ஈரான் தாக்குதலின் போது, சமூக வலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 12 நபர்களை ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பொதுப் பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டவர்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
வதந்தி பரப்பியதால் 80 பேர் கைது
ஈரான் நடத்திய தாக்குதல் தொடர்பான சூழலில், வதந்திகளையும் தவறான வீடியோக்களையும் இணையத்தில் பகிர்ந்ததற்காக 75 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் வதந்திகளை உருவாக்கியவர்கள் மட்டுமல்லாமல், அவற்றை மறுபகிர்வு (Share/Repost) செய்தவர்களும் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளனர்.
மார்ச் 15 அன்று, ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமை வழக்கறிஞர் டாக்டர் ஹமத் சைஃப் அல் ஷம்சி, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 25 பேரை கைது செய்ய உத்தரவிட்டு, அவர்களை விரைவான விசாரணைக்கு உட்படுத்தினார்.
மார்ச் 14 வெடிவிபத்துகள் மற்றும் நாட்டின் முக்கிய அடையாளங்கள் மீதான தாக்குதல்கள் என சித்தரிக்கப்பட்ட தவறான வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றியதற்காக 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
கூடுதலாக, அபுதாபி காவல்துறை, தற்போதைய நிகழ்வுகளின் போது இடங்களை படம்பிடித்து, சமூக வலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்பியதற்காக 45 பேரை கைது செய்துள்ளது.
என்னவெல்லாம் செய்யக்கூடாது
ஏவுகணை செல்வது, அதைத் தடுத்து அழிக்கும் காட்சிகள் அல்லது மக்கள் வேடிக்கை பார்க்கும் காட்சிகளைப் படம்பிடித்துப் பகிர்வது. இது நாட்டின் பாதுகாப்பு ரகசியங்களை வெளிப்படுத்தக்கூடும் என்பதால் தடை செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த இடங்களை புகைப்படம் எடுப்பதோ அல்லது வீடியோ எடுப்பதோ சட்டப்படி குற்றமாகும்.
செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட வெடிப்புச் சம்பவங்கள் அல்லது வெளிநாடுகளில் நடந்த பழைய வீடியோக்களை அமீரகத்தில் தற்போது நடந்தது போலச் சித்தரித்து இணையத்தில் பரப்புவது.
தாக்குதல் நடத்திய நாட்டுக்கு ஆதரவாகப் பேசுவது அல்லது அவர்களின் ராணுவ நடவடிக்கைகளைப் புகழ்ந்து பதிவிடுவது என இந்த வகையான செயல்பாடுகளைக் கண்காணித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சட்டப்படியான தண்டனைகள் மற்றும் அபராதம்
அமீரக சட்டத்தின்படி, வதந்திகளைப் பரப்புபவர்களுக்குக் கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது.
அபராதம்: குறைந்தபட்சம் AED 100,000 முதல் 200,000 வரை
சிறைத்தண்டனை: ஒரு வருடம் அல்லது அதற்கும் மேல் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
அதிகாரிகளின் அறிவுறுத்தல்
சமூக வலைதளங்களில் வதந்திகள், பொய்ச் செய்திகள் அல்லது தெரியாத மூலங்களிலிருந்து வரும் தகவல்களைப் பரப்புவது சட்டப்படி குற்றமாகும் என்று எச்சரிக்கப்பட்டது. தகவலை உருவாக்குபவர்கள் மட்டுமல்லாமல், அதை மறுபதிவு செய்பவர்களும் (repost) சட்டப்படி பொறுப்பாவார்கள் என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.
அதிகாரப்பூர்வமான அரசு அறிவிப்புகளை மட்டுமே நம்ப வேண்டும் எனவும், ஒரு தகவலைப் பகிரும் முன் அது உண்மையா என்று சரிபார்க்கவும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் மக்களின் அமைதியைக் குலைக்கும் எந்த ஒரு செயலிலும் ஈடுபட வேண்டாம் என துபாய் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
