத்தின் இந்த முக்கியமான நிகழ்வைக் காண, துபாய் மற்றும் அபுதாபியில் சிறந்த இடங்கள்:
குளோபல் வில்லேஜ் (Global Village):
டிசம்பர் 1 முதல் 3 வரை, தினமும் இரவு 9 மணிக்கு கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் அரங்கேறும். டிசம்பர் 1 மற்றும் 2 தேதிகளில் அமீரகத்தின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் ட்ரோன் காட்சிகளும் இடம்பெறும்.
பிரதான மேடையில், ‘From the Desert to the Stars’ என்ற தலைப்பிலான நடன நாடகமும், பாரம்பரிய யோலா மற்றும் ஹர்பியா நடன நிகழ்ச்சிகளும் நடைபெறும். பிரபல கலைஞர் காலித் முகமதுவின் நேரடி இசை நிகழ்ச்சி டிசம்பர் 1 இரவு 9 மணிக்கு நடைபெறுகிறது. குளோபல் வில்லேஜில் வழக்கமான நுழைவுச் சீட்டு கட்டணம் பொருந்தும்.
ஜே.பி.ஆர் கடற்கரை (The Beach at JBR):
டிசம்பர் 2 அன்று, இரவு 9 மணிக்கு வாணவேடிக்கைகள் நடைபெறும்.
கடற்கரையோரத்திலும், அருகிலுள்ள ப்ளூவாட்டர்ஸ் தீவின் (Bluewaters Island) வாட்டர்ஃப்ரன்ட் பகுதியிலும் இருந்து இந்த வாணவேடிக்கையைக் காணலாம்.
யாஸ் தீவு கடற்கரை (Yas Island Waterfront):
டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய இரண்டு தேதிகளிலும், இரவு 9 மணிக்கு வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெறும். கொண்டாட்டங்கள் பிற்பகல் 3 மணிக்கே தொடங்கிவிடும். இதில் கலாச்சார நிகழ்ச்சிகள், ஃபால்கன் பறவை சாகசங்கள் மற்றும் 54 கொடிகள் கொண்ட ‘கொடித் தோட்டம்’ (Flag Garden) ஆகியவை இருக்கும்.
எமிராட்டி கைவினைப் பொருட்கள், மெகந்தி போடுதல், பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் பழங்கால கார் கண்காட்சி ஆகியவையும் இடம்பெறும். நுழைவு இலவசம் என்றாலும், யாஸ் பே இணையதளத்தில் முன்பதிவு செய்வது பரிந்துரைக்கப்படுகிறது.
எமிரேட்ஸ் பேலஸ், மாண்டரின் ஓரியண்டல் (Emirates Palace, Mandarin Oriental):
டிசம்பர் 2 அன்று, இரவு 9:15 மணிக்கு ஹோட்டலின் சார்பில் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெறுகிறது. நவம்பர் 29 முதல் டிசம்பர் 3 வரை இங்கே குழந்தைகள் செயல்பாடுகள், கலைப் பட்டறைகள் மற்றும் வண்ணமயமான முகப்பு விளக்குகள் அலங்காரம் ஆகியவை நடைபெறும்.
டிசம்பர் 2 அன்று, மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பாரம்பரிய அல் அயாலா நடன நிகழ்ச்சியையும் பார்வையாளர்கள் கண்டு களிக்கலாம். தேசப் பெருமையையும், பாரம்பரியத்தையும் போற்றும் இந்தச் சிறப்புமிகு கொண்டாட்டங்களில் பங்கேற்க அமீரக மக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
