ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 3 அன்று, ஐக்கிய அரபு அமீரகத்தில் தேசிய கொடி தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் நாட்டின் ஒற்றுமை மற்றும் பெருமையின் சின்னமான கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்ய வேண்டும்.
ஐக்கிய அரபு அமீரக நிறுவனத் தந்தையான மாண்புமிகு ஷேக் சையத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்கள், 1971ஆம் ஆண்டு தேசிய தினம் (ஈத் அல் எதிஹாட்) கொண்டாட்டத்தின் போது, சிவப்பு, பச்சை, வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களைக் கொண்ட நாட்டின் கொடியை முதன்முதலில் ஏற்றி வைத்தார்.
அப்துல்லா அல் மைனா என்பவரால் வடிவமைக்கப்பட்ட அமீரக கொடி, வெறும் சின்னம் மட்டுமல்ல – அது ஒற்றுமை, வரலாறு மற்றும் எமிரேட்ஸ்களை பிணைக்கும் விழுமியங்களின் பெருமைமிக்க பிரதிநிதித்துவமாகும்.
இந்தச் சிறப்பு நாளில் நீங்கள் கொடியை ஏற்றத் திட்டமிட்டிருந்தால், நினைவில் கொள்ள வேண்டிய சில விதிமுறைகள்;
செய்ய வேண்டியவை:
- கொடி உயர்தர பாலியஸ்டர் கலவையில் அச்சிடப்பட்டிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தவும். அதன் தோற்றம் மினுமினுப்பாகவோ அல்லது மங்கலாகவோ இருக்கக்கூடாது.
- கொடி தரையைத் தொட்டு விடாமல் பார்த்துக்கொள்ளவும். அது கொடிக் கம்பத்தின் அடிப்பகுதியில் இருந்து குறைந்தது 20 முதல் 25 சென்டிமீட்டர் தொலைவில் இருக்க வேண்டும். கொடிக் கம்பத்தில் கொடியைத் தவிர வேறு எதுவும் இணைக்கப்படக் கூடாது.
- கொடி எப்போதும் சுத்தமாகவும் மற்றும் இஸ்திரி செய்யப்பட்டும் இருக்க வேண்டும்.
- கொடியை ஏற்றும் ஒவ்வொரு முறையும், அது சேதமடையாமல், நிறம் மங்காமல், அல்லது கிழியாமல் இருப்பதை கவனமாகச் சரிபார்க்கவும்.
- ஏதேனும் ஒரு விழா அல்லது அதிகாரப்பூர்வ நிகழ்விற்காக கொடியை ஏற்றிய பிறகு, அதை சரியாக மடித்து வைக்க உறுதிப்படுத்தவும்.
செய்யக்கூடாதவை:
- கொடியை எந்த வகையிலும் கீழே போடவோ, அழிக்கவோ, அல்லது அவமதிக்கவோ கூடாது. கிழிப்பது, தவறாக இறக்குவது, அல்லது அவமதிப்பை வெளிப்படுத்தும் எந்தச் செயலையும் செய்யக்கூடாது. இதைச் செய்பவர்களுக்கு 25 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் AED 500,000 அபராதம் விதிக்கப்படும்.
- கொடியின் மீது நாட்டின் சின்னத்தைத் தவிர வேறு எந்த சின்னம் அல்லது லோகோவை வைக்கக்கூடாது (அதிபர் கொடிக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு).
- கொடியுடன் அலங்கார விளிம்புகள் அல்லது வேறு எந்த கூடுதல் பொருட்களையும் இணைக்கக் கூடாது.
- கொடியை எந்த வடிவத்திலோ அல்லது அளவிலோ இனிப்புகள் அல்லது கேக்குகள் போன்ற உண்ணக்கூடிய பொருட்களில் பயன்படுத்தக் கூடாது.
- கொடியின் விகிதங்கள், அளவு மற்றும் வடிவத்தை அலங்காரப் பொருட்கள், எழுத்துருக்கள் (typography) அல்லது லோகோக்கள் போன்ற குறிப்பிட்ட பயன்பாடுகளுக்குப் பொருந்தும் வகையில் மாற்றக் கூடாது.
