ஏலத்தை மிரளவைத்த பருந்து முதல் திருடப்பட்ட வைரத்தை 8 மணிநேரத்தில் மீட்பு வரை; இந்த வாரம் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்!

கடத்தல் கும்பலால் சிதைந்த இளைஞரின் கனவு துபாய் காவல்துறையின் உதவியுடன் மீட்பு!

 ஐரோப்பாவில் கால்பந்து வீரராக வேண்டும் என்ற கனவுடன் ஆப்பிரிக்காவில் வசித்து வந்த ஒருவர் ஆட்கடத்தல் கும்பலிடம் மாட்டிக் கொண்டுள்ளார். அவர் அங்கிருந்து தப்பித்து தனது நண்பரின் உதவியுடன் துபாய் வந்துள்ளார்.

இங்கு தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக அவர் வேலை செய்த நிலையில் நிறுவனத்தின் மேலாளர் பரிந்துரையின் பேரில், துபாய் காவல்துறையால் தொடங்கப்பட்ட  ‘மனித கடத்தல் எதிர்ப்பு டிப்ளமோ’ படிப்பில் சேர்ந்து சான்றிதழ் பெற்றுள்ளார்.

தனது கடந்த காலத்தின் வலிகளுக்கு மத்தியில், S.G. தனது டிப்ளமோ படிப்பில்  நிபுணத்துவம் பெற்று, தனது ஆய்வுக்காக, “மனித கடத்தல் குற்றங்களை தடுப்பதற்கான எல்லைக் கட்டுப்பாட்டு வழிமுறைகள்” என்ற தலைப்பில் ஒரு ஆழமான ஆய்வறிக்கையை அவர் சமர்ப்பித்து சாதனை புரிந்துள்ளார்.

வேற்றுமையில் ஒற்றுமை காணும் அமீரக ஆட்சியாளர்கள்!

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக ஆகஸ்ட் 14ஆம் தேதி அமீரகம் வந்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகஸ்ட் 16 அன்று அபுதாபியில் உள்ள BAPS கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்.

கோயிலின் குருவிடம் “இஸ்லாமிய நாட்டில் கோயில் எப்படி அமைக்கப்பட்டது” என்று கேட்க,  அவர் “இங்குள்ள ஆட்சியாளர்களின் முயற்சியால் சாத்தியமானது” என தெரிவித்தார்.

இது குறித்து அண்ணாமலை தனது X பதிவில், “அபுதாபியில் உள்ள பிரம்மாண்டமான BAPS இந்து கோயிலுக்குச் சென்ற பிறகு நான் தெய்வீக உணர்வைப் பெற்றேன். இது அமைதி, ஆன்மீகம் மற்றும் ஒற்றுமையின் இருப்பிடம்.

இந்த பழைமையான நம்பிக்கையின் சின்னத்தை உருவாக்குவதில் தொலைநோக்கு பார்வையுடன், அர்ப்பணிப்புடன் செயல்பட்ட பூஜ்ய பிரம்மவிஹாரி சுவாமி அவர்களுக்கும், BAPS குழுவினருக்கும் எனது நன்றிகள். அமீரகம் மற்றும் இந்தியா இடையே நல்லிணக்கத்தின் பாலமாக BAPS கோவில் திகழ்கிறது. 

கோயிலின்  தெய்வீக அனுபவத்தை உணர்ந்ததில் நான் பெருமையடைகிறேன், ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன்”. என்று குறிப்பிட்டுள்ளார்.

திருடப்பட்ட இளஞ்சிவப்பு வைரத்தை 8 மணி நேரத்தில் மீட்ட துபாய் காவல்துறை!

துபாயில் 25 மில்லியன் டாலர் மதிப்புள்ள அரிய வகை இளஞ்சிவப்பு வைரத்தை (Pink Diamond) கொள்ளையடித்த 3 ஆசிய நாட்டவர்களை துபாய் காவல்துறை 8 மணி நேரத்தில் அதிரடியாக கைது செய்துள்ளது.

இளஞ்சிவப்பு வைரத்தை வாங்க தங்களிடம் ஒரு  பெரும் பணக்கார வாடிக்கையாளர் இருப்பதாகத் தெரிவித்து வியாபாரியிடம் இருந்து இந்த வைரத்தை அவர்கள் திருடியுள்ளனர். காவல்துறைக்குத் புகார் தெரிவிக்கப்பட்டதும் CCTV காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை 8 மணி நேரத்தில் கைது செய்து வைரத்தை மீட்டது துபாய் காவல்துறை.

DXB-யில் வரிசையில் நிற்க தேவையில்லை!

உலகின் முதல் முறையாக துபாய் விமான நிலையத்தில் AI மூலம் இயங்கும் பயணிகள் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரே நேரத்தில் 10 பயணிகள் தங்களது ஆவணங்களைக் காட்டாமலேயே AI அவற்றை சரிபார்த்துச் செல்ல அனுமதிக்கும்.

துபாய் விமான நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த AI பயணிகள் வழித்தடத்திற்கு Red Carpet என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் பாதுகாப்பை மேம்படுத்தும் அதே வேளையில் விமான நிலைய செயலாக்கத் திறனை இரட்டிப்பாக்கும்.

அபுதாபில் ஏலத்தை மிரளவைத்த வெள்ளை பருந்து!

அபுதாபியின் ADIHEX மையத்தில் நடந்த ஏலத்தில் அரிய வகை ‘ப்யூர் கர்மௌஷா’ என்ற பருந்து AED 350,000-க்கு ஏலம் போனது. கத்தார் நாட்டை சேர்ந்த ஹசன் அல் குபைசி என்பவர் இந்தப் பருந்தை வாங்கினார். 

ADIHEX 2025 இரவு நேரத்தில் நடைபெற்றதால் ஏல ஏற்பாட்டாளர்களால் இந்தப் பருந்துக்கு “the bride of the night” என்று செல்லப்பெயர் வைக்கப்பட்டது. 

பொதுவாக ‘ப்யூர் கர்மௌஷா’ பருந்துகள் இனப்பெருக்கத்தில் சிறந்து விளங்கும் பருந்து இனம் என கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த ஏலத்தில் விற்கப்பட்ட பருந்து 2024 – 2025ஆம் ஆண்டுக்கான பால்கன் இனப்பெருக்கத்திற்கான ஜனாதிபதி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

TAGGED: