துபாய், ஷார்ஜா மற்றும் ஃபுஜைரா ஆகிய பகுதிகளில் தேசிய தின கொண்டாட்டங்களின்போது, விதிகளை மீறி அஜாக்கிரதையாக வாகனங்களை ஓட்டியவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.
துபாய் காவல்துறை:
ஆபத்தான மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக 49 கார்கள் மற்றும் 25 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து, மொத்தம் 3,153 போக்குவரத்து விதிமீறல் அபராதங்களை விதித்துள்ளது துபாய் காவல்துறை.
தங்கள் பிள்ளைகள் பொறுப்புடன் கொண்டாட்டங்களில் ஈடுபடவும், சாலைகளில் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கவும் வழிகாட்ட வேண்டும் என்று பெற்றோர்களுக்கு துபாய் காவல் துறை வலியுறுத்தியுள்ளது.
ஷார்ஜா காவல்துறை:
அதிக சத்தம் எழுப்புதல், மற்றவர்களுக்கு இடையூறு செய்தல், கவனக்குறைவாக மற்றும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல், உரிமம் இல்லாமல் வாகனம் இயக்குதல் ஆகிய குற்றச் செயல்களுக்காக ஷார்ஜா காவல்துறை 106 கார்கள் மற்றும் 9 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்துள்ளது.
ஃபுஜைரா காவல்துறை:
அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டியதற்காக 16 இளைஞர்களைப் பொது வழக்குத் துறைக்கு ஃபுஜைரா காவல்துறை அனுப்பியது. மேலும் 27 வாகனங்களைப் பறிமுதல் செய்தது.
காவல்துறை எச்சரிக்கை:
பண்டிகைக் காலங்களில் ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டி, பொதுமக்களின் பாதுகாப்பை அச்சுறுத்தும் நபர்கள் மீது தொடர்ந்து தீவிர கண்காணிப்புடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
