2024 ஆம் ஆண்டில் அமீரகத்தில் அந்நிய நேரடி முதலீடு AED 167 பில்லியனை எட்டியது. இது 2023-ஆம் ஆண்டை விட 48 சதவீதம் அதிகம் என்று ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு மாநாடு (UNCTAD) வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டி துபாய் ஆட்சியாளர் X பதிவு.
ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு மாநாடு (UNCTAD) 2025-ஆம் ஆண்டிற்கான உலக முதலீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் 2024 ஆம் ஆண்டில் அமீரகம் AED 167 பில்லியன் அந்நிய நேரடி (FDI) முதலீட்டை ஈர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பிராந்தியத்தில் மொத்த வெளிநாட்டு முதலீடுகளில் 37% அமீரகத்தின் பங்களிப்பாகும்.
அமீரகத்தில் வருடாந்திர அந்நிய நேரடி முதலீடு 2015-ஆம் ஆண்டு AED 31.6 பில்லியனாக இருந்த நிலையில் 2024 இல் AED 167.6 பில்லியனாக உயர்ந்தன. இது 2015 முதல் 2024 வரை ஒவ்வொரு வருடமும் 10.5% வளர்ச்சி விகிதத்தை பிரதிபலிக்கிறது.
உலகளவில் அமீரகம் 10-வது இடத்தை பிடித்துள்ளது!
2024-ஆம் ஆண்டில் அந்நிய நேரடி முதலீட்டிற்கான முன்னணி இடமாக அமீரகம் உலகளவில் 10-வது இடத்தைப் பிடித்துள்ளது. புதிய அந்நிய நேரடி முதலீட்டு திட்டங்களை ஈர்ப்பதில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அமீரகம் உலகளவில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. அப்படி 2024-ஆம் ஆண்டில் மட்டும் அமீரகத்தில் 1,369 புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முக்கிய பொருளாதாரத் துறைகளில் வலுவான செயல்திறனை அமீரகம் பதிவு செய்துள்ளது. அதன்படி மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகளின் அந்நிய நேரடி முதலீட்டு திட்ட மதிப்புகள் (11.5%), அதைத் தொடர்ந்து வணிக சேவைகள் (9.7%), புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (9.3%), நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு (9%) மற்றும் ரியல் எஸ்டேட் (7.8%) ஆகியவை உள்ளன.
UNCTAD அறிக்கையை சுட்டிக்காட்டி துபாய் ஆட்சியாளர் X பதிவு
“ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு மாநாட்டின் (UNCTAD) சமீபத்திய அறிக்கை, 2024-ஆம் ஆண்டில் அமீரகம் AED 167 பில்லியன் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளது என்பதைக் காட்டுகிறது. இது முந்தைய ஆண்டை விட %48 வளர்ச்சியை குறிக்கிறது.
அடுத்த ஆறு ஆண்டுகளில் AED 1.3 டிரில்லியன் அளவுக்கு அந்நிய நேரடி முதலீட்டு வருவாயை ஈர்ப்பதே எங்கள் புதிய இலக்கு.
எங்கள் அடித்தளம் வலுவானது. எங்கள் எதிர்காலம் நம்பிக்கைக்குரியது. மேலும் எங்கள் இலக்குகளில் எங்கள் கவனம் தெளிவாக உள்ளது. எங்கள் செய்தி எளிதானது: வளர்ச்சி என்பது ஸ்திரத்தன்மைக்கு முக்கியமாகும், பொருளாதாரம் மிக முக்கியமான கொள்கையாகும்” என துபாய் ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் UNCTAD அறிக்கையை சுட்டிக்காட்டி X-ல் பதிவிட்டுள்ளார்.
அமீரக அரசாங்கத்தில் புதிய அமைச்சகம் இணைப்பு
அமீரக அரசாங்கத்தில் ‘வெளிநாட்டு வர்த்தக அமைச்சகம்’ என்ற புதிய அமைச்சகத்தை அறிவித்தும், இத்துறைக்கான அமைச்சராக டாக்டர் தானி அல் செயூடி நியமிக்கப்பட்டுள்ளார் என்பதையும் ஜூன் 20 அன்று துபாய் ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் அறிவித்தார்.
மேலும் ஒரு நடவடிக்கையாக, பொருளாதார அமைச்சகத்தின் பெயரை பொருளாதாரம் மற்றும் சுற்றுலா அமைச்சகம் என்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக துபாய் ஆட்சியாளர் தெரிவித்தார்.
தேசிய செயற்கை நுண்ணறிவு அமைப்பு ஜனவரி 2026 முதல், மந்திரி மேம்பாட்டு கவுன்சில், கூட்டாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் அனைத்து இயக்குநர்கள் குழுக்களின் ஆலோசனை உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் துபாய் ஆட்சியாளர் தெரிவித்துள்ளார்.
