கத்தார் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை தொடர்ந்து செப்டம்பர் 10ஆம் தேதி கத்தார் சென்ற அமீரக அதிபர், அந்நாட்டு அதிபருக்கு ஆதரவு தெரிவித்தார். இஸ்ரேலின் தாக்குதல் சர்வதேச சட்டங்களை மீறும் செயல் என்றும் தெரிவித்துள்ளார்.
தோஹாவில் தாக்குதல்:
2023 அக்டோபர் முதல் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் செப்.9 அன்று இஸ்ரேல் ராணுவம் திடீரென்று வான்வழி தாக்குதல் நடத்தியது.
அமீரக அதிபர் கண்டனம்:
ஐக்கிய அரபு அமீரக அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் கத்தார் நாட்டின் மீதான இஸ்ரேலிய தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். தோஹாவிற்கு நேரில் சென்ற அதிபர் அங்குள்ள அமீரி திவானில் கத்தார் அமீர் மாண்புமிகு ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்களை சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பின்போது, ஐக்கிய அரபு அமீரகம் கத்தாருக்கு ஆதரவாக நிற்கும் என்றும், அதன் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் மக்களின் பாதுகாப்பைப் பாதுகாக்க எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் உறுதுணையாக இருக்கும் என்றும் அமீரக அதிபர் உறுதி அளித்தார்.
அதிபர், இஸ்ரேலிய தாக்குதல் கத்தாரின் இறையாண்மைக்கு எதிரானது என்றும், சர்வதேச சட்டங்கள் மற்றும் விதிகளின் அப்பட்டமான மீறல் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இது பிராந்தியத்தின் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
கத்தார் அமீர், பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்காக மேற்கொண்டு வரும் முயற்சிகளை அமீரக அதிபர் பாராட்டினார்.
இந்தச் சந்திப்பின்போது, அமீரக அதிபர் உடன், துபாய் இளவரசர் மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் உள்ளிட்ட உயர்மட்டத் தூதுக்குழுவினர் உடன் இருந்தனர்.
