அமீரகத்தில் இந்த வாரம் முழுக்க மழை நீடிக்கும்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் மழைப்பொழிவு வரும் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 19) வரை தொடரும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) எச்சரிக்கை விடுத்துள்ளது.

மழை:

கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 13) இரவு முதல் திங்கட்கிழமை வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது. குறிப்பாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் மற்றும் கடலோர பகுதிகளில் மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக புஜைராவின் முரப்பா (Murabba) பகுதியில் 33.1 மி.மீ மழை பெய்துள்ளது.

வரும் நாட்களுக்கான வானிலை அறிக்கை:

புதன்கிழமை (இன்று): இன்று சில பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

வியாழன் மற்றும் வெள்ளி: இந்த வாரத்தின் மிக முக்கியமான மழைப்பொழிவு இந்த இரண்டு நாட்களில் இருக்கும். வெள்ளிக்கிழமை பகலில் நாட்டின் வடக்கு பகுதிகள், அல் அய்ன் மற்றும் கிழக்கு பகுதிகளில் மழை நீடிக்கும். வெள்ளிக்கிழமை இரவு முதல் மேகமூட்டம் குறைந்து, குளிர் அதிகமாக இருக்கும். 

மழை மேகங்கள் உருவாகும்போது பலத்த காற்று வீசக்கூடும். இதனால் புழுதிப் புயல் ஏற்பட்டு பார்வைத் திறன் குறைய வாய்ப்புள்ளது.

அரபிக்கடல் மற்றும் ஓமன் கடல் பகுதிகளில் கடல் மிகவும் சீற்றமாக காணப்படும்.

வாகன ஓட்டிகளுக்கான அறிவுரை:

மோசமான வானிலை நிலவும் போது அதிகாரிகளின் பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறும், வாகனங்களை ஓட்டும்போது கவனமாக இருக்குமாறும் தேசிய வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த வாரம் ஐக்கிய அரபு அமீரகத்தில் இரவில் ஈரப்பதம் அதிகரிக்கும் என்றும், வார இறுதியில், மேற்கு மற்றும் கடற்கரைப் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

TAGGED: