குளோபல் வில்லேஜில் 7 முறை புத்தாண்டு கொண்டாடலாம்!
இந்தியா, பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட 7 நாடுகளின் புத்தாண்டு பிறக்கும் அதே நேரத்தில் இந்த ஆண்டு குளோபல் வில்லேஜில் ஒரே இரவில் 7 முறை புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற உள்ளது. இதில் ஒவ்வொரு முறையும் வாணவேடிக்கை & டிரோன் ஷோக்கள் நடைபெறும்.
புத்தாண்டு இரவில் குளோபல் வில்லேஜின் மூன்று வாயில்களும் மாலை 4 மணி முதல் அதிகாலை 2 மணி வரை திறந்திருக்கும். உலகின் வெவ்வேறு நாடுகளின் நேரப்படி, ஒவ்வொரு மணி நேரமும் வாணவேடிக்கை மற்றும் டிரோன் ஷோக்கள் நடைபெறும்.
சீனா – இரவு 8 மணிக்கு
தாய்லாந்து – இரவு 9 மணிக்கு
பங்களாதேஷ் – இரவு 10 மணிக்கு
இந்தியா – இரவு 10.30 மணிக்கு
பாகிஸ்தான் – இரவு 11 மணிக்கு
துபாய் – நள்ளிரவு 12 மணிக்கு
துருக்கி – அதிகாலை 1 மணிக்கு
கார்னிவல்’ (Carnival) பகுதியில் 200-க்கும் மேற்பட்ட ரைடுகள் மற்றும் விளையாட்டுக்கள் இருக்கும். டிராகன் கிங்டம் (Dragon Kingdom), உலகத் தோட்டங்கள் (Gardens of the World) மற்றும் குழந்தைகளுக்கான ‘லிட்டில் வொண்டரர்ஸ்’ போன்ற புதிய இடங்களையும் சுற்றிப் பார்க்கலாம்.
வலுப்படும் இந்தியா – அமீரக உறவு
அமீரக பாதுகாப்பு படையின் தளபதி மேஜர் ஜெனரல் அலி சைஃப் ஹுமைத் அல்காபி, இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதியை டெல்லியில் சந்தித்தார். அப்போது இருதரப்பு ராணுவங்களுக்கு இடையிலான உறவுகளை ஆழப்படுத்துவது, இரு நாட்டு ராணுவங்களும் இணைந்து செயல்படுவது மற்றும் பயிற்சிகளை அதிகரிப்பது குறித்து இருவரும் விவாதித்தனர்.
டெல்லி சென்ற அமீரக பாதுகாப்பு படையின் தளபதி மேஜர் ஜெனரல் அலி சைஃப் ஹுமைத் அல்காபிக்கு சவுத் பிளாக் பகுதியில் ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளித்தது இந்தியா.
அதன் பின்னர் இந்திய ராணுவத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட மேஜர் ஜெனரல் அலி சைஃப் ஹுமைத் அல்காபிக்கு ‘ஆபரேஷன் சிந்துர்’ மற்றும் பிராந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்பு நிலைப்பாடு குறித்து விளக்கப்பட்டது.
KG, Grade 1 மாணவர் சேர்க்கைக்கான வயது தகுதி மாற்றம்!
அமீரகத்தில் Pre-K, KG 1, KG 2 மற்றும் Grade 1 வகுப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான வயது தகுதி (Age Cut-off) ஆகஸ்ட் 31 ஆக இருந்த
நிலையில், தற்போது டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தற்போது அமலில் உள்ள ஆகஸ்ட் 31-க்குப் பதிலாக, டிசம்பர் 31-ஆம் தேதியைக் கணக்கிட்டு வயது நிர்ணயம் செய்யப்படும். அதாவது, ஒரு குழந்தை பள்ளியில் சேர வேண்டிய ஆண்டில் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் குறிப்பிட்ட வயதை எட்டியிருக்க வேண்டும்.
இதனால் செப்டம்பர் முதல் டிசம்பர் வரை பிறந்த குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல ஒரு வருடம் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவியது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய விதியின்படி, டிசம்பர் 31-ஆம் தேதி தகுதிக்கான தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, டிசம்பர் 31-க்குள் தேவையான வயதை எட்டும் குழந்தைகளை அந்த ஆண்டிலேயே பள்ளியில் சேர்த்துக் கொள்ளலாம்.
KG மாற்றம் Grade 1 சேர்க்கை வயது தகுதி
| வகுப்பு | வயது |
| Pre-K | 3 வயது (டிசம்பர் 31 வரை) |
| KG 1 | 4 வயது (டிசம்பர் 31 வரை) |
| KG 2 | 5 வயது (டிசம்பர் 31 வரை) |
| Grade 1 | 6 வயது (டிசம்பர் 31 வரை) |
தற்போதைய நடைமுறையின்படி ஏப்ரல் மாதத்தில் கல்வி ஆண்டைத் தொடங்கும் பள்ளிகளில் மார்ச் 31-ஆம் தேதியைக் கட்-ஆஃப் தேதியாகத் தொடர்ந்து பின்பற்றும். இதில் எந்த மாற்றமும் இல்லை.
அமீரகத்தில் கனமழை
ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் டிச.18 மற்றும் டிச.19 இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் கடும் குளிர் நிலவியது கனமழை காரணமாக துபாயின் புறநகர் பகுதியான முஹைஸ்னா-4 பகுதியில் ஏற்பட்ட பள்ளத்தில் 3 வாகனங்கள் கவிழ்ந்தன.
கனமழை காரணமாக ஹட்டா பெஸ்டிவல், குளோபல் வில்லேஜ் மற்றும் கடற்கரைப் பகுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டன. மோட்டார் சைக்கிள் மூலம் வழங்கப்படும் டெலிவரி சேவைகள் நிறுத்தப்பட்டன. ஊழியர்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர்.
சாலைகளில் தேங்கிய நீரை வெளியேற்றும் பணி நடைபெற்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி மெதுவாகச் சென்றன. டிச.19 அன்று துபாய் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற (Work from Home) உத்தரவிடப்பட்டது.
குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் சவூதி அரேபியாவின் ட்ரோஜெனா மற்றும் அல்-லாஸ் மலைப்பகுதிகளில் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. இதனால் இப்பகுதிகள் வெண் போர்வை போர்த்தியது போல் காட்சியளித்தது.
பள்ளி வகுப்பு நேரம் மாற்றம்
துபாயில் உள்ள தனியார் பள்ளிகளில் ஜன. 9 முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை வகுப்புகளும் காலை 11.30 மணிக்கு நிறைவடையும் என்று KHDA அறிவித்துள்ளது.
அமீரகத்தில் ஜும்ஆ தொழுகை மதியம் 1.15 மணிக்கு கடைப்பிடிக்கப்பட நிலையில் ஜனவரி 2-ஆம் தேதி முதல் மதியம் 12.45 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக துபாயில் உள்ள தனியார் பள்ளிகளில் ஜன. 9 முதல் வெள்ளிக்கிழமை வகுப்புகள் காலை 11.30 மணிக்கே நிறைவடையும் என்று துபாயின் அறிவு மற்றும் மனித மேம்பாட்டு ஆணையம் (KHDA) அறிவித்துள்ளது.
