அமீரகத்தில் களமிறங்கிய ஸ்டார்லிங்க்: கட்டணம், வேகம் மற்றும் வசதிகள் என்னென்ன?

ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் சாட்டிலைட் இணையச் சேவையான ஸ்டார்லிங்க் (Starlink), இன்று முதல் அமீரகத்தில் தொடங்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

அமீரக தொலைத்தொடர்பு ஆணையம், வீடுகள், வணிக நிறுவனங்கள், விமானப் போக்குவரத்து மற்றும் கடல்சார் சேவைகளுக்காக 2034ம் ஆண்டு வரை ஸ்டார்லிங்கிற்கு உரிமம் வழங்கியுள்ளது.

தொடக்கமும் உரிமமும் (Licensing)

ஸ்டார்லிங்க் சேவை வழங்கும் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் தற்போது ஐக்கிய அரபு அமீரகமும் இணைந்துள்ளது. ஜூன் 2024-இல் ஐக்கிய அரபு அமீரகத்தின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TDRA), ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு 2034 வரை செல்லுபடியாகும் 10 ஆண்டு உரிமத்தை வழங்கி உள்ளது. இச்சேவை வீடுகள், வணிக வளாகங்கள், அரசுத் துறை, கப்பல்கள் மற்றும் விமானப் பயணங்களுக்குப் பயன்படுத்தப்படலாம்.

கட்டணம் மற்றும் வேகம் (Pricing & Performance)

பதிவிறக்க வேகம் வினாடிக்கு 50 முதல் 200 Mbps  வரை கிடைக்கும். தாமத நேரம் 20–40ms மட்டுமே. ஸ்டாண்டர்ட் கருவியின் விலை AED 1,465. போர்ட்டபிள் மினி கிட் விலை AED 1,099.

திட்டம் மாதக் கட்டணம் 
Residential Lite AED 230 
Standard Residential AED 300
Business (starting from) AED 190
Roaming / Portable (100GB)AED 248
Roaming / Portable (Unlimited)AED 370

காத்திருப்போர் பட்டியல் 

துபாய் மற்றும் அபுதாபி போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நகர்ப்புறங்களில் சாட்டிலைட் சிக்னல் பயன்பாடு உச்சத்தை எட்டியுள்ளதால், புதிய பயனர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுகிறார்கள். மற்ற 5 எமிரேட்களில் உடனுக்குடன் இச்சேவையைப் பெற முடியும்.

விமானங்களில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது

தரைவழிச் சேவை தொடங்குவதற்கு முன்பே (2025 முதலே), எமிரேட்ஸ் (Emirates) மற்றும் ஃபிளைதுபாய் (flydubai) ஆகிய விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களில் ஸ்டார்லிங்க் வைஃபை சேவையை வழங்கத் தொடங்கிவிட்டன. எமிரேட்ஸ் நிறுவனம் தனது 232 போயிங் மற்றும் A380 ரக விமானங்கள் அனைத்திலும் இலவச ஸ்டார்லிங்க் வைஃபை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ்  நிறுவனத்திற்கு இதன் முக்கியத்துவம்

ஐக்கிய அரபு அமீரகம் ஒரு பெரிய தொழில்நுட்ப மையமாகவும், அதிகமான வெளிநாட்டினர் வாழும் நாடாகவும் இருப்பதால், வணிக ரீதியாக இது ஸ்பேஸ் எக்ஸ் -க்கு ஒரு முக்கியமான சந்தையாகும். மேலும், 10 ஆண்டு கால உரிமம் கிடைத்துள்ளதால் கப்பல் மற்றும் விமானத் துறைகளில் பெரிய வணிக ஒப்பந்தங்களைச் செய்ய ஸ்டார்லிங்கிற்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.