பனிமூட்டம் & பலத்த காற்று வீசும்; அமீரகத்தின் இந்த வார வானிலை அறிக்கை!

தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த வாரம் முழுவதும் அமீரகத்தில் வெப்பநிலை குறைவதுடன், பனிமூட்டம் மற்றும் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது.

இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நாட்டின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் மேகங்கள் உருவாக வாய்ப்புள்ளது. இன்று இரவு மற்றும் நாளை (செவ்வாய்) அதிகாலை நேரங்களில் கடலோர மற்றும் நாட்டின் உட்பகுதியில் ஈரப்பதம் அதிகரித்து காணப்படும். இதனால் பனிமூட்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. காற்றானது லேசானது முதல் மிதமான வேகத்தில் வீசும்.  அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடலில் அலைகள் சாதாரணமாக இருக்கும்.

ஜன.13 செவ்வாய்க்கிழமை: 

திங்கட்கிழமை போலவே வானம்  மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை நேரங்களில் மூடுபனி ஏற்பட வாய்ப்புள்ளது. காற்று தென்கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் வீசும். அவ்வப்போது காற்றின் வேகம் அதிகரித்து, மணிக்கு 35 கி.மீ வேகம் வரை செல்லக்கூடும். கடல் அலைகள் பெரிய சீற்றம் இன்றி சாதாரணமாகவே இருக்கும்.

ஜன. 14 புதன்கிழமை

இரவு நேரத்தில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும், குறிப்பாக நாட்டின் மேற்குப் பகுதிகளில் அதிகாலை வேளையில் மூடுபனி உருவாக வாய்ப்புள்ளது. காற்றின் திசை தென்கிழக்கிலிருந்து வடமேற்கு திசைக்கு மாறும். காற்றின் வேகம் அவ்வப்போது அதிகரித்து, மணிக்கு 40 கி.மீ வேகம் வரை வீசக்கூடும். அரேபிய வளைகுடா பகுதியில் கடல் அலைகளின் சீற்றம் மெல்ல அதிகரித்து, வியாழக்கிழமை அதிகாலைக்குள் கடல் கொந்தளிப்பாக மாறக்கூடும்.

ஜன.15 வியாழக்கிழமை  

காற்று பலமாக வீசும். காற்றின் வேகம் மணிக்கு 50 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும். இதனால் மணல் மற்றும் தூசி பறக்கக்கூடும். குறிப்பாக கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். அரேபிய வளைகுடாவில் அலைகள் சீற்றமாக எழும்.  ஓமன் கடலிலும் அலைகள் கொந்தளிப்பாக இருக்கும்.

ஜன.16 வெள்ளிக்கிழமை

குளிர்ச்சியான வெப்பநிலை நிலவும். வடமேற்கு திசையில் பலமான காற்று தொடர்ந்து வீசும்.  காற்றின் வேகம் மணிக்கு 55 கி.மீ வரை எட்டக்கூடும். கடலலைகள்  மிகக் கொந்தளிப்பாக காணப்படும். அரேபிய வளைகுடா கடல்  மிகக் கொந்தளிப்பாக காணப்படும். ஓமன் கடல் சீற்றத்துடன்  காணப்படும்.

அதிகாலையில் நிலவும் பனிமூட்டம் காரணமாக சாலைகளில் பார்வைத்திறன் குறையக்கூடும். எனவே, வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என தேசிய வானிலை மையம் அறிவித்துள்ளது. 

கடந்த வாரம் ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மூடுபனி மற்றும் ஆங்காங்கே லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

TAGGED: