அமீரகத்தில் இரண்டாம் பருவ தேர்வுகள் ரத்து; கல்வி அமைச்சகம் முக்கிய அறிவிப்பு

அமீரகத்தில் உள்ள பள்ளிகளில் 2025-2026 கல்வியாண்டிற்கான இரண்டாம் பருவத் தேர்வுகளை ரத்து செய்வதாக கல்வி அமைச்சர் (MoE) சாரா அல் அமிரி தலைமையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

2025-26 கல்வியாண்டிற்கான முக்கிய அறிவிப்பு

கோடை விடுமுறைக்குப் பிறகு அமீரகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் ஆகஸ்ட் 25 முதல் திறக்கப்படுகின்றன. இதற்காக நாடு முழுவதும் உள்ள 465 பள்ளிகளில் பராமரிப்புப் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தப் பள்ளிகள் 25,000க்கும் அதிகமான மாணவர்களை வரவேற்க உள்ளன. இதற்காக 830 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஆதரவுடன் பணியில் இருப்பார்கள்.

அமீரகம் முழுவதும் கூடுதலாக ஒன்பது புதிய பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட உள்ளன. இவற்றில் 25,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில உள்ளனர். அதற்காக 800க்கும் மேற்பட்ட புதிய ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் 10 மில்லியனுக்கும் அதிகமான பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன மற்றும் 5,560 பள்ளிப் பேருந்துகள் தயார் நிலையில் உள்ளன என ஆகஸ்ட் 19ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது கல்வி அமைச்சர் சாரா அல் அமிரி தெரிவித்தார்.

இரண்டாம் பருவத் தேர்வுகள் ரத்து

நடப்பு கல்வியாண்டுக்கான மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றங்களில் ஒன்றாக மாணவர்களின் மன நலனை கருத்தில் கொண்டு இரண்டாம் பருவத் தேர்வுகளை ரத்து செய்துள்ளது அமீரக கல்வி அமைச்சகம். அதற்கு பதில் இரண்டாம் பருவத்தில் பள்ளி அளவிலான தேர்வு மட்டுமே நடைபெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இப்போது முதல் மற்றும் மூன்றாம் பருவ தேர்வுகள் மட்டுமே நடைபெறும். இந்த புதிய நடைமுறையால் தேர்வு பயத்தில் இருந்து விடுபட்டு மாணவர்களின் கற்றல் திறன் மேம்படுவதோடு, ஆசிரியர்களின் கற்பித்தல் திறனும் மேம்படும் என கூறப்படுகிறது.

TAGGED: