கேரம் பால் ஸ்பெஷலிஸ்ட் அஷ்வின் கடந்து வந்த பாதை!

ஓய்வை அறிவித்த அஷ்வின்

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுதாக அறிவித்து இருந்தது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி இருந்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபியின்  3-வது டெஸ்ட் போட்டி இன்று டிராவில் முடிந்த போது, அஷ்வின் தனது ஓய்வை கேப்டன் ரோகித்துடன் இணைந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

ஓய்வு குறித்து எமோஷனலாக பேசிய அஷ்வின்

அப்போது பேசிய அஷ்வின், ”இந்திய வீரராக இதுதான் எனக்கு கடைசி நாள், ஒரு கிரிக்கெட் வீரராக இன்னும் என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்றாலும், அதனை கிளப் லெவல் கிரிக்கெட்டில் வெளிப்படுத்துவேன். 

அதனால், சர்வதேச கிரிக்கெட்டில் இதுதான் என் கடைசி நாளாகும் என்றார். மேலும், இந்திய அணிக்காக விளையாடிய நாட்கள் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருந்திருக்கிறது. 

இந்த நாளில் ஏராளமானோருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

ஆனால் இந்த நேரத்தில் பிசிசிஐ, கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, அஜிங்கியா ரஹானே மற்றும் புஜாரா உள்ளிட்டோருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

ஏனென்றால் இவர்கள் தான் நான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்த கேட்ச் பிடித்து உதவி இருக்கிறார்கள். 

ஓய்வு அறிவிப்புக்காக அதிக நேரம் எடுத்து கொள்ள விரும்பவில்லை. கொஞ்சம் எமோஷனலாக இருக்கிறேன்.

அதனால் எந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் மனநிலையில் இல்லை. என்னை பற்றி நல்ல விஷயங்கள் மற்றும் கடுமையான விமர்சனங்களை தொடர்ந்து எழுதிய பத்திரிகையாளர்களுக்கும் நன்றி என எமோஷனாலாக பேசியிருந்தார். 

இந்திய கிரிக்கெட்டிற்கு அறிமுகான அஷ்வின்

  • இந்திய அணிக்காக ரவிச்சந்திரன் அஷ்வின் கடந்த 2010 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஹராரே ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார்.
  • 2011 ஆம் ஆண்டில் தில்லியில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.

டிசம்பர் 22 ஆம் தேதி 2010 ஆம் ஆண்டில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமாகினார்.

அஷ்வின் நம்பிக்கை வார்த்தைகள்

”சரியான நேரத்தில் சரியான பந்தை வீசினால் வரலாற்றையே மாற்ற முடியும்.

ஆதலால் சுழற்பந்து என்பது ஒரு கலை, அதை வீசும் அனைவராலும் மாஸ்டராகிவிட முடியாது”- அஸ்வினின் தெரிவித்த நம்பிக்கை வார்த்தைகள் தான் இவை.

அதன்படியே, சுழற்பந்துவீச்சில் 6 பந்துகளையும் 6 விதமாக வீசும் ஒரு அற்புதமான வீரர்.

ஒரே மாதிரியாக பெரும்பாலும் வீசியது இல்லை என்பதை கிரிக்கெட் நிபுணர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.

இடதுகை பேட்டர்களின் எதிரி

இடது கை பேட்ஸ்மேன்களின் எதிரி என்று அஷ்வினை கிரிக்கெட் வர்ணனையாளர்கள் அவ்வப்போது கூறுவதுண்டு.

அதற்கு ஏற்றது போல், இடதுகை பேட்டர்களுக்கு எதிராக அஷ்வின் 255-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அதாவது, அஷ்வின் இதுவரை வீழ்த்திய 537 டெஸ்ட் விக்கெட்டுகளில் 255-க்கும் விக்கெட்டுகள் இடதுகை பேட்டர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டவை. 

அஷ்வின் படைத்த சாதனைகள்

அஷ்வின் இதுவரை இந்திய அணிக்காக மொத்தம் 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி,  537 விக்கெட்டுகளை வீழ்த்தி, சர்வதேசப் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 2 ஆவது வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார். 

சர்வதேச வீரர்கள் பட்டியலில் 7 ஆவது இடத்திலும் உள்ளார்.  அதேபோல், டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 6 சதங்கள் உள்பட 3,506 ரன்கள் குவித்துள்ளார்.

மேலும், 116 ஒரு நாள் போட்டிகள் விளையாடிய அஸ்வின் 63 இன்னிங்ஸ் பேட்டிங் செய்து 707 ரன்கள் எடுத்துள்ளார். 

அதே சமயம் 156 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அதைப்போல 65 டி20 போட்டிகள் விளையாடிய அவர் 72 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

சர்வதேச அரங்கில் டெஸ்ட் தொடர்களில் 11 முறை  தொடர் நாயகன் விருதை பெற்ற வீரர் என்ற சாதனையை இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனுடன் பகிர்ந்துள்ளார்.

அஷ்வினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த பிரபலங்கள்

இதற்கிடையே, ஓய்வு பெற்ற அஸ்வினுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். 

ரோகிஷ் ஷர்மா

முதல் டெஸ்ட் போட்டி நடந்து முடிந்து நான் பெர்த்துக்கு வந்த போதே என்னிடம் அஸ்வின் தனது ஓய்வு முடிவை தெரிவித்துவிட்டார். 

இந்தியா இதுவரையில் பார்க்காத ஒரு மேட்ச் வின்னர் அஷ்வின் எனக் கூறியுள்ளார்.

விராட் கோலி

நான் உங்களுடன் 14 வருடங்கள் விளையாடியுள்ளேன். ஆனால் இன்று ஓய்வு பெறுவதாக நீங்கள் என்னிடம் சொன்னது என்னை உணர்ச்சிவசப்படுத்தியது.

அது இத்தனை வருடங்களாக நாம் ஒன்றாக விளையாடிய நினைவுகளை என் முன் கொண்டு வந்தது.

உங்களுடன் நான் விளையாடிய இந்த பயணத்தின் ஒவ்வொரு பகுதியையும் ரசித்தேன்.

நீங்கள் எப்போதும் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவனாக நினைவுக் கூறப்படுவீர்கள். எல்லாவற்றிற்கும் நன்றி நண்பா.

தினேஷ் கார்த்திக்

GOAT வீரர் ஓய்வு பெறுகிறார். உங்களுடன் விளையாடியதில் பெருமைப்படுகிறேன், இதுவரை தமிழ்நாட்டிலிருந்து இந்திய கிரிக்கெட் அணிக்கு விளையாடியவர்களில் மிகச்சிறந்த வீரர் நீங்கள் தான்.

சுரேஷ் ரெய்னா

கிரிக்கெட் பந்தின் மூலம் நீங்கள் செய்த அற்புதங்கள், தெளிவான சிந்தனை மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் மீதான உங்கள் அபாரமான அன்பு எப்போதும் எங்கள் இதயங்களில் நிலைத்திருக்கும் என்றார்.

ஐசிசி தலைவர் ஜெய் ஷா

பி.சி.சி.ஐ-இன் மிகப்பெரிய ‘மேட்ச் வின்னர்’ கிரிக்கெட் பந்தில் மேஜிக் செய்பவர். அவருடைய சிறந்த எதிர்காலத்திற்கு வாழ்த்துகள்.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர்

ஒரு இளம் பந்துவீச்சாளராக இருந்து, நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவானாக நீங்கள் வளர்ந்ததை பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.

அடுத்த தலைமுறை பவுலர்கள் அஷ்வினால் தான் நான் பவுலர் ஆனேன் என சொல்வார்கள் என்பது எனக்கு தெரியும். உங்களை மிஸ் செய்கிறேன் சகோதரா.

சச்சின் டெண்டுல்கர்

இந்தியாவின் சிறந்த மேட்ச் வின்னர்களில் ஒருவராக வளர்வதைப் பார்ப்பது அருமையாக உள்ளது. உங்களின் 2-வது இன்னிங்ஸுக்கு வாழ்த்துக்கள்.

மிட்செல் ஸ்டார்க்

பல ஆண்டுகளாக இந்தியாவின் வெற்றிக்கு அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். 500 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்தது ஒரு பெரிய சாதனை.

பேட் கம்மின்ஸ்

இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது, அஸ்வின் ஒரு அற்புதமான வீரர். அற்புதமான கிரிக்கெட்டர்.

பயணங்கள் முடிவதில்லை…

ஓய்வுக்கு பின்னர் அஷ்வின் அடுத்ததாக இனி அஷ்வின் உள்ளூர் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளார்.

இதனால், டிஎன்பிஎல் தொடரில் திண்டுக்கல் அணியின் பயிற்சியாளராக செயல்பட வாய்ப்புகள் உள்ளது. 

அதுமட்டுமல்லாமல், இம்முறை சிஎஸ்கே அணிக்காக விளையாட இருப்பதால், சிஎஸ்கே அணி அஸ்வினை கோச்சிங் குழுவிலும் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் இளம் வீரர்களை அடையாளப்படுத்துவதிலும், மைதானங்கள் மற்றும் பிட்ச் குறித்த அஸ்வினின் அறிவு நிச்சயம் ஐபிஎல் அணிகளுக்கு பயன்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.