இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் முதல் Parkin-ல் புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டது வரை இந்த வாரம் நடைபெற்ற முக்கிய அறிவிப்புகள்!

அமீரகத்தில் இந்த வாரம் முழுக்க நடைபெற்ற நிகழ்வுகள், வெளியான முக்கிய அறிவிப்புகள் ஆகியவற்றை இத்தொகுப்பில் காணலாம்.

சுகாதார கேடு விளைவிக்கும் நபர்கள் மீது புகாரளிக்கலாம்! 

சுகாதாரத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் துபாயில் பொது இடங்களில் குப்பை கொட்டுதல், எச்சில் துப்புதல் வாகனங்களை சுத்தம் செய்தல் உள்ளிட்ட 8 நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க “Eltizam” என்ற புதிய செயலி துபாய் நகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. 

 உலகின் மிக தூய்மையான நகரங்களில் ஒன்றான துபாயை மேலும் வலுப்படுத்தும் முயற்சியில், பொது சுகாதார விதிகளை மீறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க “Eltizam” செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

பொது இடங்களில் குப்பை கொட்டுதல், எச்சில் துப்புதல்,  போஸ்டர் ஒட்டுதல் உள்ளிட்ட 8 விதிமீறல்கள் குறித்து புகைப்பட ஆதாரத்துடன் “Eltizam” செயலில் புகார் தெரிவிக்கலாம்.

இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள்!

2025ஆம் ஆண்டில் முதல் 6 மாதங்களில் துபாயில் 3,600க்கும் மேற்பட்டோர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக முகமது பின் ரஷீத் இஸ்லாமிய கலாச்சார மையம் தெரிவித்துள்ளது.

 இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் தொண்டு நடவடிக்கைகள் துறையின் (IACAD) கீழ் இயங்கும் முகமது பின் ரஷீத் இஸ்லாமிய கலாச்சார மையம் மூலமாக நடப்பாண்டு முதல் ஆறு மாதங்களில் துபாயில் 3,600க்கும் மேற்பட்டோர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர். 

அதே காலகட்டத்தில் முகமது பின் ரஷீத் இஸ்லாமிய கலாச்சார மையத்தின் கல்வித் திட்டங்களில் 1,300 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

கருப்பு புள்ளிகளை குறைக்க வாய்ப்பு!

அமீரக உள்துறை அமைச்சகம், சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் “விபத்தில்லா நாள்” என்ற சிறப்பு முயற்சியை அறிவித்துள்ளது. இந்த திட்டம், புதிய கல்வியாண்டின் தொடக்கமாகும் ஆகஸ்ட் 25, 2025 அன்று நடைபெறவுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், ஓட்டுநர்கள் பாதுகாப்பான ஓட்டுநர் நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டு ஆகஸ்ட் 25 அன்று விதிகளை பின்பற்றி வாகனங்களை இயக்கினால், அவர்களின் கருப்பு புள்ளிகளில் (Black Points) இருந்து, 4 புள்ளிகள் குறைக்கப்படும்.

சீட் பெல்ட்களை அணிவது, வேக வரம்புகளை மீறாமல் இருப்பது, பாதுகாப்பான தூரத்தை பராமரிப்பது, பாதசாரிகளின் முன்னுரிமை வழங்குவது போன்ற போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பவர்களுக்கு 4 கருப்பு புள்ளிகள் கழிக்கப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Parkin-ல் இரண்டு புதிய வசதி அறிமுகம்!

துபாயில் உள்ள Parkin பகுதிகளில் நிறுத்திய காரை அங்கேயே எரிபொருள் நிரப்பவும், காரைக் கழுவவும் பயனர்களுக்கு புதிய வசதியை CAFU நிறுவனத்துடன் இணைந்து Parkin அறிமுகப்படுத்தியுள்ளது. ஓட்டுநர்கள் SMS அல்லது WhatsApp மூலம் அனுப்பப்படும் இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் எரிபொருள் டெலிவரி அல்லது காரை கழுவுவதற்கான சேவையை கோர முடியும். 

எரிபொருள் நிலையங்கள் மற்றும் கார் கழுவும் இடங்களுக்கு தேவையற்ற பயணங்களை குறைக்கும் நோக்கில் இந்த சேவை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சேவை விரைவில் Parkin செயலியிலும் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாயில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டம்!

79வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை இந்தியத் தூதர் ஜெனரல் சதீஷ் குமார் சிவன் அவர்கள் கொடியேற்றி தொடங்கிவைத்தார். இந்த கொண்டாட்டத்தில் துபாயில் வசிக்கும் ஏராளமான இந்தியர்கள் கலந்துகொண்டனர். இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றது.

TAGGED: