இந்தியாவில் பாகிஸ்தான் நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் குறித்து அமீரகத்திற்கு விளக்கமளிக்கும் விதமாக இரண்டு நாள் பயணமாக அபுதாபி வந்தது, மக்களவை உறுப்பினர் ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான இந்திய எம்.பி-க்கள் குழு.
ஆபரேஷன் சிந்தூர்:
இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22 அன்று பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் 25 சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் வாசி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என இந்திய அரசு பெயரிட்டது.
இந்திய எம்.பி-க்கள் குழு:
இதற்கிடையே, பாகிஸ்தானில் இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் குறித்து விளக்கமளிக்கும் விதமாகவும், பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு உலக நாடுகளின் ஆதரவு திரட்டும் விதமாகவும் இந்தியாவின் அனைத்து கட்சிகளை சேர்ந்த 52 எம்.பி-க்களை ஐந்து முதல் 6 பேர் கொண்ட குழுக்களாக பிரித்து அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா, கத்தார் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு மே 22-ஆம் தேதி இந்திய அரசு அனுப்பி வைத்தது.
அமீரகம் வந்த இந்திய எம்.பி-க்கள் குழு
பல்வேறு நாடுகளுக்கு சென்றுள்ள எம்.பி-க்கள் குழுவில் ஒரு குழு இரண்டு நாள் பயணமாக அமீரகம் வந்தது. அதன்படி, மக்களவை உறுப்பினர் ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஏழு எம்.பி-க்களை கொண்ட குழு மே 22 அன்று காலை அபுதாபி வருகை புரிந்திருந்தது.
இந்த குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களான பன்சூரி ஸ்வராஜ், இ.டி. முகமது பஷீர், ஸ்ரீ அதுல் கார்க், ஸ்ரீ சஸ்மித் பத்ரா, ஸ்ரீ மனன் குமார் மிஸ்ரா, ஸ்ரீ சுரேந்திரஜீத் சிங் அலுவாலியா, மற்றும் முன்னாள் தூதர் ஸ்ரீ சுஜன் சினாய் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். வருகை புரிந்த எம்.பி-க்கள் குழுவை அமீரகத்தின் கூட்டாட்சி தேசிய கவுன்சில் உறுப்பினர் அகமது மிர் கூரி மற்றும் அமீரகத்துக்கான இந்திய தூதர் சுஞ்சய் சுதிர் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக வரவேற்றனர்.
முதல் நாள்
இரண்டு நாள் பயணமாக அமீரகம் வந்துள்ள எம்.பி-க்கள் குழு முதல் நாளில் அபுதாபியில் பல்வேறு உயர்மட்ட சந்திப்புகளில் பங்கேற்றது. அதில் நாட்டின் சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வு அமைச்சர், பாதுகாப்பு விவகாரங்கள், உள்துறை மற்றும் வெளியுறவுக் குழுவின் தலைவர் உடனான சந்திப்புகளும் அடங்கும்.
சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வு அமைச்சர் உடனான சந்திப்பு
முதல் சந்திப்பாக, சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வு அமைச்சர் மாண்புமிகு ஷேக் நஹாயன் மபாரக் அல் நஹ்யான் அவர்களை சந்தித்து இந்திய எம்.பி-க்கள் குழு பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பயங்கரவாதத்தை தூண்டும் பாகிஸ்தானின் சதி மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து அமைச்சரிடம் விளக்கினர்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்ட அமைச்சர், “பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் அமீரகமும் இணைந்து போராடும். அமீரகம் எப்போதும் இந்தியாவுடன் துணை நிற்கும்” என்று கூறினார். இந்த சந்திப்பின் போது அனைத்து விதமான பயங்கரவாத செயல்களுக்கும் இருதரப்பும் எதிர்ப்பு தெரிவித்தது.
பாதுகாப்பு விவகாரங்கள், உள்துறை மற்றும் வெளியுறவுக் குழுவின் தலைவர் உடனான சந்திப்பு
அதனை தொடர்ந்து பாதுகாப்பு விவகாரங்கள், உள்துறை மற்றும் வெளியுறவுக் குழுவின் தலைவர் மாண்புமிகு டாக்டர் அலி ரஷீத் அல் நுஐமி அவர்களை சந்தித்து இந்திய எம்.பி-க்கள் குழு விரிவான கலந்துரையாடல்களை நடத்தியது. இதற்கு பதிலளித்த பாதுகாப்பு விவகாரங்கள், உள்துறை மற்றும் வெளியுறவுக் குழுவின் தலைவர், “இந்திய அமீரக உறவு என்பது வர்த்தகம் மற்றும் கலாச்சாரங்களுக்கு அப்பாற்பட்டது. பயங்கரவாதம் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் எதிரானது, சர்வதேச சமூகம் உடனடியாக செயல்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.
தேசிய ஊடக அலுவலக தலைமை இயக்குனர் உடனான சந்திப்பு
அதன் பிறகு தேசிய ஊடக அலுவலக தலைமை இயக்குனர் டாக்டர் ஜமால் அல் காபி அவர்களை, ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான இந்திய எம்.பி-க்கள் குழு சந்தித்து கலந்துரையாடினர். இச்சந்திப்பின் போது பாகிஸ்தான் செய்த பொய் பிரச்சாரங்கள் அனைத்தும் முறையான ஆதாரங்களோடு எடுத்துரைக்கப்பட்டது.
ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டேவின் பேட்டி
தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடனான சந்திப்பை தொடர்ந்து ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், பதற்றமான காலகட்டத்தில் தீவிரவாதத்தை ஒழிக்க ஆபரேஷன் சிந்தூரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் விளக்கினார்.
இந்திய சமூகத்துடன் சந்திப்பு
மாலையில், அபுதாபியில் உள்ள இந்திய சமூகத்தை சந்தித்து இந்திய எம்.பி-க்கள் கலந்துரையாடியது. அதில் அமீரகம் – இந்திய உறவுகளை வலுப்படுத்துவதில் இங்குள்ள இந்தியர்களின் பங்களிப்பையும், பன்முகத்தன்மையும் குழு பாராட்டியது.
இரண்டாம் நாள்
மே 23 அன்று இரண்டு நாளில் இந்திய எம்.பி-க்கள் குழு அங்குள்ள ஷேக் சையத் கிராண்ட் மசூதி மற்றும் BAPS இந்து ஆலயத்தை பார்வையிட்டு பயணத்தை முடித்துக் கொண்டது. பின்னர் மறுநாள் காலை அபுதாபியில் இருந்து விமானம் மூலம் இக்குழு புறப்பட்டது.
“ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்.பி-க்கள் குழு, அமீரக பயணத்தை வெற்றிகரமாக முடித்தது. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு அமீரகத்தின் ஆதரவை இப்பயணம் வெளிப்படுத்துகிறது” என்று இந்திய எம்.பி.க்களின் அமீரக பயணம் குறித்து X பதிவில் அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்திய எம்.பி-க்கள் குழு இரண்டு நாள் பயணத்தை இங்கு முடித்த பிறகு லைபீரியா, காங்கோ மற்றும் சியரா லியோன் ஆகிய நாடுகளுக்கு பயணிக்க இருக்கிறது.
