ஏர் இந்தியா விமான பயணிகள் 5 மணிநேரம் தவிப்பு!
ஜூன் 13 அன்று துபாயிலிருந்து ஜெய்ப்பூர் புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 5 மணிநேரம் தாமதமாக புறப்பட்டது. இதற்கு இடைப்பட்ட நேரத்தில் ஏசி செயல்படாமல் பயணிகள் அவதிக்கு ஆளாகினர்.
விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான நிலைய ஓடு பாதையில் நின்றிருந்த நேரத்தில் ஏசி, தண்ணீர் மற்றும் உணவு இல்லாமல் இருந்ததாகவும், ஊழியர்களிடமிருந்து எந்த உதவியும் இல்லை என்றும் பயணிகள் சமூக வலைத்தளங்களில் தெரிவித்தனர்.
கண்டெண்ட் கிரியேட்டரான ஆர்ஜூ சேத்தி இது தொடர்பான காணொளியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ஏர் இந்தியாவை சாடியுள்ளார்.
ஜூன் 13 ஆம் தேதி இரவு 7.25 மணிக்கு துபாயிலிருந்து 150 பயணிகளுடன் புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானம், மறுநாள் 12:44 AM மணியளவில் புறப்பட்டது.
ஹிஜ்ரி புத்தாண்டு விடுமுறை!
ஹிஜ்ரி புத்தாண்டை முன்னிட்டு ஜூன் 27 அன்று அமீரகத்தின் பொதுத்துறை ஊழியர்களுக்கு விடுமுறை என அமீரக அரசு அறிவித்துள்ளது.
அதே போல் தனியார் துறை ஊழியர்களுக்கும் ஜூன் 27-ஆம் தேதி விடுமுறை என மனிதவளம் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் (MoHRE) அறிவித்துள்ளது
இந்த விடுமுறை மூலமாக, ஊழியர்கள் 3 நாட்கள் விடுமுறையை பெறுவர். வார இறுதிக்குப் பின், ஜூன் 30, திங்கட்கிழமை முதல் வழக்கமான வேலை நேரம் மீண்டும் தொடங்கும்.
வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை!
கோடை காலத்தை முன்னிட்டு ஜூலை 1 முதல் செப்டம்பர் 12 வரை அரசு ஊழியர்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு 4 நாட்கள் பணி முறையை துபாய் அரசாங்க மனிதவளத் துறை (DGHR) அறிவித்துள்ளது.
முதல் குழுவில் திங்கள் முதல் வியாழன் வரை 8 மணி நேரம் வேலை நேரமாக இருக்கும். வெள்ளி, சனி, ஞாயிறு விடுமுறை அளிக்கப்படும்.
2ஆம் குழுவில் திங்கள் முதல் வியாழன் வரை 7 மணி நேரம் வேலை நேரமாக இருக்கும். வெள்ளி 4.5 மணி நேரம் வேலை நேரமாக இருக்கும். சனி, ஞாயிறு விடுமுறை அளிக்கப்படும் என முறையை துபாய் அரசாங்க மனிதவளத் துறை (DGHR) அறிவித்துள்ளது.
மாணவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் அமீரக மருத்துவர்
அகமதாபாத்தில் ஜூன் 12 அன்று ஏர் இந்தியா விமானம் மருத்துவ கல்லூரி விடுதி மேல் விழுந்ததில் உயிரிழந்த 4 மருத்துவ மாணவர்களுக்கு தலா ரூ.1 கோடியும், படுகாயம் அடைந்தவர்கள் மற்றும் குடும்பத்தினரை இழந்த மாணவர்களுக்கு தலா ரூ.20 லட்சம் என மொத்தம் ரூ.6 கோடி (AED 2.5 மில்லியன்) நிதியுதவி வழங்குவதாக கேரளாவை சேர்ந்த அமீரக மருத்துவர் ஷம்ஷீர் வயலில் கூறியுள்ளார்.
மருத்துவர் ஷம்ஷீர் வயலில் கூறுகையில்,“விபத்தின் விளைவுகளை கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்ததாகவும், பயணிகள் விமானம் அங்கு விழும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்” என்றார்.
ஈரானுக்கு ஆதரவு தெரிவித்த அமீரக அதிபர்
இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நிலவி வரும் நிலையில், ஜூன் 16ஆம் அன்று ஈரானிய பிரதமரை அமீரக பிரதமர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இஸ்ரேலுடனான போரின் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் ஈரான் மற்றும் அதன் மக்களுடனான தங்கள் ஆதரவை அமீரக அதிபர் வெளிப்படுத்தினார்.
மேலும் இந்த தொலைபேசி உரையாடலில் போது பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அமீரக அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் அவர்கள் விவாதித்தனர்.
