துபாய்: பருவ காய்ச்சல் பரவ வாய்ப்பு, தடுப்பூசி போட மருத்துவர்கள் அறிவுரை

ஐக்கிய அரபு அமீரகத்தின் பொதுச் சுகாதார அதிகாரிகள் பொதுமக்கள் இன்ஃப்ளூயன்ஸா  காய்ச்சலுக்கான தடுப்பூசி (flu shot) எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மேலும், துபாயில் உள்ள சுகாதார மையங்களில் இந்த தடுப்பூசிகள் எளிதாக கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

2025-26 ஆம் ஆண்டுக்கான தேசிய பருவக் காய்ச்சல் விழிப்புணர்வு இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற மருத்துவர்கள், இன்ஃப்ளூயன்ஸா நோய்களை கடுமையாக்கும் என்றும்,  நிமோனியா அல்லது செப்சிஸ் போன்றவற்றிற்கு வழிவகுக்கும் என்றும் கூறினர். மேலும் நோய்த்தொற்று உள்ளவர்கள் மற்றும் கடுமையான அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும் என்றும் மருத்துவர்கள் வலியுறுத்தினர்.

இன்ஃப்ளூயன்ஸா  தடுப்பூசி

இதுகுறித்து பொதுச் சுகாதார மற்றும் தடுப்பு துறை இயக்குநர் டாக்டர் நாதா அல் மர்ஸூகி கூறுகையில், “புதிய இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி துபாயில் உள்ள அனைத்து சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் கிடைக்கிறது. இந்த தடுப்பூசி 6 மாதக் குழந்தைகள் முதல் அனைத்து வயதினருக்கும் பொருந்தும், எனத் தெரிவித்தார். 

மேலும், இந்த தடுப்பூசியில் இரண்டு வகைகள் உள்ளன என்றும், பொதுமக்களுக்கு வழக்கமான தடுப்பூசியும், 65 வயதிற்கு மேற்பட்ட மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு உயர் அளவிலான (high-dose) தடுப்பூசி போடப்படும், என்றார். இது இன்ஃப்ளூயன்ஸா பரவல்  அதிகமாக உள்ள காலக்கட்டம் என்பதால், இந்த தடுப்பூசி இயக்கம் மார்ச் 2026 வரை நடைபெறும் என அறிவித்துள்ளனர்.   

தடுப்பூசியின் முக்கியத்துவம்

பருவக்கால இன்ஃப்ளூயன்ஸா மிகவும் வேகமாக பரவக்கூடியது. குறிப்பாக பள்ளிகள் மற்றும் முதியோர் இல்லங்கள் போன்ற கூட்டமான இடங்களில் வேகமாக பரவும். ஒரு நோயாளர் இருமும்போது அல்லது தும்மும்போது, வைரஸைக் கொண்ட சிறிய துகள்கள் காற்றில் பரவி அருகில் உள்ளவர்கள் தொற்றுக்குள்ளாகக் கூடும். நோய்த்தொற்று உள்ளவர்களிம் கைகளாலும் வைரஸ் பரவலாம். பரவலைக் குறைக்கும் வகையில், இருமும் போது மற்றும் தும்மும் போது வாய் மற்றும் மூக்கினை மூடுவதும், அடிக்கடி கைகளை கழுவுவதும் மிக முக்கியமாகும்.

மிதமான வானிலை கொண்ட பகுதிகளில் இன்ஃப்ளூயன்ஸா பரவல் குளிர்காலத்தில் அதிகமாக காணப்படும். ஆனால் வெப்பமண்டலப் பகுதிகளில் ஆண்டின் எந்த நேரத்திலும் ஏற்படலாம். வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கு, அறிகுறிகள் தென்படுபவர்களுக்குமான உறைவுக் காலம் (incubation period சாதாரணமாக இரண்டு நாட்கள் இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு ஒரு நாள் முதல் நான்கு நாட்கள் வரை மாறுபடலாம்.

மருத்துவர் அறிவுரை

தடுப்பூசி எடுத்துக்கொள்வது நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல்,  இன்ஃப்ளூயன்ஸா காரணமாக ஏற்படும் கடுமையான பாதிப்புகளை குறைக்கவும் உதவும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

துபாய் சுகாதார ஆணையத்தின் (DHA) தடுப்பு மருத்துவத் துறை தலைவர் டாக்டர் அப்துல்லா அல்-ரசாய் இதுகுறித்து பேசுகையில், பொதுமக்கள் பள்ளிக்கு செல்லும் தங்கள் குழந்தைகளுக்குத் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும். பள்ளிகளில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் நேரங்களில், பெற்றோரின் ஒப்புதல்கள் அவசியம், என்று தெரிவித்தார்.