துபாயில் மிதக்கும் அருங்காட்சியகம்
துபாய் கிரீக் பகுதியில் புதிதாக அமையவிருக்கும் தண்ணீரில் மிதக்கும் துபாய் கலை அருங்காட்சியக திட்டத்தை கடந்த அக்.25 அன்று துபாய் ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் பார்வையிட்டார்.
துபாய் கலை அருங்காட்சியகம் மூன்று தளங்களாக அமையவுள்ளது. இதன் முதல் இரண்டு தளங்களில் அருங்காட்சியக அரங்குகளும், மூன்றாவது தளத்தில் உணவகம் மற்றும் விஐபி லவுஞ்ச் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த அருங்காட்சியகம் உருவாவதற்கு காரணமாக இருந்த தொழிலதிபர் அப்துல்லா அல் ஃபுத்தைம் மற்றும் அவரது மகன் உமர் அல் ஃபுத்தைம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்த துபாய் ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், தண்ணீரில் மிதக்கும் துபாய் கலை அருங்காட்சியக திட்டம் நகரின் உணர்வை பிரதிபலிக்கும் புதிய அடையாளமாக இருக்கும்’ என தெரிவித்தார்.
அமீரகத்தின் மிகப்பெரிய கொண்டாட்டம்!
துபாயில் உள்ள ஜபீல் பூங்காவில் நடைபெற்ற ‘Ghar Jaisi Diwali’ என்ற பிரமாண்ட தீபாவளி கொண்டாட்ட நிகழ்வில் எதிர்பார்த்ததை விட அதிகமானோர் கலந்து கொண்டனர். துபாயில் உள்ள ஜபீல் பூங்காவில் அக்டோபர் 16, ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கியது.
அலைகடலென வந்த இந்தியர்கள் ஆடல், பாடல் என கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் இந்திய பாரம்பரியத்தின் பல்வேறு அம்சங்களை வெளிப்படுத்தும் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 60,000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
அமீரக லாட்டரி மூலம் கோடிஸ்வரரான இந்தியர்!
அமீரகத்தில் முதல் முறையாக AED 100 மில்லியன் லாட்டரியை வென்ற அதிர்ஷ்டசாலியாக அபுதாபியில் வசிக்கும் இந்தியரான அனில்குமார் (29) மாறியுள்ளார். AED 100 மில்லியன் லாட்டரியை வென்ற அதிர்ஷ்டசாலி குறித்த விவரம் ரகசியம் காக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த அக்.28 அன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜாக்பாட்டை வெல்ல, அனில்குமார் தான் வாங்கிய லாட்டரி டிக்கெட்டில் உள்ள ஏழு எண்களும் குலுக்கலில் வந்த எண்களுடன் சரியாகப் பொருந்த வேண்டும். லாட்டரி சீட்டில் தனது தாயாரின் பிறந்த மாதமான 11 கடைசியில் வரும் வகையில் அதனை தேர்வு செய்துள்ளார்.
இது குறித்து அவர், “அந்த எண்கள் எனக்கு மிகவும் விசேஷமானவை. என் தாயாருக்காகத்தான் நான் 11 என்ற எண்ணைத் தேர்ந்தெடுத்தேன். இந்த எண் தான் என் வெற்றிக்கு சாவியாக இருக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை,” என்று அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
AED 100M பணத்தில் ஒரு கார் வாங்கி, 7 நட்சத்திர ஹோட்டலில் ஒரு மாதம் தங்கி மகிழப்போவதாகவும், மீதமுள்ள பணத்தை எவ்வாறு புத்திசாலித்தனமாக முதலீடு செய்வது என்பதை திட்டமிட போவதாகவும் தெரிவித்தார்.
நடுவானில் மாரடைப்புக்கு சிகிச்சையளித்த செவிலியர்கள்!
கொச்சியில் இருந்து அபுதாபிக்கு 35,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட, முதல் முறையாக அமீரகத்தில் செவிலியராக பணியில் சேர அதே விமானத்தில் பயணித்த இருவர் துரிதமாக CPR சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றினர்.
கேரளாவைச் சேர்ந்த செவிலியர்களான அபிஜித் ஜீஸ் மற்றும் அஜீஷ் நெல்சன் ஆகியோர் முதல்முறையாக அமீரகத்தில் செவிலியராக பணியில் சேர விமானத்தில் செல்லும் போது 34 வயதான பயணி ஒருவருக்கு CPR சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றியுள்ளனர்.
பயணிகளில் ஒருவரான ஆரிஃப் அப்துல் காதிர் என்ற மருத்துவரும் செவிலியர்களுக்கு உதவ முன்வந்தார். “எங்கள் முதல் வெளிநாட்டுப் பயணம், எங்கள் புதிய வேலைகளைத் தொடங்குவதற்கு முன்பே ஒரு உயிரைக் காப்பாற்ற முடிந்தது, இது எங்களுக்கு சிறந்த வரவேற்பு” என்று செவிலியர் அஜீஷ் கூறினார்.
பாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணத்தில் மாற்றமில்லை!
அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்கள் தங்களது பாஸ்போர்ட்டை புதுப்பிக்கும்போது பயோமெட்ரிக் தரவை வழங்க அவசியமில்லை, மேலும் விண்ணப்ப கட்டணத்தில் மாற்றம் இருக்காது என அமீரகத்திற்கான இந்திய துணைத் தூதர் A. அமர்நாத் தெரிவித்துள்ளார்.
அக்.28 அன்று அமீரகத்தில் இ-பாஸ்போர்ட் அறிமுகப்படுத்தப்பட்டபோது இங்குள்ள இந்தியர்களுக்கு இது குறித்து பல சந்தேகங்கள் ஏற்பட்டன. இந்நிலையில் துபாயில் உள்ள இந்திய தூதரகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய துணைத் தூதர் A. அமர்நாத் இ-பாஸ்போர்ட் குறித்த சந்தேகங்களுக்கு பதிலளித்தார்.
