துபாயில் பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் உணவு கண்காட்சி; 195 நாடுகள் பங்கேற்பு!

துபாய் ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், ஜனவரி 26 துபாயில் தொடங்கிய ‘Gulfood 2026’ சர்வதேச உணவு மற்றும் பானங்கள் கண்காட்சியை நேரில் பார்வையிட்டார்.

உணவு கண்காட்சி:

துபாய் எக்ஸ்போ சிட்டியில் உள்ள துபாய் கண்காட்சி மையத்தில் Gulfood 2026  என்ற சர்வதேச உணவு மற்றும் பானங்கள் கண்காட்சி நடைபெற்றது. 

கண்காட்சியின் சிறப்பம்சங்கள்:

எக்ஸ்போ சிட்டியில் (Expo City) உள்ள துபாய் கண்காட்சி மையத்தில் (DEC) இக்கண்காட்சி நடைபெறுகிறது. இதற்காக சுமார் AED 10 பில்லியன் செலவில் கண்காட்சி மையம் விரிவாக்கப்பட்டுள்ளது.

முதன்முறையாக, இந்தக் கண்காட்சி துபாய் கண்காட்சி மையம் (DEC) மற்றும் துபாய் உலக வர்த்தக மையம் (DWTC) ஆகிய இரண்டு இடங்களில் இணையாக நடைபெறுகிறது. கடந்த ஆண்டை விட இம்முறை கண்காட்சி இரண்டு மடங்கு பெரியதாக அமைந்துள்ளது. 

இதில் 195 நாடுகளில் இருந்து சுமார் 8,500 நிறுவனங்கள் பங்கேற்றன. 1.5 மில்லியனுக்கும் அதிகமான தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. 

இதுகுறித்து துபாய் ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள், “உணவு வர்த்தகத்தை ஆதரிப்பதிலும், விநியோகச் சங்கிலியை (Supply Chain) மேம்படுத்துவதிலும் ஐக்கிய அரபு அமீரகம் உலகளவில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக மையமாக இது தொடர்ந்து விளங்கும்” என்று  தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், கண்காட்சி அரங்குகளில் உலக அளவில் புகழ்பெற்ற சமையற்கலை நிபுணர்கள் பங்கேற்று, பிரபலமான உணவு வகைகளை பார்வையாளர்கள் முன்னிலையில் நேரடியாக தயாரித்து காட்சிப்படுத்தினர். 

அவற்றை பார்வையாளர்கள் சுவைத்து பார்க்கும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. இந்த கண்காட்சியில் முன்பதிவு செய்துள்ள வர்த்தக கூட்டங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், உணவு தயாரிப்பிற்கு தேவையான நவீன கருவிகள் மற்றும் உபகரணங்களும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

மேலும், முதல் முறையாக ‘உணவு 500’ என்ற மாநாடும் நடைபெறுகிறது. இதில் உணவுத் தொழில்துறையில் உள்ள பல்வேறு சவால்கள் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படுகிறது.

TAGGED: