அமீரகத்தில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நிலவிய கோடைக்காலம் முடிவடையவுள்ள நிலையில் குளிர்காலத்தின் தொடக்கத்தை குறிக்கும் இலையுதிர் காலம் செப்.6 முதல் தொடங்குகிறது.
அமீரகத்தில் கடந்த ஜூன் 21 அன்று தொடங்கிய கோடை காலத்தில் கிட்டத்தட்ட 41°C முதல் 43°C வரை வெப்பநிலை பதிவானது. இதனால் நிலவிய கடும் வெப்பத்தால் மக்கள் அனைவரும் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இருப்பினும் கோடை காலத்தில் ஆங்காங்கே பெய்த மழை, வெப்பத்தை சற்று தணித்தது என்று கூறலாம். இந்நிலையில் அமீரகத்தில் கோடைக்காலம் படிப்படியாக குறையவுள்ளது.
அக்டோபர் 15 வரை இலையுதிர் காலம்
செப்டம்பர் 6ஆம் தேதி முதல் Safriya Season எனப்படும் இலையுதிர் காலம் அமீரகத்தில் தொடங்கியது. இதனால் நாடு முழுவதும் நிலவிய வெப்பநிலை படிப்படியாக குறையும். செப்டம்பர் 6ஆம் தேதி தொடங்கிய இலையுதிர் காலம் அக்டோபர் 15ஆம் தேதி வரை நீடிக்கும் என அமீரக வானியல் சங்க தலைவர் இப்ராஹிம் அல் ஜர்வான் தெரிவித்துள்ளார். இது Al Qayz எனப்படும் கோடை காலத்தின் இறுதிக்கும், குளிர்காலத்தின் தொடக்கத்திற்கும் இடைப்பட்ட காலமாகும்.
இலையுதிர் காலத்தின் தொடக்கத்தில் இருந்து செப்டம்பர் 23ஆம் தேதி வரை அதிக ஈரப்பதத்துடன் வெப்பம் தொடரும். இதனால் அதிகாலை நேரங்களில் மூடுபனி நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கில் இருந்து வரும் ஈரப்பதமான காற்று, நாட்டில் மழை மேகங்கள் உருவாக பங்களிக்கும்.
