அமீரகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை உள்ள நிலையில், அதன் இரண்டாம் கட்ட தடை ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வருகிறது.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கம்:
நாட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் முதற்கட்டமாக பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், அதன் இரண்டாம் கட்ட தடை ஜனவரி 1, 2026 முதல் தொடங்குவதாக காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் (MOCCAE) டிசம்பர் 16 செவ்வாய்க்கிழமை அன்று அறிவித்தது.
இரண்டாம் கட்ட பிளாஸ்டிக் தடை
இரண்டாம் கட்ட தடை ஜனவரி 1, 2026 முதல் தொடங்குகிறது. அதில் பிளாஸ்டிக் கோப்பைகள், கரண்டிகள், முட்கரண்டிகள், கத்திகள், கோப்பைகள், தட்டுகள், ஸ்ட்ராக்கள் போன்ற ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படுகிறது.
இந்தத் தடை, 50 மைக்ரானுக்கு குறைவான தடிமன் கொண்ட அணைந்து பிளாஸ்டிக் பொருட்களுக்கும் பொருந்தும். இருப்பினும் இதில் சில விதிவிலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.
அரசு அறிவித்த விதிவிலக்கு
பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் அவற்றில் சிலவற்றுக்கு விலக்கு அளித்துள்ளது அரசு. அதில் அமீரகத்தில் தயாரிக்கப்படும் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.
மருந்துப் பைகள், குப்பை பைகள், இறைச்சி, காய்கறிகள் மற்றும் ரொட்டி போன்ற உணவுப் பொருட்களை சுற்றி வைக்க பயன்படுத்தப்படும் மிக மெல்லிய பிளாஸ்டிக் பைகள், அத்துடன் ஆடைகள், மின்னணுவியல் மற்றும் பொம்மைகளுக்கான பெரிய ஷாப்பிங் பைகள் ஆகியவை இதில் அடங்கும். அமீரக தயாரிப்புகளை ஊக்கப்படுத்தும் விதமாக மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதனால் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை உள்ளது.
