இந்த வாரத்தில் அமீரகத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் மற்றும் முக்கிய அறிவிப்புகளை இத்தொகுப்பில் காணலாம்.
UAE எக்ஸ்சேஞ்ச் மெட்ரோ பெயர் மாற்றம்!
UAE எக்ஸ்சேஞ்ச் மெட்ரோ நிலையம் “லைஃப் பார்மசி மெட்ரோ நிலையம்” என பெயர் மாற்றப்பட்டதாக துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) மே 5ஆம் தேதி அறிவித்தது.
இந்த நிலையத்தின் பெயரமைப்பிற்கு லைஃப் பார்மசியிடம் 10 ஆண்டுகளுக்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் GGICO மெட்ரோ நிலையம் அல் கர்ஹூத் மெட்ரோ நிலையம் என மாற்றப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
அபுதாபிக்கு வருகிறது Disney Land:
The Walt Disney Company மற்றும் Miral, யாஸ் தீவில் புதிய டிஸ்னி தீம் பார்க் மற்றும் ரிசார்ட் அமைப்பதற்கான திட்டங்களை அறிவித்துள்ளன. இது டிஸ்னியின் உலகளாவிய ஏழாவது தீம் பார்க் ஆகும். மத்திய கிழக்கில் நிறுவப்படும் முதல் டிஸ்னி பூங்காவாகும். டிஸ்னியின் பிரபலமான கதைகள், கதாபாத்திரங்கள், அபுதாபியின் பண்பாடு, அழகான கடலோரங்கள் மற்றும் கட்டிடக்கலை ஆகியவற்றை இணைத்து இந்த ரிசார்ட் உருவாக்கப்படும். இந்த கடலோர ரிசார்ட், யாஸ் தீவில் அமைக்கப்படுகிறது. யாஸ் தீவின் 15 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் அபுதாபி கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை தலைவர் முகமது அல் முபாரக் இதனை அறிவித்தார்.
புர்ஜுமான் மாலில் ஸ்மார்ட் பார்க்கிங் முறை!
துபாயில் உள்ள புர்ஜுமான் மாலில் செவ்வாயன்று அதன் புதிய ஸ்மார்ட் பார்க்கிங் சிஸ்டம் செயல்பாட்டுக்கு வந்ததாக அறிவித்தது. தொந்தரவு இல்லாத, திறமையான மற்றும் தடையற்ற பார்க்கிங் மூலம் மாலுக்கு வருகை தரும் மக்களின் அனுபவத்தை மேலும் ஒரு படி உயர்த்தலாம் என்று கூறப்படுகிறது.
மேம்படுத்தப்பட்ட பார்க்கிங் வசதி நெரிசலைக் குறைக்கிறது. வாகன ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் வாடிக்கையாளர்கள் எளிதாக பார்க்கிங் கண்டுபிடிக்க உதவுகிறது என்று மால் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. முன்னர் AED 250 இருந்த இரவு பார்க்கிங் அபராதம் இப்போது AED 350 ஆக உயர்ந்துள்ளது. தவறாக பார்க்கிங் செய்யப்பட்டால் AED 250 அபராதம் விதிக்கப்படும்.
ஷார்ஜாவில் இலவச மோர்!
மதுரை பிரியாணி ரெஸ்டாரண்ட், தொடர்ந்து 2ஆம் ஆண்டாக மக்களுக்கு இலவச மோர் ஏற்பாடு செய்துள்ளது. மே 04 ஆம் தேதி முதல் தினமும் காலை 11 மணி முதல் மதியம் 03 மணி வரை இந்த இலவச மோர் வழங்கப்படவுள்ளது.
இந்த முயற்சி கோடை இறுதி வரை செயல்பாட்டில் இருக்கும்.
உடலை குளிர்விக்கவும், சோர்வை தணிக்கவும் உதவும் மோர், வெப்பத்தில் வேலை செய்பவர்களுக்கு பெரிய நிவாரணமாக இருக்கும் என உரிமையாளர் பாபு முருகன் கூறினார். கடந்த ஆண்டின் சிறந்த வரவேற்பு காரணமாக, இந்த நலத்திட்டம் இம்முறையும் தொடங்கப்பட்டுள்ளது.
அக்வாரியத்தில் நீர்மூழ்கி ரைடு!
உலகில் முதல்முறையாக அபுதாபி SeaWorld அக்வாரியத்தில் நீர் மூழ்கி ரைடு அனுபவம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரைடில் 8 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பங்கேற்கலாம்.
20 மீ. ஆழத்தில், சுமார் 45 நிமிடங்கள் அக்வாரியத்தில் உள்ள 68,000-க்கும் மேற்பட்ட கடல் உயிரினங்களை சுற்றி பார்க்கலாம். டிக்கெட் கட்டணம் AED 1,295-ல் இருந்து துவங்குகிறது.
