ஐக்கிய அரபு அமீரகம் வீட்டுப் பணியாளர்கள் சட்டத்தின்கீழ் (Federal Decree-Law No. 9 of 2022) வரும் 19 வகையான வேலைகளின் புதிய அதிகாரப்பூர்வப் பட்டியலை மனிதவள மற்றும் அமீரகமயமாக்கல் அமைச்சகம் (MoHRE) வெளியிட்டுள்ளது.
உள்ளடக்கம்
1. அங்கீகரிக்கப்பட்ட 19 வகை வீட்டுப் பணியாளர்கள்
அமீரக அரசு 19 வகையான வேலைகளை வீட்டுப் பணியாளர்கள் பிரிவின் கீழ் சேர்த்துள்ளது. இவர்கள் அனைவரையும் மனித வள மற்றும் அமீரகமயமாக்கல் அமைச்சகத்தால் (MoHRE) உரிமம் பெற்ற முகமைகள் (Agencies) மூலமாக மட்டுமே வேலைக்கு அமர்த்த வேண்டும்.
- வீட்டுப் பணிப்பெண் (Housemaid)
- மாலுமி (Sailor)
- காவலாளி (Guard)
- மேய்ப்பர் (Shepherd)
- குதிரை சவாரி செய்பவர் (Jockey)
- விலங்குப் பயிற்சியாளர் (Tamer)
- பருந்து பராமரிப்பாளர் (Falcon care-taker)
- பொதுப் பணியாளர் (Worker)
- வீட்டைப் பராமரிப்பவர் (Housekeeper)
- சமையல்காரர் (Cook)
- குழந்தை பராமரிப்பாளர் (Nanny/Babysitter)
- பண்ணைப் பணியாளர் (Farm worker/grower)
- தோட்டக்காரர் (Gardener)
- தனிப்பட்ட பயிற்சியாளர் (Personal trainer/coach)
- வீட்டுப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர் (Private tutor)
- வீட்டுச் செவிலியர் (Home nurse)
- தனிப்பட்ட உதவியாளர் (Personal assistant)
- தனியார் விவசாயப் பொறியாளர் (Private agricultural engineer)
- குடும்ப ஓட்டுநர் (Personal/family driver)
2. பணியாளர்களுக்கான உரிமைகள் (Entitlements)
- 2022-ஆம் ஆண்டின் கூட்டாட்சி ஆணைச் சட்டப்படி, பணியாளர்களுக்கு பின்வரும் உரிமைகள் உண்டு.
- வாரத்திற்கு ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை. விடுமுறை நாளில் வேலை செய்தால், வேறு நாளில் விடுமுறை அல்லது கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும்.
- ஒரு நாளைக்குக் குறைந்தது 12 மணி நேர ஓய்வு. இதில் தொடர்ச்சியாக 8 மணி நேர ஓய்வு இருக்க வேண்டும்.
- ஆண்டுக்கு 30 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை. 6 மாதம் முதல் 1 வருடம் வரை வேலை செய்திருந்தால், பணிபுரிந்த ஒவ்வொரு மாதத்திற்கும் 2 நாட்கள் விடுமுறை.
- இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சொந்த ஊர் சென்று வர இருவழி விமானச் சீட்டு (Round-trip ticket).
- ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி, சம்பளம் தர வேண்டிய தேதியில் இருந்து 10 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும்.
- ஏற்ற தங்குமிடம் மற்றும் உணவு வழங்கப்பட வேண்டும்.
- ஆண்டுக்கு 30 நாட்கள் வரை மருத்துவ விடுமுறை எடுக்கலாம். முதல் 15 நாட்கள் முழுச் சம்பளம், அடுத்த 15 நாட்கள் அரைச் சம்பளம் கொடுக்க வேண்டும்.
- பாஸ்போர்ட், அடையாள அட்டைகளை பணியாளர்களே வைத்திருக்க முழு உரிமை உண்டு.
3. ஆட்சேர்ப்பு முகமைகளின் கடமைகள் (Recruitment Agencies)
- பணியாளரை நாட்டிற்கு அழைத்து வரும் முன், வேலை மற்றும் சம்பளம் குறித்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்.
- பணியாளரின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கான மருத்துவப் பரிசோதனையை அமீரகம் வருவதற்கு 30 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்.
- அமீரகத்தின் கலாச்சாரம், சட்டங்கள் மற்றும் புகார்கள் அளிக்கும் முறைகள் குறித்து பணியாளருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
- பணியாளர்களிடம் இருந்து எந்தவொரு கமிஷன் அல்லது கட்டணத்தையும் பெறக்கூடாது.
- முகமை தவறு செய்தால், பணியாளரைத் திருப்பி அனுப்பும் செலவை முகமையே ஏற்க வேண்டும்.
4. முதலாளிகளின் கடமைகள் (Employers)
- பணியாளருக்கு தங்குமிடம், உணவு மற்றும் பொருத்தமான ஆடைகளை வழங்க வேண்டும்.
- மருத்துவச் செலவுகள் அல்லது சுகாதாரக் காப்பீட்டை (Health Insurance) முதலாளியே ஏற்க வேண்டும்.
- பணியாளரை கண்ணியமாக நடத்த வேண்டும்; மற்றவர்களின் வீட்டில் வேலை செய்ய வற்புறுத்தக் கூடாது.
- பணியாளரின் ஒப்புதல் இன்றி வேறு வேலைகளில் ஈடுபடுத்தக் கூடாது.
- பணியாளரின் பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களை வலுக்கட்டாயமாகப் பறிமுதல் செய்யக்கூடாது.
5. பணியாளர்களின் கடமைகள் (Workers)
- ஒப்பந்தத்தின்படி பணியாளர்கள் தனது வேலையைச் சரியாகச் செய்ய வேண்டும்.
- முதலாளியின் பொருட்கள் மற்றும் கருவிகளைப் பாதுகாப்பாகப் பராமரிக்க வேண்டும்.
- வீட்டின் ரகசியங்கள் மற்றும் தனிப்பட்ட உரிமைகளைப் பேண வேண்டும். ரகசியங்களை வெளியே சொல்லக்கூடாது.
- முறையான வேலை அனுமதிச் சீட்டு (Work permit) இன்றி வேறு எந்த இடத்திலும் வேலை செய்யக்கூடாது.
6. சட்ட மீறல்களுக்கான தண்டனைகள் & அபராதங்கள்
சட்டங்களை மீறுபவர்களுக்குக் கடுமையான தண்டனைகளும் AED 10 மில்லியன் வரை அபராதமும் விதிக்கப்படும்.
- போலி ஆவணங்கள் தருதல், அரசு அதிகாரிகளை வேலை செய்ய விடாமல் தடுத்தல், ரகசியங்களை வெளியேற்றுதல் உள்ளிட்ட விதிமீறல்களுக்கு 6 மாதம் வரை சிறை அல்லது AED 20,000 முதல் 100,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
- அனுமதி இல்லாத பணியாளரை வேலைக்கு அமர்த்துவது, 18 வயதிற்குட்பட்டவர்களை பணிக்கு அமர்த்துவது, பணியாளரை வெளியேறத் தூண்டுவது அல்லது சட்டவிரோதமாகப் பாதுகாப்பு அளிப்பது உள்ளிட்ட விதிமீறல்களுக்கு AED 50,000 முதல் 200,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
- உரிமம் இன்றி ஏஜென்சி நடத்துவது, அமைச்சகத்தின் ஆன்லைன் அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துவது ஆகிய விதிமீறல்களுக்கு 1 ஆண்டு வரை சிறை அல்லது AED 200,000 முதல் AED 1,000,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
- சட்டத்தை மீறும் ஒவ்வொரு பணியாளரின் எண்ணிக்கையைப் பொறுத்து அபராதம் பலமடங்காகும் அதிகபட்சமாக AED 10 மில்லியன் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
- முதலாளிக்கும் பணியாளருக்கும் இடையே ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், அமைச்சகத்தில் (MoHRE) புகார் அளிக்கலாம். அங்குத் தீர்வு காணப்படவில்லை எனில் வழக்கு நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும்.
