இ-ஸ்கூட்டர்கள் சுற்றுச்சூழலுக்கு நட்பானதாக இருந்தாலும், அதனை பயன்படுத்தும் சில பயனாளர்களின் மோசமான அணுகுமுறையானது குடியிருப்பு பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு ஆபத்தானதாக அமைவதுடன், இயக்குபவர்களுக்கும் மோசமான சில விபத்துகளும் ஏற்படுவதுண்டு.
சமீபத்தில் காவல்துறை வெளியிட்ட ஓர் அறிக்கையில் இது போன்ற இ-ஸ்கூட்டர்கள் மற்றும் இ-பைக்குகளின் மூலம், துபாயில் இவ்வாண்டின் முதல் பாதியில் மட்டும் 25 பேர் காயமடைந்துள்ளதாகவும், 4 பேர் மரணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், பல்வேறு புகார்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருக்கின்றன.
இதன் காரணமாக துபாயின் பிரதான சுற்றுலாத் தலமான ஜுமேரா பீச் ரெசிடென்ஸ் (JBR) பகுதியில் இ-ஸ்கூட்டர்கள் மற்றும் இ-பைக்குகளின் பயன்பாட்டுக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது, அடுத்துள்ள பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இது குறித்து துபாய் சமூக மேலாண்மைக் குழு வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, துபாயில் குடும்பத்தோடு சேர்ந்து பொழுதை போக்கும் முக்கிய சுற்றுலாத் தலமாகவும், நடைப்பயிற்சி செய்ய ஏற்ற இடமாகவும் ஜுமேரா பீச் ரெசிடென்ஸ் (JBR) விளங்குகிறது. அங்கு பாதுகாப்பு நடைமுறைகளை அதிகப்படுத்தி, சுற்றுலாப் பயணிகள் மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு மேலும் சௌகரியமான இடமாக மாற்ற இந்தத் தடை விதிக்கப்படுவதாக அதில் விவரிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, இந்த தடை குறித்தான அறிவிப்பு பலகை ஒன்றும் அந்த பகுதியில் நிறுவப்பட்டுள்ளது.
