துபாயில் 79வது இந்திய சுதந்திர தின விழா; மூவர்ண கொடியை ஏற்றினார் இந்தியத் தூதர்

79வது இந்திய சுதந்திர தின கொண்டாட்ட விழா துபாயில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் துபாய்க்கான இந்தியத் தூதர் ஜெனரல் சதீஷ் குமார் சிவன் அவர்கள் இந்திய தேசிய கொடியை ஏற்றினார்.

கலை நிகழ்ச்சிகளுடன் சுதந்திர தின விழா

உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களால் (ஆகஸ்ட் 15) 79வது சுதந்திர தின விழா மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த சுதந்திர தின விழா நிகழ்வில் ஏராளமான துபாய் வாழ் இந்தியர்கள் உற்சாகத்துடனும், தேசபக்தி உணர்வுடனும் விழாவை கொண்டாடினர்.

அமீரகத்தில் கோடை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருப்பதால் நடப்பாண்டு  இந்திய சுதந்திர தின விழா நிகழ்வு காலை 6:30 மணியளவில் தொடங்கப்பட்டது. இதில் துபாய்க்கான இந்தியத் தூதர் ஜெனரல் சதீஷ் குமார் சிவன் அவர்கள் மூவர்ணக் கொடியை ஏற்றினார். பிறகு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் சுதந்திர தின உரை வாசித்தார்.

கொடியேற்றத்தைத் தொடர்ந்து, மாணவ, மாணவிகளின் தேசபக்தி நிறைந்த வண்ணமயமான ஆடல், பாடல் உள்ளிட்ட கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு இந்தியத் தூதர் ஜெனரல் சதீஷ் குமார் சிவன் அவர்கள் சான்றிதழ் வழங்கினார்.

இந்திய தூதரின் சுதந்திர தின வாழ்த்து

விழாவின் நிறைவில் இந்தியத் தூதர் ஜெனரல் சதீஷ் குமார் சிவன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்துப் பேட்டியளித்தார். இதில் பேசிய அவர் “அமீரகத்தைத் தங்கள் இரண்டாவது வீடு என்று பெருமையுடன் அழைக்கும் 4.3 மில்லியன் இந்தியர்களின் முன்னோக்கிச் செல்லும் பாதை நம்பிக்கையால் நிறைந்துள்ளது. மேலும் நாம் எதிர்காலத்தை நோக்கி உறுதியாக ஒன்றிணைந்து செல்வோம். இந்த சுதந்திர தினத்தை நாம் மகிழ்ச்சியுடனும் சிந்தனையுடனும் கொண்டாடும் வேளையில், இந்தியா – அமீரகம் உறவை வளர்த்த ஒவ்வொரு இந்தியருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்” எனத் தெரிவித்தார்.

அதீத பொருளாதார வளர்ச்சியை நோக்கி இந்தியா

கடந்த 78 ஆண்டுகளில், இந்தியப் பொருளாதாரம் அதிவேகமாக வளர்ந்துள்ளது, கடந்த 10 ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நாடு மட்டுமல்ல, நம்பகமான & பொறுப்பான நாடாகவும் உள்ளது இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமீரக அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களுக்கும் இடையிலான வலுவான பிணைப்பும் நம்பிக்கையும் இரு நாடுகளைப் பொருளாதாரத்தில் முன்னோக்கி எடுத்துச் சென்றுள்ளது என துபாய்க்கான இந்தியத் தூதர் ஜெனரல் திரு. சதீஷ் குமார் சிவன் பேட்டி.