AI-ஐ தவறாக பயன்படுத்துவது ஊடக மீறலாகும்; அமீரக மீடியா கவுன்சில் எச்சரிக்கை!

தேசிய சின்னங்கள் மற்றும் பொது நபர்களை ஒப்புதல் இல்லாமல் AI மூலம் சித்தரிக்க அமீரக மீடியா கவுன்சில் தடை செய்துள்ளது. 

AI-ஐ தவறாக பயன்படுத்த தடை

தொழில்நுட்பத்துறையில் AI-இன் வளர்ச்சி மற்றும் தேவை தற்போதைய நிலையில் அபரிமிதமாக இருந்து வருகிறது. இருப்பினும் தவறான தகவல்களை பரப்புவதற்கு சக்திவாய்ந்த கருவியாக AI உருவெடுத்துள்ளது. இதனால் சமூக ஊடகங்களில் பகிரப்படும் உள்ளடக்கங்கள் குறித்த உண்மைத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது.

இது போன்ற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த அமீரக மீடியா கவுன்சில் AI-ஐ தவறாக பயன்படுத்தத் தடை விதித்துள்ளது. அனைத்து சமூக ஊடக பயனர்கள், ஊடக நிறுவனங்கள் மற்றும் உள்ளடக்க படைப்பாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட சட்டங்கள் மற்றும் தரநிலைகளுக்கு முழுமையாக இணங்கவும், தொழில்முறை மற்றும் நெறிமுறை பொறுப்பை நிலைநிறுத்தவும் அமீரக மீடியா கவுன்சில் கேட்டுக்கொண்டுள்ளது.

சட்டம் கூறுவது என்ன?

சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்புவதைத் தடுக்க அமீரகத்தில் ஊடக சட்டம் அமலில் உள்ளது. ஊடக ஒழுங்குமுறை தொடர்பான கூட்டாட்சி ஆணையின் பிரிவு 1(17) படி, அனைத்து வகையான ஊடகங்களும் அரசு சின்னங்கள், கலாச்சார பாரம்பரியம் மற்றும் தேசிய அடையாளம் மற்றும் பிற விதிகளை மதிக்க வேண்டும்.

அதேபோல், ஜூன் 2024ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட AI-இன் பொறுப்பான மற்றும் நெறிமுறை பயன்பாட்டிற்கான அமீரகத்தின் அதிகாரப்பூர்வ சாசனம், AI-ஐ பொறுப்புடன் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

ஒழுங்குபடுத்தப்படும் ஊடகத்துறை

நடப்பாண்டிற்கான அமீரக மீடியா கவுன்சில் இயக்குநர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஊடகத் துறையை வலுப்படுத்துவதற்கான கொள்கைகள், சட்டம் மற்றும் ஒழுங்குமுறை முயற்சிகள், குறிப்பாக உள்ளூர் உள்ளடக்கத்தை ஆதரிப்பதற்கான கட்டமைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கிய தேசிய ஊடக அலுவலகத்தின் தலைவரும், அமீரக மீடியா கவுன்சில் தலைவருமான அப்துல்லா பின் முகமது பின் புட்டி அல் ஹமீத் கூறியவாறு, உலகளாவிய ஊடக மாற்றங்களுக்கு ஏற்ப துறையின் பங்கை வலுப்படுத்த இந்த புதிய நடவடிக்கைகள் நோக்கமாகக் கொண்டுள்ளன என்று கூறினார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் ஐக்கிய அரபு அமீரகத்தில்  அமீரக ஊடக சட்டத்தில் சோசியல் மீடியா இன்ப்ளூயன்சர்கள்,  கண்டெண்ட் கிரியேட்டர்கள் சமூக ஊடகங்களில் பணம் பெறும் விளம்பரங்கள், பிராண்ட் கூட்டாண்மைகள், தயாரிப்பு ப்ரமோஷன்களில்  ஈடுபட்டால்  கட்டாயமாக அதற்கான வணிக உரிமம் பெற வேண்டுமென்று புதிய விதி அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

TAGGED: