ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் மழலையர் பள்ளி மாணவர்களுக்கு தினசரி 40 நிமிடங்கள் கட்டாய அரபு மொழி வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் 2025-2026 கல்வியாண்டு முதல் அமலுக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரபு மொழி கட்டாயம்:
வரும் 2025-2026 கல்வியாண்டு முதல், மழலையர் பள்ளி மாணவர்கள் வாரத்திற்கு 200 நிமிடங்கள் (தினமும் 40 நிமிடங்கள்) அரபு மொழி வகுப்புகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும். இந்த விதி அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும்.
இஸ்லாமியக் கல்வி:
இஸ்லாமிய மழலையர் பள்ளி மாணவர்களுக்கு வாரத்திற்கு 90 நிமிடங்கள் இஸ்லாமியப் பாடம் கற்பிக்கப்படும். இது மூன்று 30 நிமிட வகுப்புகளாகவோ அல்லது இரண்டு 45 நிமிட வகுப்புகளாகவோ நடத்தப்படலாம் என கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சமூக அறிவியல் கற்பித்தல்:
மழலையர் பள்ளியில் சமூக அறிவியல் கற்பிப்பதற்கான கட்டாய வழிகாட்டுதல்களும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. வகுப்பறையிலும், வெளியேயும் விளையாட்டு அடிப்படையிலான கற்பித்தல் அணுகுமுறை இதில் ஊக்குவிக்கப்படுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தின் புவியியல், சுற்றுச்சூழல், சமூக மதிப்புகள் உள்ளிட்டவை பாடத்திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும்.
கால அளவு உயர்வு:
2027-2028 கல்வியாண்டு முதல், அரபு மொழி வகுப்புகளின் காலம் ஒரு நாளைக்கு 60 நிமிடங்களாக அதிகரிக்கப்படும்.
அரசு ஆதரவும், கண்காணிப்பும்:
கல்வி அமைச்சகம் 2025-2026 கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாக, இந்த மூன்று பாடங்களுக்கும் கற்பித்தல் கட்டமைப்பு மற்றும் தெளிவான கற்றல் வழிமுறைகளை தனியார் பள்ளிகளுக்கு வழங்கும். அத்துடன், பள்ளிகளுக்குத் தேவையான ஆலோசனைகளையும் அமைச்சகம் மேற்கொள்ளும்.
2026-2027 கல்வியாண்டு முதல், உள்ளூர் கல்வி அதிகாரிகளுடன் இணைந்து, புதிய விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதைச் சரிபார்க்க கல்வி அமைச்சகம் வழக்கமான ஆய்வுகளை மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபுதாபி அறிவிப்பு:
கடந்த சில நாட்களுக்கு முன்பு அபுதாபியில் தனியார் மற்றும் கல்வி கூட்டாண்மை பள்ளிகளில் உள்ள மழலையர் மாணவர்களுக்கு வாரத்திற்கு 240 நிமிடங்கள் (நான்கு மணிநேரம்) அரபு மொழி பயிற்றுவிப்பிற்காக ஒதுக்க வேண்டும் என அபுதாபியின் கல்வி ஆணையம் ஒரு புதிய கொள்கையை அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
