🎬 HABEEBI Special Movie Premiere in Dubai | Exclusive Invite-Only Screening | Register Now

லேசான மழை & மேக மூட்டம் காணப்படும்; அமீரகத்தின் வானிலை இந்த வாரம் எப்படி இருக்கும்?

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று முதல் வரும் திங்கட்கிழமை காலை வரை நிலையற்ற வானிலை நிலவக்கூடும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை, மேகமூட்டம் மற்றும் கடலில் சீற்றமான சூழல் நிலவ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய வானிலை நிலவரம்:

இன்று நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அவ்வப்போது மேகமூட்டத்துடன் கூடிய வானிலை காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது. அதே சமயம், வெப்பநிலையின் அளவு சற்று அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு மற்றும் நாளை (வியாழன்) காலை வேளைகளில் நாட்டின் உட்பகுதிகளில் ஈரப்பதம் அதிகரித்து, அதிகாலை நேரங்களில் அடர்த்தியான மூடுபனி ஏற்பட வாய்ப்புள்ளது. காற்று மிதமான வேகத்தில் வீசினாலும், இரவு நேரங்களில் கடலில் காற்றின் வேகம் அதிகரித்து அலைகளின் சீற்றம் அதிகமாக இருக்கும்.

வியாழக்கிழமை: 

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மேகமூட்டம் நீடிக்கும். கடலோரப் பகுதிகளில் வெப்பநிலை சற்று குறைய வாய்ப்புள்ளது. மணிக்கு 10 முதல் 40 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். அரபிக்கடல் பகுதியில் கடல் சீற்றமாக காணப்படும்.

வெள்ளிக்கிழமை:

 பகல் நேரங்களில் கிழக்கு பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். இரவு நேரங்களில் ஈரப்பதம் அதிகரித்து மீண்டும் மூடுபனி உருவாக வாய்ப்புள்ளது. காற்றில் தூசியின் அளவு அதிகரிக்கக்கூடும் என்பதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சனி:

சனிக்கிழமை மாலை முதல் தீவுப் பகுதிகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் மேகமூட்டம் அதிகரித்து லேசான மழை பெய்யக்கூடும். 

ஞாயிறு:

ஞாயிற்றுக்கிழமை வெப்பநிலையின் அளவு மீண்டும் உயர வாய்ப்புள்ளது.

அரபிக்கடல் மற்றும் ஓமன் கடல் பகுதிகளில் வார இறுதி வரை அலைகளின் வேகம் மற்றும் சீற்றம் மாறிக்கொண்டே இருக்கும் என்பதால், கடலுக்குச் செல்லும் மீனவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வானிலை மாற்றங்களைக் கவனித்து செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த வாரம் மேகமூட்டம், மழை மற்றும் பனிமூட்டத்திற்கான வாய்ப்பு இருப்பதாக தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

TAGGED: