வேலையில்லா திண்டாட்டம் இல்லாத நாடாக திகழும் அமீரகம்!

2024ஆம் ஆண்டில் அமீரகத்தில் தொழிலாளர்களின் எண்ணிக்கை 9.4  9.4 மில்லியனாக அதிகரித்துள்ளதாக கூட்டாட்சி போட்டித்திறன் மற்றும் புள்ளிவிவர மையம் (FCSC) தெரிவித்துள்ளது.

வேலையின்மை திண்டாட்டம் குறைவாக உள்ள நாடு:

வெளிநாடுகளில் இருந்து பலர் வேலை தேடி வரும் நாடாக அமீரகம் உள்ளது. வந்தாரை வாழ வைக்கும் அமீரகம் என்பது போல் வேலை தேடி வரும் ஒவ்வொருவரையும் ஏதோ ஒரு விதத்தில் அமீரகம் வாழ வைத்து வருகிறது.

அந்த வகையில் 2024ஆம் ஆண்டு கணக்கின்படி அமீரகத்தில் தொழிலாளர்களின் எண்ணிக்கை 9.4 மில்லியனாக அதிகரித்துள்ளதாக கூட்டாட்சி போட்டித்திறன் மற்றும் புள்ளிவிவர மையம் (FCSC) தெரிவித்துள்ளது. நாட்டில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களின் பொருளாதார பங்கேற்பு விகிதம் 81.4% ஆக உள்ளது. 

2023ஆம் ஆண்டு அமீரகத்தில் வேலையின்மை விகிதம் 2.1% ஆக இருந்த நிலையில், 2024ஆம் ஆண்டு அது 1.9% ஆக குறைந்துள்ளது. இது மிகக் குறைவான வேலையின்மை உள்ள நாடுகளில் ஒன்றாகும் என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

இது தேசிய தொழிலாளர் சந்தையின் வலிமையையும் பல்வேறு பொருளாதாரத் துறைகளில் தொடர்ச்சியான வளர்ச்சியையும் பிரதிபலிக்கிறது. 15 முதல் 24 வயதுடைய இளைஞர்கள் இடையே 2023ஆம் ஆண்டில் 6.7% ஆக இருந்த வேலையின்மை விகிதம் 2024ஆம் ஆண்டில் 5.2% ஆகக் குறைந்துள்ளது.

முன்னிலை வகிக்கும் தனியார் துறை நிறுவனங்கள்:

அமீரகத்தில் தனியார் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் 7.8 மில்லியன் பேர் உள்ளனர். இது நாட்டின் ஊழியர்கள் விகிதத்தில் 85% ஆகும். வயது வாரியான தரவுகளின் படி 30 முதல் 39 வயது பிரிவில் உள்ளவர்கள்  3.3 மில்லியன் பேர் தனியார் துறையில் பணிபுரிகின்றனர். 

அதைத் தொடர்ந்து 25 முதல் 29 வயது பிரிவில் 1.5 மில்லியன் பேரும், 40 முதல் 44 வயது பிரிவில் 1.4 மில்லியன் பேரும் தனியார் துறையில் வேலை செய்கின்றனர். இதில் 96% பேர் ஊதியத்திற்கு வேலை செய்பவர்கள். அதனை தொடர்ந்து 3% பேர் முதலாளிகள் அல்லது சுய தொழில் செய்பவர்களாக உள்ளனர். 

தொழில் வளர்ச்சியில் ஆண்களின் பங்களிப்பு:

அமீரகத்தில் உள்ள உள்ளூர் புள்ளிவிவர மையங்களுடன் இணைந்து FCSC நடத்திய கணக்கெடுப்பில் நாட்டில் 7.5 மில்லியன் ஆண் ஊழியர்கள் (81%) உள்ளனர். பெண் ஊழியர்கள் 1.7 மில்லியன் (19%) பேர் உள்ளனர். இதில் தனியார் துறையில் பணிபுரியும் ஆண்கள் 6.7 மில்லியன் பேர் உள்ளனர்.

அதுவே தனியார் துறையில் 1 மில்லியன் பெண் ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். இவர்களில் ஊதியத்திற்கு வேலை செய்யும் ஆண்கள் 7.2 மில்லியன் பேரும், பெண்கள் 1.6 மில்லியன் பேரும் உள்ளனர். இதற்கிடையில், தொழிலதிபர்கள் அல்லது சுயதொழில் செய்பவர்களின் மொத்த எண்ணிக்கையான 343,700 பேரில் 301,900 ஆண்கள் மற்றும் 41,700 பெண்கள் அடங்குவர்.