அபுதாபி மசூதிகளுக்கு எமிரேட்டுகளின் பெயர்கள் சூட்டல்!
தேசிய ஒற்றுமையை உணர்த்தும் வகையில் அபுதாபியில் புதிதாக கட்டப்பட்ட 7 மசூதிகளுக்கு ஏழு எமிரேட்டுகளின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இந்த மசூதிகள் ஜனவரி மாதம் திறக்கப்படவுள்ளன.
அபுதாபியின் முகமது பின் சயீத் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஏழு மசூதிகளுக்கு ஏழு எமிரேட்ஸின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன என்று இஸ்லாமிய விவகாரங்கள், அறக்கட்டளைகள் மற்றும் ஜகாத் பொது ஆணையத்தின் தலைவர் டாக்டர் உமர் ஹப்தூர் அல் தாரேய் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் 54வது ஈத் அல் எதிஹாத் கொண்டாட்டங்களை ஒட்டி, தேசிய ஒற்றுமையின் உணர்வைப் போற்றும் விதமாக, அபுதாபியில் உள்ள ஏழு மசூதிகளுக்கு ஏழு எமிரேட்களின் பெயர்களைச் சூட்டுமாறு அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
சயீத் தேசிய அருங்காட்சியகத்தில் ஒன்று கூடிய தலைவர்கள்
டிசம்பர் 2, 2025 அன்று அபுதாபியில் உள்ள சயீத் தேசிய அருங்காட்சியகத்தில் நடைபெற்ற 54வது தேசிய தின கொண்டாட்டத்தில் அமீரக அதிபர், துணை அதிபர், ஆட்சியாளர்கள், இளவரசர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில், “நமது நாட்டைப் பற்றி பெருமைப்படுகிறோம். நமது பயணத்தைப் பற்றி பெருமைப்படுகிறோம். நமது தலைவர்களுக்கு நன்றி” என்று துபாய் ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த கொண்டாட்டம் ‘United’ என்ற கருப்பொருளின் கீழ் நடந்தது. நாட்டின் வரலாற்றை ஆவணப்படுத்தும் பல வரலாற்று கலைப்பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன.
பிக் டிக்கெட்டில் AED 25M வென்ற இந்தியர்!
சவூதியில் வசிக்கும் கேரளாவை சேர்ந்த ராஜன் என்பவர் அபுதாபி பிக் டிக்கெட்டில் AED 25 மில்லியன் வென்றுள்ளார். இந்திய மதிப்பில் இது தோராயமாக 56 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும். இந்த பணத்தில் ஆதரவற்றோருக்கு உதவ போவதாகவும், குடும்பத்திற்காக சேமிக்க போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
30 ஆண்டுகளாக சவூதியில் வசித்து வரும் கேரளாவை சேர்ந்த ராஜன் என்பவர் கடந்த 15 ஆண்டுகளாக பிக் டிக்கெட் வாங்கி வருகிறார். இந்நிலையில் நவம்பர் 9 ஆம் தேதி நண்பர்களுடன் சேர்ந்து வாங்கிய அபுதாபி பிக் டிக்கெட்டில் AED 25 மில்லியன் வென்றுள்ளார்.
ஜாக்பாட் பரிசைத் தவிர, மேலும் 10 அதிர்ஷ்டசாலிகள் தலா AED 100,000 ஆறுதல் பரிசுகளை வென்றுள்ளனர். இதில் பலர் இந்தியர்கள், வங்காளதேசத்தவர்கள் ஆவர்.
இந்திய ரூபாயின் மதிப்பு முதல் முறையாக பெரும் வீழ்ச்சி!
உலக நாணயங்களுக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் முதல் முறையாக இந்த வாரம் பெரிய அளவில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. திர்ஹமுக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 24.51 ஆகவும், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 90.11 ஆகவும் சரிவடைந்துள்ளது.
உலக நாணயங்களுடன் ஒப்பிடும்போது, இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் முதல் முறையாக பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளது. கடந்த சில வாரங்களாகவே உலக முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தையில் இருந்து தங்கள் பணத்தைத் திரும்பப் பெறுவது மற்றும் அமெரிக்க டாலர் மற்ற முக்கிய நாடுகளின் பணத்தை விடத் தொடர்ந்து பலமடைந்து வருவது ஆகியவைதான் இந்தச் சரிவுக்கு முக்கியக் காரணங்கள்.
முதலீட்டாளர்கள் அமெரிக்க டாலரில் முதலீடு செய்வதை பாதுகாப்பானதாக கருதுவதால் ஆசியாவிலேயே மிக மோசமான மதிப்புடைய நாணயமாக இந்திய ரூபாய் மாறியுள்ளது.
45 மணி நேரத்தை இழந்த வாகன ஓட்டிகள்!
உலகளாவிய போக்குவரத்து தரவுகளை வெளியிடும் Inrix இணையதளம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 2025ஆம் ஆண்டு துபாயில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் மட்டும் 45 மணி நேரத்தை இழந்துள்ளனர். இது 2024ஆம் ஆண்டில் இழந்த 8 முதல் 35 மணிநேரத்தை விட அதிகமாகும்.
அபுதாபியில் 29 மணிநேரமும், உம் அல் குவைனில் 28 மணிநேரமும், அல் ஐனில் 17 மணிநேரமும், புஜைராவில் 8 மணி நேரத்தையும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் இழந்துள்ளனர்.
இன்ரிக்ஸ் 2025 அறிக்கையின்படி, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக துருக்கியின் இஸ்தான்புல் நகரம் உலகின் அதிக நெரிசல் நிறைந்த நகர்ப்புறப் பகுதியாக முதலிடத்தில் உள்ளது. அங்கு வாகன ஓட்டிகள் 118 மணிநேரத்தை இழந்துள்ளனர்.
மெக்ஸிகோ சிட்டி, சிகாகோ, நியூயார்க் சிட்டி, பிலடெல்பியா (அமெரிக்கா), கேப் டவுன், லண்டன், பாரிஸ், ஜகார்த்தா மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகியவை இந்தப் பட்டியலில் உள்ளன.
