துபாய் ஸ்வாட் சேலஞ்ச் 2026: வீடியோ எடுங்க… AED 10,000 வெல்லுங்க!

துபாயில் பிப். 7 முதல் 11 வரை நடைபெறும் SWAT Challenge போட்டியை சிறப்பாக வீடியோ பதிவு செய்து முதலிடம் பெறுபவருக்கு AED 10,000 பரிசுத் தொகை வழங்கப்படும் என்று துபாய் காவல்துறை அறிவித்துள்ளது.

ஸ்வாட் சேலஞ்ச்:

துபாயில் ஆண்டுதோறும் காவல்துறை சார்பில் ஸ்வாட் சேலஞ்ச் என்ற அதிகாரிகள் குழுவிற்கான தனித்திறமைகளை வெளிப்படுத்தும் விதத்தில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதில் நடப்பு 2026ஆம் ஆண்டில் நடக்கும் போட்டிகளில் அமெரிக்கா, சீனா, பிரேசில், அர்ஜென்டினா, ரஷ்யா, நைஜீரியா, தென்னாப்பிரிக்கா, பல்கேரியா, கிர்ஜிஸ்தான், அஜர்பைஜான், அர்மீனியா உட்பட 48 நாடுகளில் இருந்து மொத்தம் 114 போலீஸ் அணிகள் பதிவு செய்துள்ளன.

அதேபோல் ஆசிய நாடுகளில் இந்தியா, அமீரகம், ஓமன், பாகிஸ்தான், தாய்லாந்து, சவுதி அரேபியா, பக்ரைன், வியட்நாம், உள்பட 21 நாடுகளின் காவல்துறை அணிகள் இந்த போட்டிகளில் பங்கேற்கின்றன.


வீடியோவிற்கு AED 10,000 வரை பரிசு உண்டு. 2-வது மற்றும் 3-வது இடங்களுக்கும் பரிசுகள் அறிவிக்கப்படும். துபாயில் வசிக்கும் அனைத்து குடியிருப்பாளர்கள் மற்றும் மாணவர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம்.

எப்படி பங்கேற்பது?

இது குறித்த விரிவான விதிமுறைகளை துபாய்  காவல்துறை விரைவில் அறிவிக்கும். பதிவு செய்த வீடியோவை பிப். 17ஆம் தேதிக்குள் துபாய் காவல்துறை இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

போட்டிகள் அனைத்தும் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் 11-ந் தேதி வரை அல் ருவய்யா மைதானத்தில் நடக்க உள்ளது. இதனை மக்கள் முன்பதிவு செய்து கொண்டு பார்வையிடலாம்.

போட்டியின் பின்னணி

இந்த SWAT Challenge என்பது உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அதிரடிப் படை வீரர்கள் (SWAT Teams) கலந்து கொள்ளும் ஒரு போட்டியாகும். கடந்த ஆண்டு இது கின்னஸ் உலக சாதனையை படைத்தது.

மக்களுடனான தொடர்பை வலுப்படுத்தவும், மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கவும் துபாய் காவல்துறை இந்த ‘வீடியோ அவார்ட்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.