ஐக்கிய அரபு அமீரகத்தில் சோசியல் மீடியா இன்ப்ளூயன்சர்கள், கண்டெண்ட் கிரியேட்டர்கள் சமூக ஊடகங்களில் பணம் பெறும் விளம்பரங்கள், பிராண்ட் கூட்டாண்மைகள், தயாரிப்பு ப்ரமோஷன்களில் ஈடுபட்டால் கட்டாயமாக அதற்கான வணிக உரிமம் பெற வேண்டுமென்று புதிய அமீரக ஊடக சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அமீரக மீடியா கவுன்சிலிடமிருந்து ஊடக உரிமம் மட்டுமே பெற வேண்டியிருந்த நிலையில், மீடியா கவுன்சிலிடமிருந்து ஊடக உரிமத்திற்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு வணிக உரிமத்தைப் பெற வேண்டும். இச்சட்டம் அதிகாரப்பூர்வமாக மே 29 2025 அன்று அமலுக்கு வந்தது.
அதன்படி அமீரகத்தில் சட்டபூர்வமான முறையில் செயல்பட வணிக உரிமம் (Commercial Licence), மீடியா உரிமம் (Media Licence) ஆகிய இரண்டு உரிமங்களை பெற வேண்டும்.
வணிக உரிமம் (Commercial Licence)
- பிராண்ட் கூட்டாண்மைகள், கட்டண விளம்பரங்கள், விளம்பரம் உள்ளிட்ட பணம் ஈட்டும் செயல்களுக்கு வணிக உரிமம் தேவை.
- துபாய் மீடியா சிட்டி, புஜைரா கிரியேட்டிவ் சிட்டி, SHAMS, IFZA, Meydan போன்ற இடங்களில் இருந்து ப்ரீலான்ஸ் உரிமத்தை பெறலாம்.
- இதற்கான கட்டணம்: சுமார் Dh5,000 – Dh15,000 வரை.
2024 முதல், அபுதாபி பொருளாதார மேம்பாட்டுத் துறை (ADDED), தங்கள் சமூக ஊடக தளங்கள் மூலம் எந்தவொரு தயாரிப்பு அல்லது சேவையையும் விளம்பரப்படுத்தும் இன்ப்ளூயன்சர்கள் வணிக உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதை மீறினால் AED 10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
மீடியா உரிமம் (Media Licence)
- வணிக அனுமதி பெற்ற பிறகு தான், இந்த மீடியா அனுமதிக்காக விண்ணப்பிக்க முடியும்.
- இந்த அனுமதி UAE Media Council இணையதளம் (uaemc.gov.ae) மூலம் பெறலாம்.
- இது கீழ்கண்டவற்றுக்கு தேவையான அனுமதிகள் வழங்குகிறது:
- விளம்பர அல்லது மீடியா கண்டெண்ட் வழங்கல்
- ஆடியோ, வீடியோ போட்காஸ்ட்கள்
- வெளிநாடுகளில் இருந்து வரும் தற்காலிக கண்டெண்ட் கிரியேட்டர்கள்
- அனுமதி கட்டணம்: வருடத்திற்கு AED 1,000
யாருக்கு பொருந்தும் இந்த புதிய சட்டம்?
- இந்த சட்டம் அனைத்து சமூக ஊடக இன்ஃப்ளூயன்சர்கள், vloggers, podcasters, content creators ஆகியோருக்கும் பொருந்துகிறது.
- இவர்கள் அனைவரும் அரசாங்க விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
அதில் குறிப்பிட்டதக்கவை சில,
- மதங்களை இழிவுபடுத்தக்கூடாது.
- அரசாங்கத்தையும், சமூக மரியாதையையும் அவமதிக்கக்கூடாது
- சட்டங்களை மீறக்கூடாது.
- இதை மீறினால் அதிகபட்சமாக AED 1,000,000 அபராதம் விதிக்கப்படும்.
- தவறுகள் தொடர்ந்தால், தடை, உரிமம் ரத்து, கடுமையான நடவடிக்கைகள் விதிக்கப்படும்.
கொள்கையை மீறும் எந்தவொரு உள்ளடக்கத்தையும் திருத்த அல்லது நீக்குவதற்கான உரிமையை ஐக்கிய அரபு அமீர்கத்தின் மீடியா கவுன்சில் கொண்டுள்ளது. இது பாதுகாப்பான மற்றும் மரியாதைக்குரிய டிஜிட்டல் சூழலைப் பராமரிப்பதற்கான முயற்சிகளை வலுப்படுத்துகிறது.
