இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI – National Payments Corporation of India) யுபிஐ (UPI) பரிவர்த்தனைகளுக்கான தினசரி வரம்புகளை செப்டம்பர் 15, 2025 முதல் உயர்த்தியுள்ளது. இது அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்களுக்கு பெரிய முதலீடுகள், காப்பீட்டுத் தொகை, இஎம்ஐ (EMI) தொகைகளை செலுத்துவதற்கு மிகவும் உதவியாக இருக்கும். குறிப்பாக இந்த மாற்றங்கள் பெரிய தொகைகளையும் எளிதாக செலுத்த உதவும்.
புதிய யுபிஐ (UPI) வரம்புகள் என்னென்ன?
பங்குச் சந்தை, காப்பீட்டுத் தொகை: ஒரு பரிவர்த்தனைக்கு 2 லட்ச ரூபாயில் இருந்து 5 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தினசரி வரம்பு 10 லட்ச ரூபாயாகும்.
அரசு இ-மார்க்கெட், பயண டிக்கெட்கள், கடன் மற்றும் இஎம்ஐ (EMI) திருப்பிச் செலுத்துதல்: தினசரி வரம்பு 10 லட்ச ரூபாயாகும்.
கிரெடிட் கார்டு பில்: ஒரு பரிவர்த்தனைக்கு 5 லட்ச ரூபாய். தினசரி வரம்பு 6 லட்ச ரூபாய் வரை அனுப்பலாம்.
நகை வாங்குதல்: ஒரு பரிவர்த்தனைக்கு 2 லட்ச ரூபாயாகும், தினசரி வரம்பு 6 லட்ச ரூபாயாகும்.
மருத்துவமனை, கல்வி கட்டணம்: தினசரி வரம்பு 10 லட்ச ரூபாயாகும், ஒரு பரிவர்த்தனைக்கு 5 லட்சம் ரூபாய் வரை அனுப்பலாம்.
அரசு பத்திரங்கள், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நேரடி முதலீடுகள்: தினசரி வரம்பு 10 லட்ச ரூபாயாகும்.
வளர்ச்சி பாதையில் யுபிஐ பயன்பாடு:
ஆகஸ்ட் 2025-ல் யுபிஐ (UPI) மூலம் 20 பில்லியன் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட 34% அதிகம். அதன் பண பரிவர்த்தனை மதிப்பு 24.85 ட்ரில்லியன் ரூபாயாகும். இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட 21% அதிகம்.
மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள்
யுபிஐ பரிவர்த்தனை வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், யுபிஐ அதன் பாதுகாப்பு அம்சங்களையும் பலப்படுத்தியுள்ளது. மோசடிகளைத் தடுக்க, “Collect Request” எனப்படும் அம்சத்தை NPCI அக்டோபர் 1, 2025 முதல் நீக்கியுள்ளது.
இந்த மாற்றம் உங்களுக்கு எப்படி உதவும்?
- இஎம்ஐ (EMI), பெரிய பயண முன்பதிவு (Big travel bookings), காப்பீட்டுத் தொகை ஆகியவற்றிற்கு உடனடியாக பணம் செலுத்த முடியும்.
- இந்திய வங்கி கணக்குகளுக்கு அதிக மதிப்புள்ள முதலீட்டுத் தொகைகளை மாற்றுவது இப்போது எளிதாக்கப்பட்டுள்ளது.
- தனிநபர் பரிவர்த்தனைகளுக்கான தினசரி வரம்பு 1 லட்சம் ரூபாயாக உள்ளது என்பதால் உங்கள் தனிப்பட்ட பரிவர்த்தனைகள் பாதுகாப்பாக இருக்கும்.
- இந்த புதிய மாற்றங்களால் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா இடையே நிதி மேலாண்மை செய்பவர்களுக்கு யுபிஐ ஒரு சிறந்த பண பரிமாற்று கருவியாக மாற்றியுள்ளது.
