உணவுப் பொருட்களில் உப்பின் அளவை குறைக்க புதிய கட்டுப்பாடுகள்; அமீரக அரசு நடவடிக்கை!

அமீரக மக்கள் தினசரி பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக உப்பை உட்கொள்வதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளை தடுக்க, கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களில் உப்பின் அளவை குறைக்கும் வகையில் புதிய விதிமுறைகளை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் ரொட்டி, பேக்கரி உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உப்பின் அளவைக் குறைக்க புதிய கடுமையான விதிகளைக் கொண்டு வரவுள்ளது. சமீபத்தில் நடத்தப்பட்ட தேசிய ஊட்டச்சத்து ஆய்வில், ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் 96.2% மக்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக அதிகப்படியான உப்பை உணவில் சேர்ப்பது தெரியவந்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த அமீரக சுகாதார அமைச்சகம் (MoHAP)  இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. 

ஏன் இந்த புதிய விதிகள்?

அதிகப்படியான உப்பு (சோடியம்) உட்கொள்வதால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. உடலில் உப்பு சேர்வது சிறுநீரக செயல்பாட்டை நேரடியாக பாதிக்கும்.  உப்பு அதிகமுள்ள உணவுகள் பசியைத் தூண்டுவதால், மக்கள் அதிக கலோரி கொண்ட உணவுகளைச் சாப்பிட்டு உடல் எடை அதிகரிக்கிறார்கள்.

 அதிகப்படியான உப்பு உட்கொள்வதால், அமீரகத்தில் 25.9% பெரியவர்களுக்கு உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு கூறுகிறது. 

அரசு எடுக்கப்போகும் நடவடிக்கைகள்:

  • அமீரக சுகாதார அமைச்சகம் (MoHAP) விரைவில் பின்வரும் மாற்றங்களைச் செய்யவுள்ளது. 
  • ரொட்டி (Bread), பேக்கரி பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கப்படும் உப்பின் அளவை அரசு நிர்ணயம் செய்யும்.
  • 2030-ஆம் ஆண்டிற்குள் மக்களின் சராசரி உப்பு நுகர்வை 30% குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • உணவுகளில் உப்பு மட்டுமல்லாமல் சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவையும் குறைக்க நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்படும்.
  • அரசு எந்தெந்த உணவுப் பொருட்களில் எவ்வளவு உப்பு இருக்கலாம் என்ற துல்லியமான அளவுகளை விரைவில் அறிவிக்க உள்ளது. 

பொதுமக்களுக்கு சுகாதாரத் துறையின் அறிவுரை

ஒரு நாளைக்கு 5 கிராமுக்கு குறைவாக (சுமார் ஒரு தேக்கரண்டி) மட்டுமே உப்பைப் பயன்படுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது.

மக்கள் தங்கள் உணவில் உப்பைக் குறைத்து, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

TAGGED: