🎬 HABEEBI Special Movie Premiere in Dubai | Exclusive Invite-Only Screening | Register Now

குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், டிஜிட்டல் பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றங்கள்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய ‘குழந்தைகள் டிஜிட்டல் பாதுகாப்புச் சட்டத்தில் (Child Digital Safety Law) மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்தச் சட்டம் தண்டனை வழங்குவதை விட, பாதிப்புகள் ஏற்படும் முன்பே அதைத் தடுப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. இது குழந்தைகள் மற்றும் பெற்றோரை விட, தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்கள் மீதே அதிக பொறுப்பைச் சுமத்துகிறது.

தற்காப்பு அணுகுமுறை (Prevention over Punishment): 

வழக்கமான சட்டங்கள் ஒரு குற்றம் நடந்த பிறகு நடவடிக்கை எடுக்கும். ஆனால், இந்த புதிய சட்டம் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பே தலையிடுகிறது. ஆன்லைன் தளங்கள் எவ்வாறு கட்டமைக்கப்பட வேண்டும், உள்ளடக்கம் (Content) எவ்வாறு வடிகட்டப்பட வேண்டும் என்பதில் இது மாற்றங்களைக் கொண்டுவருகிறது.

வயதுக்கேற்ற டிஜிட்டல் அனுபவம்

18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்கள், பெரியவர்களைப் போல அதே டிஜிட்டல் சூழலை அணுகக் கூடாது.

ரோப்லாக்ஸ் (Roblox), யூடியூப் அல்லது டிக்டாக் போன்ற தளங்கள் குழந்தைகளின் வயதைக் கண்டறிந்து அதற்கேற்ப பாதுகாப்பை வழங்க வேண்டும்.

இயல்பாகவே குழந்தைகளுக்கு வலுவான தனியுரிமை அமைப்புகள் இருக்க வேண்டும். அறிமுகமில்லாதவர்களுடன் தொடர்பு கொள்வது கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

குழந்தைகளின் தரவைப் பயன்படுத்தி அவர்களுக்கு விளம்பரம் செய்யவோ அல்லது சூதாட்டம் போன்ற அம்சங்களை அவர்கள் அணுகவோ அனுமதி இல்லை.

தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம்

தீங்கு என்பது வெறும் ஆபாசமான அல்லது சட்டவிரோத விஷயங்கள், குழந்தையின் மனநலம் மற்றும் சமூக நல்வாழ்வைப் பாதிக்கும் அனைத்தும் இதில் அடங்கும்:

அதிகப்படியான திரை நேரத்தை  ஊக்குவித்தல், உடல் தோற்றம் குறித்த தவறான பிம்பங்களை உருவாக்குதல், ஆபத்தான சவால்களை செய்யத் தூண்டுதல், தனிப்பட்ட விவரங்களைப் பகிருமாறு அழுத்தம் கொடுத்தல் ஆகியவையும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தில் அடங்கும். 

பெற்றோரின் பங்கு என்ன?

இந்தச் சட்டம் பெற்றோரைத் தண்டிக்காது. மாறாக, அவர்களுக்கு ஆதரவாகவே இருக்கும்.பெற்றோர் தங்கள் குழந்தைகள் என்ன ஆப் பயன்படுத்துகிறார்கள் என்பதைத் தெரிந்து வைத்திருப்பதும், அடிப்படை ‘Parental Controls’-ஐப் பயன்படுத்துவதும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவேளை மேற்பார்வையில் குறைபாடு இருந்தால், அதற்காகப் பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்படாது. அபராதங்கள் அனைத்தும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கே விதிக்கப்படும்.

தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான அழுத்தம்:

இதுவரை ‘கொள்கைகளாக’ மட்டுமே இருந்த பாதுகாப்பு விதிகள், இனி ‘சட்டபூர்வ கடமைகளாக’ மாறுகின்றன.

நிறுவனங்கள் தரம் குறைந்த வயது சரிபார்ப்பு முறைகளை வைத்திருந்தாலோ அல்லது பாதுகாப்பற்ற டிசைன்களைப் பயன்படுத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

விதிமீறல் செய்யும் செயலிகள் அல்லது தளங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓரளவுக்கோ அல்லது முழுமையாகவோ முடக்கப்படலாம்.

சிறுவர்களுக்கான கட்டுப்பாடுகள்:

13 வயதிற்குட்பட்டவர்களுக்கு மிகவும் கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கும். 13-17 வயதுடையவர்கள்: இவர்களுக்குச் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த அனுமதி உண்டு, ஆனால் பாதுகாப்பான வரம்புகளுக்குள் இருக்க வேண்டும்.  

ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய சட்டப்படி, 18 வயது பூர்த்தியானவர்கள் இப்போது சட்டப்பூர்வமாகப் பெரியவர்களாகக் கருதப்படுகிறார்கள். இதன் மூலம் 18 வயது நிறைந்தவர்கள் இனி பெற்றோர் அனுமதியில்லாமல் வங்கி கணக்கு தொடங்குவது, தொழில் தொடங்குவது உள்ளிட்ட பல செயல்முறைகளில் அதிகாரப்பூர்வமாக ஈடுபடலாம்

TAGGED: