பிப்ரவரி 10 முதல், ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்ளும் யாத்ரீகர்கள் இனி புறப்படுவதற்கு முன் மூளைக்காய்ச்சல் தடுப்பூசியைப் பெற வேண்டும் என்று சவூதி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. யாத்ரீகர்கள் சவூதி அரேபியாவிற்கு வருவதற்கு குறைந்தது 10 நாட்களுக்கு முன்னர் தடுப்பூசியைப் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசி நிபந்தனைகள் என்ன?
சவூதி அரேபியாவின் சுகாதார விதிமுறைகளின் படி, அனைத்து யாத்ரீகர்களும் Meningococcal ACYWX (பாலிசாக்கரைடு கான்ஜுகேட்) தடுப்பூசி அல்லது Meningococcal quadrivalent (ACYW-135) பாலிசாக்கரைடு தடுப்பூசியைப் பெற்றிருக்க வேண்டும்.
ஒரு வயதிற்கு மேற்பட்ட அனைத்து நாட்டு யாத்ரீகர்களுக்கும் இது பொருந்தும், பயணிகளின் சொந்த நாட்டில் உள்ள சுகாதார அதிகாரிகளிடம் இருந்து பெயர், வகை மற்றும் செலுத்தப்பட்ட தேதி ஆகியவை இடம் பெற்ற சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். தடுப்பூசி சான்றிதழ் மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வைத்திருக்க வேண்டும்.
மூளைக்காய்ச்சல் அறிகுறிகள் பற்றி WHO கூறியது என்ன?
உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, மூளைக்காய்ச்சல் என்பது மூளையை சுற்றியுள்ள திசுக்களின் வீக்கம் ஆகும். இது பொதுவாக ஒரு தொற்றுநோய் எனப்படுகிறது பாக்டீரியா, வைரஸ்கள், பூஞ்சைகள் அல்லது ஒட்டுண்ணிகளால் இந்த நோய் பரவலாம் என்றும் கூறப்படுகிறது.
அறிகுறிகள்
- கழுத்து விறைப்பு
- காய்ச்சல்
- குழப்பம் அல்லது மாற்றப்பட்ட மன நிலை
- தலைவலி
- குமட்டல் மற்றும் வாந்தி
