அபுதாபியில் இந்திய சகோதரர்கள் மூவர் பலி!
அபுதாபியில் ஜனவரி 3, 2026 அன்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு காரில் துபாய் திரும்பும் வழியில் ஏற்பட்ட சாலை விபத்தில் கேரளாவை சேர்ந்த 3 சகோதரர்கள் மற்றும் அவர்களது வீட்டு பணிப்பெண் ஆகியோர் உயிரிழந்தனர். காயமடைந்த பெற்றோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த ஜன. 3 அன்று அபுதாபி – துபாய் சாலையில் ஷஹாமா அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 3 சகோதரர்கள் மற்றும் ஒரு பெண் உயிரிழந்தனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் சட்டப்படி, ஒருவர் எந்த மாகாணத்தில் விசா வைத்திருக்கிறாரோ, அங்குதான் அவரது உடலை அடக்கம் செய்ய முடியும்.
ஆனால், விபத்து நடந்த அபுதாபியிலேயே உடல்களை அடக்கம் செய்ய குடும்பத்தினர் விரும்புகிறார்கள். இதற்கு சிறப்பு அனுமதி தேவைப்படுவதால், சமூக ஆர்வலர்கள் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை – துபாய் விமான நேரம் மாற்றம்:
துபாயில் இருந்து மதுரைக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் நேரடி விமான சேவையை வழங்கி வருகிறது. இதன் காரணமாக தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் பயணம் செய்து வருகின்றனர்.
இந்த விமான சேவை துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு மதுரை விமான நிலையத்தை காலை 11.40 மணிக்கு சென்றடைவது வழக்கம் ஆகும். இந்த விமான சேவை ஜன.5, 2026 முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து விமான நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘துபாயில் இருந்து அதிகாலை 1.55 மணிக்கு புறப்படுகின்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் மதுரையை காலை 7.40 மணிக்கு சென்றடையும். அதேபோல் மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து காலை 8.50 மணிக்கு புறப்பட்டு துபாயை காலை 11.25 மணிக்கு வந்தடையும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமீரகத்தில் 13 நாட்களுக்கு கடும் குளிர் எச்சரிக்கை:
ஜனவரி 10 முதல் 22 வரை கடும் குளிர் நிலவும் என அமீரக வானியல் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுவே இந்த ஆண்டின் மிகக் குளிர்ந்த நாட்கள் என்றும் தெரிவித்துள்ளது.
அதிகாலை நேரங்களில் பாலைவனப் பகுதிகளில் குளிர் 5°C க்கும் குறைவாக செல்லக்கூடும். நகரங்களில் காலை மற்றும் மாலை வேளைகளில் வழக்கத்தை விட அதிகமாகவே இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கடும் குளிர் காலத்தை அரபு மக்கள் “துர் அல் சித்தின்” என்று அழைக்கிறார்கள். இதற்கு “கத்தியைப் போன்ற கூர்மையான குளிர்” என்று பொருள்.
வாடகை சுமைக்கு தீர்வு; துபாய் அரசு நடவடிக்கை!
துபாயில் வீட்டு வாடகை செலுத்த முடியாத 232 குடும்பங்களின் வாடகை செலவுகளை ஏற்றுக்கொள்ளும் வகையில், முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அறக்கட்டளை ‘Stir’ என்ற புதிய முயற்சியை தொடங்கி, இதற்காக AED 10 மில்லியன் தொகையை ஒதுக்கியுள்ளது.
முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அறக்கட்டளை ‘Stir’ என்ற புதிய முயற்சியை தொடங்கியுள்ளது. இதில் துபாயில் வீட்டு வாடகை செலுத்த முடியாத 232 குடும்பங்களின் வாடகை செலவுகளை ஏற்றுக்கொள்ளவும், வீட்டு வாடகை செலுத்த தவறிய 111 தவறிய வாடகைதாரர்களுக்கு உதவவும், 187 அமலாக்க வழக்குகளை தீர்க்கவும் AED 10 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
வாடகை பாக்கி வைத்திருப்பதால் சட்டச் சிக்கலில் சிக்கியுள்ள குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள். 2026-ஆம் ஆண்டை ‘குடும்பங்களின் ஆண்டு’ (Year of the Family) என ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாகவே இந்த உதவி வழங்கப்படுகிறது.
குப்பைகளை தெருவில் வீசினால் அபராதம்; AI மூலம் கவனிக்கும் துபாய் மாநகராட்சி:
அமீரகத்தின் “ஸ்மார்ட் கழிவு மேலாண்மை” கட்டமைப்பின் ஒரு பகுதியாக பொது இடங்களில் குப்பை போடுபவர்களை கண்காணிக்க சாலைகளில் AI தொழில்நுட்பத்தில் இயங்கும் கேமராக்களை துபாய் மாநகராட்சி பொருத்தியுள்ளது.
பொது இடங்களில் குப்பை போடுபவர்களுக்கு AED 500 வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் தூய்மை பணியாளர்களை கண்காணிக்க குப்பை அள்ளும் வாகனங்களிலும் AI கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த கேமராக்கள் சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளைச் சுற்றி வரும்போது, யாராவது குப்பை கொட்டினால் அதை உடனே படம் பிடித்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கும்.
பொது இடங்களில் குப்பை போடுதல், குப்பைத் தொட்டிக்கு வெளியே கழிவுகளைக் கொட்டுதல், பழைய மரச்சாமான்களை வீதிகளில் வீசுதல் ஆகிய விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
துபாயை உலகின் மிக தூய்மையான நகரமாக மாற்ற வேண்டும் என்பதே இதன் இலக்கு. மனிதர்கள் நேரடியாகச் சென்று கண்காணிப்பதற்குப் பதிலாக, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க இந்த முறை உதவுகிறது.
