DXB-யில் இலவச ஐஸ்கிரீம் முதல் மிட்டே பிரேக் வரை; அமீரகத்தில் இந்த வாரம் நடைபெற்ற முக்கிய அறிவிப்புகள்!

இந்த வாரம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் மற்றும் அறிவிப்புகளை இத்தொகுப்பில் காணலாம்.

பயணிகளுக்கு இலவச ஐஸ்கிரீம்!

ஜூன் 6 முதல் ஜூலை 20 வரை வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் துபாய் விமான நிலையத்தில் (DXB) இருந்து புறப்படும் பயணிகளுக்கு மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை இலவச ஐஸ்கிரீம் மற்றும் சர்பெட் (sorbet)  வழங்குவதாக எமிரேட்ஸ் அறிவித்துள்ளது.

ஈத் அல் அதா விடுமுறையை முன்னிட்டு இந்த சிறப்பு அறிவிப்பை எமிரேட்ஸ் வெளியிட்டுள்ளது. இதற்காக டெரிமினல் 3-ல் நான்கு ஐஸ்கிரீம் வண்டிகள் நிறுத்தப்படுகிறது.

குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே இலவச ஐஸ்கிரீம் வழங்கப்படும்.

தனியார் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

துபாயில் ஜூன் 30 ஆம் தேதி முதல் தனியார் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கும் என்றும், ஆகஸ்ட் 25 அன்று வகுப்புகள் மீண்டும் ஆரம்பிக்கும் என்றும் KHDA அறிவித்துள்ளது. 

 2025-26 கல்வியாண்டிற்கான அட்டவணையை கல்வி அமைச்சகத்தின் (MoE) அறிவிப்பின் கீழ் அறிவு மற்றும் மனித மேம்பாட்டு ஆணையம் (KHDA) வெளியிட்டுள்ளது. 

அதன் படி குளிர்கால விடுமுறை  டிசம்பர் 15, 2025 முதல்  ஜனவரி 5, 2026 வரை விடப்படுகிறது. வசந்த கால விடுமுறை மார்ச் 23, 2026 முதல்  ஏப்ரல் 13, 2026 வரை விடப்படுகிறது. அமைச்சக பாடத்திட்டத்தை செயல்படுத்தும் துபாயின் அனைத்து தனியார் பள்ளிகளிலும் குறைந்தபட்சம் 182 பயிற்றுவிப்பு நாட்கள் இருக்கும்.

தொழிலாளர்களுக்கு மதிய இடைவேளை!

தொழிலாளர்கள் நலனைக் கருத்தில் கொண்டு, அமீரகத்தில் ஜூன் 15  முதல் செப்.15 வரை,  மதியம் 12.30 மணி முதல் பிற்பகல்  3 மணி  வரை மதிய இடைவேளை நேரமாக  மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த மிட்டே பிரேக் (Midday break) தொழிலாளர்களை கோடை வெப்பத்திலிருந்து பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும். இந்த விதிமுறை மீறப்படும் பட்சத்தில் ஒவ்வொரு ஊழியருக்கும் AED 5,000 முதல் AED 50,000 வரை அபராதம் விதிக்கப்படும் என Mohre தெரிவித்துள்ளது.

மேலும், நிறுவனங்கள் நிழல் இடம், விசிறிகள், குடிநீர், எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் முதலுதவி பெட்டிகளை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. சில அவசர பணிகள் மற்றும் தொழில்நுட்ப காரணங்களால் சில பணிகள் விதிமுறையிலிருந்து விலக்கப்படலாம்.

மீனவர்களுக்கு AED 5 மில்லியன் மானியம்

ஈத் அல்-அதாவை முன்னிட்டு அஜ்மான் ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் ஹுமைத் பின் ரஷித் அல் நுஐமி மீனவர்களுக்கு AED 5 மில்லியன் நிதி மானியத்தை  வழங்க உத்தரவிட்டுள்ளார்.

அஜ்மான் மீனவர் சங்கத்துடன் இணைந்த மீனவர்களுக்கு இந்த நிதி மானியத்தை வழங்க உத்தரவிட்டார்.  அஜ்மான் இளவரசரின் அலுவலகத் தலைவர் மற்றும் அஜ்மான் மீனவர்கள் சங்கத்தின் தலைவரான அக்மத் இப்ராஹிம் ரஷித் அல் கம்லாசி கூறியதாவது, “இந்த மதிப்பளிப்பு, ஒரு முக்கியமான மதவிழாவை ஒட்டி வழங்கப்பட்டு, மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு மகிழ்ச்சியை வழங்கியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.